Ad

திங்கள், 19 ஜூலை, 2021

கொரோனா : அச்சம் தரும் கேரளா, மகாராஷ்டிரா நிலவரம்… மூன்றாம் அலை இந்தியாவில் தொடங்கிவிட்டதா?!

இந்திய அரசு இரண்டாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் எதையும் முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியதாலோ என்னவோ, மூன்றாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தினம் தினம் துரத்திக்கொண்டே இருக்கிறது.

ஸ்பானிஷ் ஃப்ளூ பாணியில் கொரோனா பரவுகிறதா?!

1918-ம் ஆண்டு மக்களை அச்சுறுத்திய ஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று சில மாதங்கள் இடைவெளியில் பலகட்ட அலைகளாக தாக்கியது. இப்போது வந்துள்ள கொரோனாவும் 100 வருட பழமையான தொற்றுநோயைவிட பல அம்சங்களில் வித்தியாசமாக இருந்தாலும் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இரண்டாம் அலையில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் பல நாடுகளில் அதிகமாக இருந்தது (ஸ்பானிஷ் ஃப்ளூ போலவே). கொரோனா மூன்றாம் அலை ஏற்கெனவே இங்கிலாந்து மற்றும் சில தென் அமெரிக்க நாடுகளில் ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தில் ஒரு வாரத்திற்குள்ளாகவே நோய் தொற்று 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறைந்தளவிலான விமானப் போக்குவரத்தே இப்போது இருந்தாலும் மூன்றாம் அலை உலகம் முழுவதும் வேகமாக பரவுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவின் நிலை என்ன?

கொரோனாவின் இரண்டாம் அலைக்கு இந்தியாவில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தன. இப்போது மூன்றாம் அலைக்கும் இதே மாநிலங்களில் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பதுதான் இந்தியா மூன்றாவது அலைக்குள் நுழைகிறதோ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. கேரளாவில் திடீரென நோய் தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா இன்னும் குறைந்தபாடில்லை. தினமும் அங்கு 8,000 முதல் 10,000 வரை பாசிட்டிவ் கேஸ்கள் வருகின்றன. இந்த திடீர் அதிகரிப்பு இரண்டாம் அலையின் தாக்கமா அல்லது மூன்றாம் அலையின் ஆரம்பமா என்பதை அடுத்த 15-20 நாள்களின் நிலைமையைப் பொருத்துதான் சொல்லமுடியும் என்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் மூன்றாம் அலை உச்சம் தொடுமா?!

இந்தியாவில் குளிர்காலத்தில் மூன்றாம் அலை உச்சம் பெறும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனென்றால் சுவாச சம்பந்தமான வைரஸ்கள் (கொரோனாவை உருவாக்கும் SARS-CoV-2 போல) இந்த மாதங்களில்தான் செழித்தோங்கும். ஆகையால் மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் உச்சம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை மோசமாக இருக்குமா?

ஸ்பானிஷ் ஃப்ளுவின் மூன்றாம் அலை முதல் அலையைப் போல பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால், இரண்டாம் அலை ஒப்பீட்டளவில் மிகப்பெரியதாக இருந்தது. இந்தியாவில் இரண்டாம் அலை முதல் அலையை விட இரண்டு மடங்காக இருந்தது. இதனால் இரண்டாம் அலை போல் மூன்றாம் அலை மோசமாக இருக்காது என முன்னணி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் SARS-CoV-2 வைரஸால் அவ்வளவு எளிதில் கொத்து கொத்தாக நோய்தொற்றை உருவாக்க முடியாது என்கிறார்கள். மும்பையில் 80 சதவிகித மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என TIFR குழு மதிப்பிட்டுள்ளது. மூன்றாம் அலை சிறியதாகவே இருக்கும் என கூறுவதற்கு மக்கள் அனைவருக்கும் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதும் ஒரு காரணம்.

விதிவிலக்கு உண்டா?

கொரோனா இரண்டாம் அலைக்கு முன்பாக, பொது சுகாதாரத் துறை செரோ கணக்கெடுப்பை (SARS-CoV-2 வைரஸுக்கான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கிறதா என பார்க்க செய்யப்படும் ரத்தப் பரிசோதனை) நடத்தியது. அதில் 70 % டெல்லி மக்களுக்கு வைரஸுக்கான நோய் எதிர்ப்புசக்தி உடலில் இருப்பதாக தெரிய வந்தது. ஆனாலும், இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, டெல்லியில் தினமும் 25,000 பாசிட்டிவ் கேஸ்கள் வந்தன. இதற்கு காரணம் வைரஸ் உருமாற்றமே. இன்னொரு உருமாற்றம் அடைந்தால், மூன்றாம் அலை மிகப் பெரியதாகவும் பேரழிவாகவும் இருக்கக்கூடும்.

கொரோனா தடுப்பூசி முகாம்

மூன்றாம் அலையில் இருந்து தப்பிப்பது எப்படி?!

முதல் நடவடிக்கையாக, அதிக நோய் பரவலுக்கு காரணமாக இருக்கும் திருமணம், திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதேப்போல் மக்களும் எல்லா நேரங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும் (இரண்டு மாஸ்க் அணிந்தால் வெகு சிறப்பு)

இரண்டாவதாக, இந்தியர்கள் அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி போடத் தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில், மக்கள் தொகையில் 25 சதவிகிதத்தினருக்கு மட்டுமே முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இரண்டாம் டோஸை 6% சதவிகிதத்தினருக்கு குறைவானவர்களே போட்டுள்ளனர்.

தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் செலுத்துவதான் அரசின் முதல் முக்கிய கடமை. அதேப்போல் மூன்றாம் அலையை அலட்சியப்படுத்தாமல் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை சரியாகக் கடைபிடித்தால் இந்த மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்கலாம்!



source https://www.vikatan.com/news/healthy/has-corona-third-wave-started-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக