Ad

சனி, 14 நவம்பர், 2020

அறுவடை இயந்திரங்களை இயக்கும் ஆஸ்திரேலிய ஜெட் விமான பைலட்டுகள்... ஏன்?

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு வயலில் கோதுமையை வேகமாக அறுவடை செய்துகொண்டிருந்தது ஒரு பிரமாண்டமான அறுவடை எந்திரம். அறுவடைக்காலத்தில், அறுவடை எந்திரங்கள் இயங்குவது அவ்வூரில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால், அந்த எந்திரத்தை இயக்கியவரைக் கண்டுதான் ஊரே ஆச்சர்யப்பட்டது. ஏனெனில், அந்த எந்திரத்தின் ஓட்டுநர், ஆஸ்திரேலியாவின் மிகப்பிரபலமான பயணிகள் ஜெட் விமானத்தின் பைலட் ஆன்ரூ கிங்.

Harvesting (Representational Image)

சீனாவில் தொடங்கி, 190 நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், உலகப் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. பெரும்பாலான தொழில்கள் முடங்கியது. குறிப்பாக, விமானப் போக்குவரத்து தொழில் ஸ்தம்பித்தது. சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியாவும் தப்பவில்லை.

ஆஸ்திரேலியாவில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், விமானிகள் உள்பட விமான பணியாளர்கள் அனைவருக்கும் வேலை பறிபோனது. அதில் ஆஸ்திரேலியாவின் கிங் ஹைனன் ஏர்லைன்ஸில் பயணிகள் ஜெட் பைலட்டாகப் பணிபுரிந்த ஆன்ரூ கிங்கும் ஒருவர். கடந்த பிப்ரவரியில், ஊதியம் இல்லாமல் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் ஆன்ரூ.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியா உட்பட பல நாடுகளின் பொருளாதரத்தைத் தூக்கி நிறுத்திய விவசாயம்தான், ஆஸ்திரேலியாவின் விமான பைலட்டுகளுக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

Pilot (Representational Image)

கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட கடுமையான பயணக் கட்டுப்பாடுகளால், ஆஸ்திரேலியாவில் கடுமையான விவசாயப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. நல்ல மழை பெய்ததால், இந்த ஆண்டு கோதுமை சாகுபடி 300 மடங்கு அதிகரித்தும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி இல்லை. அறுவடை செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்தனர். 2016 முதல் நிலவிய கடும் வறட்சியால், பலர் விவசாயப் பணியைவிட்டு சுரங்கத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர். விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸில் கடும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது.

பணியின்றி தவிக்கும் விமானிகளுக்கும், பணியாள் தேடி அலையும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு தொடர்பை முதலில் ஏற்படுத்தியது அமன்டா தாமஸ் என்ற பெண் விவசாயிதான். செயலிழந்து கிடக்கும் விமான போக்குவரத்துத்துறையில் உள்ள மிகப்பெரிய மனிதவளத்தை உணர்ந்தவர் அமன்டா. இருவரையும் இணைக்க `பைலட்ஸ் 4 ஹார்வெஸ்ட் 2020’ என்ற முகநூல் குழுவைத் தொடங்கினார்.

விவசாய எந்திரங்களை இயக்கும் வாய்ப்பிருப்பதை, இந்த முகநூல் குழு மூலம்தான் கிங் அறிந்தார்.

Farming (Representational Image)

விட்டேக்கர் ஸ்டீவர்ட் ஹார்வெஸ்ட் மற்றும் ஹாலேஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மேட் ஸ்டீவர்ட்தான் முதலில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத கிங்குக்கு அறுவடை எந்திரங்களை இயக்கும் பணி வழங்கினார்.

``பல ஆண்டுகளாக நாங்கள் இது குறித்து யோசிக்கவில்லை. இவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை இப்போதுதான் நாங்கள் கண்டறிந்தோம். ஒரு விமானத்தைப் பறக்க வைக்க முடிந்த அவர்களால், அறுவடை எந்திரங்களை சுலபமாக இயக்க முடியும்” என்று தான் நம்பியதாகக் கூறுகிறார் ஸ்டீவர்ட்.

``விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை நாங்கள் ஒரு வாய்ப்பாகப் பார்த்தோம். விமானிகள் நவீன தொழில் நுட்பங்களைத் துரிதமாகக் கிரகித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்கள். அதனால், அவர்கள் விவசாய கனரக உபகரணங்களை சுலபமாக இயக்க கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார் அமன்டா. அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. குறுகிய காலத்தில் கிங் ஒரு திறமையான அறுவடை இயந்திர ஓட்டுநராகிவிட்டார்.

இந்த சீஸனில், ஆஸ்திரேலியாவில் கோதுமை, பார்லி மற்றும் கனோலா பயிர்களின் உற்பத்தி 300 மடங்கு அதிகரித்ததால், வேலை வாய்ப்பு பல மடங்கு பெருகியது. இது பைலட்டுகளுக்கு மிகப்பெரிய தற்காலிக வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

அமன்டா

தற்போது அமன்டாவின் முகநூல் குழுவில் 800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்கிறார் தாமஸ். தொடக்கத்தில், இக்குழுவில் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினராக இருந்தனர். தற்போது விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களும் உறுப்பினராகச் சேர்கின்றனர் எனப் பெருமையுடன் கூறுகிறார் அமன்டா. இவருடைய சாதனை அரசுக்கும் ஒரு வழிகாட்டியானது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் பழம் பறிப்பவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அரசே இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பழம் பறிக்கும் பணியில் அமர்த்தியது. மேலும், இளைஞர்களை ஊக்குவிக்க, அவர்களுக்கு புதிய சலுகைகள், ஊக்கத்தொகை அறிவித்தது. பணிபுரிய முன்வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவும் முன்வந்தது.

வானில் பறந்த நாங்கள் எதிர்பாராத வகையில் தரையிறக்கப்பட்டாலும், எங்கள் வாழ்வு தாழவில்லை. விவசாயம் எங்களை கைதூக்கிவிட்டுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆன்ரூ.

விமானத்தில் ஒரு நாளைக்கு நாங்கள் 10-12 மணி நேரம் தொடர்ந்து பல எந்திரங்களை இயக்குகிறோம். அதனால் விமானம் எந்திரம், விவசாய எந்திரம் என எதுவாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்கிறார் மற்றொரு விமானியான மாட் ஷெப்பர்ட். இவர் டைகர் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பைலட்டாகப் பணிபுரிந்தவர். இவர்களைப்போல, பல விமானிகள் டிரக் ஓட்டுதல், கேரவன்களை வாடகைக்கு விடுதல் எனப் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து விமானிகளும் முகநூல் குழுவை அமைத்த அமன்டாவை புத்திசாலி எனப் பலரும் புகழ்கின்றனர்.



source https://www.vikatan.com/news/agriculture/australian-pilots-started-working-in-farmlands-because-of-airline-services-halted

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக