Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

சென்னை: கூகுள் வாய்ஸ்; செல்போன் நம்பர்கள் - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த வடமாநில இளைஞர்கள்

தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற மாநில காவல்துறையினரின் பெயர்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் போலியாக ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் காவல்துறை அதிகாரிகளின் நண்பர்களிடம் பண உதவி கேட்கப்பட்டது. பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டது. அதைப்பார்த்த காவல்துறை அதிகாரிகளின் நண்பர்கள், 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விவரத்தைக் கூறியபோதுதான் மோசடி நடப்பதே காவல்துறையினருக்கு தெரியவந்தது.

ஷகீல்கான்

சென்னை மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், மத்திய குற்றப்பிரிவு முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திர குமார் ஆகியோரின் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உதவி கமிஷனர் அருள் சந்தோஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தென் சென்னை கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், வட சென்னை இணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டிஜிபி சந்தீப் ரத்தோர் ஆகியோரின் பெயர்களிலும் பெயரிலும் போலி ஃபேஸ்புக் கணக்குகள் உலா வந்தன. அதைப்பார்த்து காவல்துறை உயரதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்ட தமிழகக் காவல்துறை அதிகாரிகளின் விவரங்களைச் சேகரித்து மோசடியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த மோசடி செயலில் ஈடுபட்ட முக்கிய கும்பலானது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பஹரி தாலுகாவில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் கணினி வழிக்குற்றப்பிரிவு உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் ராஜஸ்தான் சென்று ஒருவாரம் முகாமிட்டனர்.

Also Read: `போலி ஃபேஸ்புக் ஐ.டி; தோழி, குடும்பத்தினரின் ஆபாச படங்கள்!' - சைக்கோ அதிகாரியை வளைத்த சென்னை போலீஸ்

அங்கு பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல்கான் அவரின் கூட்டாளி ரவீந்தர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காவல்துறை அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தி ஷகீல்கான் என்பவர் போலியாக ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் பணமோசடி செய்ய மூளையாக செயல்பட்டு வந்திருக்கிறார். அதன்மூலம் கிடைத்த பணத்தை ஏற்கெனவே போலியாக உருவாக்கி வைத்திருக்கும் கூகுள் பே ,பேடிஎம் ஆகியவற்றின் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறார். பின்னர், அதைத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இ-மித்ரா முகவரான ரவீந்தர்குமார் என்பவரின் ஸ்வைப் மிஷன் உதவியோடு பணத்தை எடுத்து தங்களுக்குள் பங்கு போட்டிருக்கின்றனர்.

ரவீந்தர்குமார்

தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கர்நாடகா தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலக் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களிலும் போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கில் முஸ்தகீன்கானை தெலங்கானா போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரித்தபோதுதான் சிறுவன் ஒருவருடன் சேர்ந்து தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குள் தொடங்கப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்திருக்கிறோம். அவர்கள் அளித்த தகவலின்படி இந்த மோசடி கும்பலின் தலைவன் ஷகீல்கான் மற்றும் அவனின் கூட்டாளி ரவீந்தர்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான கல்வியறிவு கிடையாது. அதனால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக இருந்து ஃபேஸ்புக்கை எப்படி ஹேக் செய்வது என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளார். கூகுள் வாய்ஸையும் செல்போன் நம்பர்களின் கடைசி 5 இலக்க நம்பர்களையும் இவர்கள் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.

போலீஸ் அதிகாரிகளுக்கே அதிர்ச்சி கொடுத்த இந்த வடமாநில இளைஞர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்ததையடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் டீமைப் பாராட்டியுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-three-from-rajasthan-over-fake-facebook-account-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக