தமிழகத்தில் பிரதமர் மோடி!
தமிழகத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். இதற்காக காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர், காலை 10.25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி நிகழ்வுகளை முடித்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பி, பின்னர் விமானம் மூலம் கோவை செல்கிறார். பிரதமர் வருகை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா அரங்கில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து மாலை, கொடிசியா அரங்குக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் கோவை விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார் மோடி.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7 நாள் வீட்டில் தனிமை இனி கட்டாயம்!
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் இனி கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/25-02-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக