Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

`டொனேஷன் கணக்கில் எழுதவும்!’ வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 வருட சிறை; சிபிஐ வழக்கின் பின்னணி

தாது மணல் கொள்ளை!

நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் தாது மணல் ஆலைகள் செயல்பட்டு வந்தன. மணலில் இருந்து அரிய வகை தாதுகளான இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான் போன்றவற்றைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனங்கள், கொள்ளை லாபம் சம்பாதித்தன.

தாது மணல் அள்ளும் இடம்

அணு உலைக்குப்பயன்படும் தோரியம் கலந்த மோனோசைட் தாது மணல் நெல்லை மாவட்டத்தில் கிடைக்கிறது. இந்தப் பகுதியில் கிடைக்கும் மணலில் இருந்து தாதுகளைப் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் தனி நபர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வந்தனர்.

விதிமுறைகளை மீறி தாது மணல் கொள்ளையில் தனி நபர்கள் ஈடுபட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்புடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது அதனால் தனிநபர்கள் தாது மணல் அள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் தென் மாவட்டங்களில் தாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வி.வி.மினரல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆலைகளும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

விதிமீறி அள்ளப்படும் தாது மணல்

இதனிடையே, சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதற்கான அனுமதி பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.வி.மினரல் நிறுவன பங்குதாரரான வைகுண்டராஜனுக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 3 வருடங்கள் சிறைத் தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

சி.பி.ஐ வழக்கின் பின்னணி!

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர், நீரஜ் குமார் காட்ரி. பல்வேறு ஆலைகளுக்கு விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழல் அனுமதியைக் கொடுத்ததாக அவர் மீது ஊழல் புகார்கள் வெளிவந்தன.

Also Read: சென்னையில் போலி சி.பி.ஐ. அதிகாரி கைது! பரபரப்பு பின்னணி

அதனால், சி.பி.ஐ அதிகாரிகள், நீரஜ் குமாரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அத்துடன், வருமானத்துக்கு அதிகமாக பல்வேறு இடங்களில் அபார்ட்மெண்ட் வாங்கியிருப்பதற்கான பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

Also Read: வைகுண்டராஜன் கட்டடத்துக்கு அரசு அதிகாரிகள் அதிரடி சீல்!

நீரஜ் குமாருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்தியது. அதில் சில தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக நெல்லை மாவட்டம் கீரைக்காரன்தட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் வி.வி.மினரல் நிறுவனத்தில் இருந்து நீரஜ் குமாரின் மகன் சித்தார்த் கல்விக்காக ரூ.4,13,000 செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தத் தொகையை வி.வி.மினரல் வங்கிக் கணக்கில் இருந்து டி.டி-யாக செலுத்தப்பட்டிருந்தது.

சி.பி.ஐ

நீரஜ் குமார் அவரது மகன் சித்தார்த் ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்து திரும்பிச் செல்வதற்காக விமான டிக்கெட், தங்குவதற்கும் உணவுக்குமான வசதி ஆகியவையும் வி.வி.நிறுவனம் சார்பாகச் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கின. நெல்லை மாவட்டத்தில் 166 ஹெக்டேர் நிலத்தை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி பயன்படுத்திக் கொள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியைக் கொடுப்பதற்காக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.

கைப்பட எழுதிய ஆவணம் சிக்கியது!

2016-ம் ஆண்டு சி.பி.ஐ சார்பாக நீரஜ் குமார், வைகுண்டராஜன் மற்றும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு நிலத்துக்கான சுற்றுசுசூழல் அனுமதி பெற்றுத் தருவதற்கு ஒப்பந்த அடிப்படையில் வி.வி.நிறுவனத்தில் பணியாற்றிய சுப்புலட்சுமி மற்றும் வி.வி.நிறுவனம் ஆகியவற்றை வழக்கில் சேர்த்தது. டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வி.வி.மினரல்ஸ் நிறுவன அலுவலகம்

வழக்கு விசாரணையின்போது பல்வேறு சாட்சியங்களை சி.பி.ஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீரஜ் குமாருக்கு லஞ்சமாகக் கொடுத்த பணம் தொடர்பாக, `கொடுத்துவிட்டு டொனேஷன் கணக்கில் எழுதவும்’ என வைகுண்டராஜன், தன் கைப்பட எழுதிய ஆவணத்தையும் சி.பி.ஐ தாக்கல் செய்தது.

2019-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜா பாட்டியா தலைமையில் நடந்த வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு (நேற்று) தள்ளி வைத்தார்.

வைகுண்டராஜன்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நீரஜ் குமார், வைகுண்டராஜன் ஆகியோர் மீதான லஞ்சம் கொடுத்தல், முறைகேடாக அனுமதி பெறுதல், கூட்டுச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக் குறிப்பிட்டார். அதனால் நீரஜ்குமாருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் வைகுண்டராஜனுக்கு 3 வருட சிறைத் தண்டனையும் விதித்தார். இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

ஒப்பந்த அடிப்படையில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுப்புலட்சுமிக்கு 3 வருட சிறைத் தண்டனையுடன் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை விதிக்கப்பட்டதும் வைகுண்டராஜன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/cbi-court-has-ordered-3-year-jail-for-vaigundarajan-in-bribe-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக