Ad

திங்கள், 16 நவம்பர், 2020

நயன்தாராவின் `மூக்குத்தி அம்ம'னுக்கும், ஆமிர்கானுக்கும் என்ன சம்பந்தம்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

பெயரே தெரியாத டிவி சேனலில் நிருபராகச் சுற்றும் 'ஏங்கல்ஸ் ராமசாமி'யாக ஆர்ஜே பாலாஜி. அப்பா இல்லாத குடும்பம், 3 தங்கைகள், மெச்சுரிட்டி இல்லாத அம்மா என சீரியல் டெம்ப்ளேட் குடும்பம். தன் மகனுக்குத் திருமணம் நடக்க பல்வேறு பொய்களைச் சங்கடமே இல்லாமல் கட்டவிழ்க்கும் பாசக்கார அம்மா ஊர்வசி, தன் ஆசைக்குத் துணையாக அத்தனை கடவுள்களையும் உடன் சேர்த்துக் கொள்கிறார்.

இதனிடையே, தன் சொந்த ஊரில் 41 ஏக்கர் நிலத்தை (அம்மாடி!) வளைத்துப்போட்டு 'ஆன்மிகத் தலைநகரம்' உருவாக்க நினைக்கும் 'சாமியார்' பகவதி பாபாவை எதிர்க்கிறார் ரிப்போர்ட்டர் ஆர்ஜே பாலாஜி. 'இத்தனை சாமி இருக்கே, எதுவும் தட்டிக் கேட்டுச்சா' என்று மனிதர் பன்ச் பேச, பின்னர் தன்னுடைய குலதெய்வக் கோயிலில், தன் குடும்பப் பிரச்னைகளை எல்லாம் சொல்லிக் குமுற மூக்குத்தி அம்மனே இறங்கி வருகிறார். இந்த சாமி vs சாமி'யார்' சண்டையில் யார் வென்றார்கள் என்பதே 'மூக்குத்தி அம்மன்' படம்.

மூக்குத்தி அம்மன்

அரசியல் பகடியான 'எல்.கே.ஜி.'க்குப் பிறகு ஆன்மிகப் பகடியில் தில்லாக இறங்கியிருக்கிறது ஆர்ஜே பாலாஜி கதை இலாகா. அதுவும் நாட்டார் தெய்வங்களின் பக்கம் வண்டியைத் திருப்பியதற்குப் பாராட்டுகள்!

இயற்கை வளத்தை ஆசிரமங்கள் என்ற பெயரில் கபளீகரம் செய்யும் சாமியார்களின் ராவடிகளை ஜாலியாகத் தோலுரித்துக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால், காட்சிக்குக் காட்சிக்கு காமெடி தூக்கலா இருக்கட்டும் என்று முயன்றதாலோ என்னவோ ஐக்கிய நாடுகளில்கூட பக்தர்களை வைத்திருக்கும் வில்லன் சாமியாரே இங்கே காமெடி பீஸாகத்தான் தெரிகிறார்.

சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்காக தெரிந்தாலும் அப்படியே பாக்யராஜின் பாணியைப் பின்பற்ற முயன்றிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. எதற்கெடுத்தாலும் சொதப்பும் அப்பாவி நாயகன், அவனுக்குள் இருக்கும் சென்டிமென்ட் எனத் தன் கதாபாத்திரத்துக்குச் சரியான மீட்டரைப் பிடித்திருக்கிறார். அதே பாக்யராஜ் ஸ்டைலில் திரைக்கதைக்கும் இன்னமும் கொஞ்சம் உழைத்திருக்கலாமே 'டன்டபன்ட்டன் டொன்டடொன்ட்டட்டன்' பாலாஜி?!

மூக்குத்தி அம்மன்

அம்மாவாக ஊர்வசிக்கு மீண்டும் ஒரு சிக்ஸர்! 'புத்தம் புது காலை'யில் வயது முதிர்ந்த காதலியாக ஜாலி கேலி என்றால், 'சூரரைப் போற்று'வில் 'ஜெயிச்சிடுயா' என சீரியஸ் அம்மா. இந்தப் படத்தில் கொஞ்சம் சீரியல் அம்மா வாடை வீசினாலும் ஃபிரேமில் தோன்றும் காட்சிகளில் எல்லாம் மற்ற நடிகர்களை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடுகிறார். மௌலியின் பாத்திர வார்ப்பு அவரின் திறமையை வெளியே கொண்டு வரவில்லை. 'சமையல் வேலையிலிருந்து லீவ் கிடைக்குமா?' என அண்ணனிடம் வரம் வேண்டும் இடத்தில் ஸ்மிருதி வெங்கட் நெகிழ வைக்கிறார்.

அம்மனாக 'வாவ்' நயன்தாரா! லேடி சூப்பர்ஸ்டார் மூக்குத்தி அம்மனாகத் திரையை ஆக்கிரமிக்கும் போதெல்லாம் குறையேதும் இல்லை தாயே! ஆனால், அவருக்கான காட்சிகளை இன்னமும் கூடுதலாக அதே சமயம் இன்னமும் சீரியஸாக சேர்த்திருக்கலாம்! அத்தனை சக்தி வாய்ந்த அம்மன் மனிதர்கள் மூலம் நினைத்ததைச் சாதிப்பதாகக் காட்டாமல் மேஜிக் வித்தையையும் அவ்வளவு பெரிய பிரசங்கத்தையும் நம்பியது ஏன் என்று புரியவில்லை.

மூக்குத்தி அம்மன்

என்னதான் ஜாலி பாபாவாக இருந்தாலும் வில்லன் 'சாமியார்' இத்தனை காமெடி பீஸாகவா இருப்பார்? ஒன் டு ஒன் டாக் ஷோ சுவாரஸ்யம் என்றாலும் இன்னமும் தத்துவார்த்த ரீதியாக பல்வேறு விஷயங்களை விவாதித்திருக்கலாமே!

Also Read: சூர்யா, சுதா, அமேஸான் ப்ரைம்... ஜெயிச்சாங்களா இல்லையா?! `சூரரைப் போற்று' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

ஒன்லைன், அந்த டாக் ஷோ, அம்மன் சொல்லும் கடைசி காட்சி மெசேஜ் என எல்லாவற்றிலும் ஆமிர்கான் நடித்த இந்திப் படமான 'PK'வின் சாயல் தெரிகிறது. அதற்காகவே ஒரு சில மைக்ரோ செகண்ட்ஸ் மட்டுமே ஓடும் இன்ஸ்பிரேஷன் கார்டு போட்டு அப்ரூவர் ஆகியிருக்கிறார்கள். என்னா வில்லத்தனம்?!

பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மன் பாடலும், 'பகவதி பாபா' பாடலும் ஈர்க்கின்றன. நாகர்கோவில் ஏரியா என மலைப்பகுதியையே வட்டமடிக்கும் ஒளிப்பதிவு கொள்ளை அழகு!

மூக்குத்தி அம்மன்
நெடுநாள்களுக்குப் பிறகு ஒரு ஜாலி கேலி சாமி படம் என்பதால் இந்த 'மூக்குத்தி அம்மனை' தரிசிக்கலாம்!


source https://cinema.vikatan.com/tamil-cinema/hotstar-release-mookuthi-amman-tamil-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக