Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

`இரண்டாம் அலை மட்டுப்படும்; மூன்றாம் அலை வரவே வராது!' - ஃபைசர் அளிக்கும் நம்பிக்கை

நாம் அனைவரும் அறிந்ததுபோல கோவிட்19 நோய், உலகமெல்லாம் 2020-ம் வருடம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி, தன் முதலாம் அலையில் பல உயிர்களைக் குடித்துவிட்டு, தன் கோரப்பசி குறையாமல் ஆங்காங்கே அடுத்த அலைக்கான ஆயத்தத்தை அரங்கேற்றி வருகிறது.

Pfizer

ஐரோப்பிய நாடுகளில் இந்த இரண்டாம் அலையில் தென்படும் நோய்த்தொற்று, முதலில் வந்த SARS-CoV-2 வைரஸின் RNA-வைவிட சற்றே உருமாற்றம் அடைந்திருப்பதாகவே ஆய்வு வல்லுநர்கள் சொல்கின்றனர்.

இந்த உருமாற்றங்கள் வைரஸுக்குள் நடக்கும் ஒரு வழக்கமான விஷயமாக இருந்தாலும், இதுபோன்ற மிகத்தீவிர பெருந்தொற்றினை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் உருமாறி இருப்பதைப் பற்றி நாம் கவலைகொள்ள வேண்டுமா என்றால் நிச்சயமாக இல்லை!

காரணம்...

நமக்கு விரைவில் வரவிருக்கும் தடுப்பூசிதான். ஆம்! கடந்த 10 மாதங்களாக, சுமார் 38 மருத்துவ ஆய்வகங்கள் ஆரம்பித்த முயற்சியில், 14 கடைசி நிலை போட்டியாளர்களுக்குள், தேர்வாகி இருக்கும் 7 தடுப்பூசி ஆய்வக ஜாம்பவான்களுக்குள் ஃபைசர் மற்றும் BioNTech நிறுவனம் இணைந்து கண்டுபிடித்து இருப்பதுதான் BNT-162-B2 எனும் தடுப்பூசி.

vaccine

பொதுவான தடுப்பூசிகள்போல், தொற்றும் வைரஸையே செயலிழக்கச் (Attenuate) செய்யாமல், வைரஸின் கோர்வைக்குள் இருக்கும் முள்போன்ற புரதமான Spike protein mRNA-வின் பிரதியைப் போன்ற ஒரு பிரதி எடுத்து, அதை நம் உடலுக்குள் ஒருவகையான கொழுப்பு திரவ (Lipid Particulate medium) உதவியுடன் செலுத்துவார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தின்படி, கொரோனா மட்டுமல்ல, கொரோனா வகைகள் மற்றும் கொரோனா போல் இனிவரும் அதே ஸ்பைக் புரோட்டீன் பாகத்துடன் வரும் அனைத்து வைரஸ்களுக்கும் இந்த mRNA தொழில்நுட்ப தடுப்பூசி உதவும் என்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் தடுப்பூசி உலகுக்கே, நாங்கள் படித்த தடுப்பு மருத்துவப் பாடத்திலேயே புதிய பக்கத்தைக் காட்ட வருகிறது. மேலும், இந்தத் தடுப்பூசி மனித பரிசோதனையில் மூன்றாவது ஆய்வின்படி நிலையைக் கடந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக (FDA) அமைப்பின் அனுமதிக்காகத் தம் இடைக்கால ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி.M.சுலைமான்

அவர்கள் கூற்றுப்படி, FDA-வினுடைய அனுமதி பெற்றுவிட்டால் 2020-ம் வருடத்துக்குள் சுமார் 5 கோடி தடுப்பூசி தயாரித்துத் தரவும், 2021-ம் ஆண்டில் சுமார் 120 கோடி தடுப்பூசிகளை உலகம் முழுவதும் விநியோகிக்க இயலும் என்றும் சொல்லியிருக்கிறது ஃபைசர்.

அனைத்திலும் முக்கியமாக அவர்கள் தங்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த 38,000 தன்னார்வலர்களை இரண்டாகப் பிரித்து, அவர்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாகத் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அவர்களில் தடுப்பூசி கொடுக்கப்பட்டவர்களில் வெறும் 9 சதவிகிதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், அதே நேரத்தில் தடுப்பூசி கொடுக்கப்படாத Placebo வர்க்கத்தில் 86 சதவிகிதம் பேருக்கு நோய்த்தொற்று வந்ததாகவும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

நாம் இரண்டாம் அலையை நோக்கி முன்னேறும் நேரத்தில், இதுபோன்ற சுமார் 90 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெற்றால், இரண்டாம் அலையின் உச்சம் தடுக்கப்படும்.

பெருந்தொற்று காலத்தில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் மூன்றாம் அலை முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

File photo shows a patient receiving a flu vaccination

Also Read: `தடுப்பூசி கண்டுபிடிப்பில் முக்கியமான மைல்கல்!' - 90% செயல்திறன் வாய்ந்த ஃபைசர் தடுப்பூசி

இதில் சாதக பாதகங்கள் பல இருந்தாலும் இதுபோன்ற நோயைக் கட்டுப்படுத்தும் மிக வலிமை வாய்ந்த தடுப்பூசிகள் அதிகமாக உருவாக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கப்பெற்றால், கொரோனா எனும் கொடூர அரக்கனை மிக எளிதாகத் தடுத்து மனித இனத்தைக் காத்திட முடியும். நல்ல காலம் நிச்சயம் பிறந்திடும். அதுவரை நமக்கு இருக்கும் நோய்ப்பரவல் தடுப்பான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிப்போம்.



source https://www.vikatan.com/health/healthy/why-efficient-vaccines-like-pfizer-candidate-is-important-to-us-to-prevent-third-wave

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக