Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைஸர்.. சிகிச்சையில் 12 குழந்தைகள்! - கொடூரம் நடந்தது எப்படி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. அப்போது மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்போரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

சொட்டு மருந்து

Also Read: `தி கேரவன்' பத்திரிகை, சி.பி.எம் உள்பட பல ட்விட்டர் பக்கங்கள் முடக்கம் - விவசாயிகள் பேரணி காரணமா?

பன்போரா சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வந்த 12 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து 5 வயதுக்குட்பட்ட அந்த 12 குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து யவத்மால் மாவட்ட கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி ஶ்ரீகிருஷ்ணா பஞ்சால், ``சொட்டு மருந்து வழங்குவது குறித்து 15 நாள்கள் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், பயிற்சி பெற்ற முறையைப் பின்பற்றாமல் சொட்டு மருந்துக்குப் பதிலாக கைகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட சானிடைஸரை குழந்தைகளுக்கு அளித்திருக்கின்றனர். இதுபோன்ற அலட்சியமான தவறுகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது. உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. 12 குழந்தைகளும் தற்போது நலமாக இருக்கின்றனர்'' என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைஸர் வழங்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/12-children-has-given-sanitizer-instead-of-polio-drops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக