Ad

திங்கள், 16 நவம்பர், 2020

`சூரரைப் போற்று' பொம்மியின் அந்த கேள்விகளுக்கும் பதில்களுக்கும்... நன்றி சுதா கொங்கரா!

தலை வாரி, படியப் பின்னி, பொட்டிட்டு, பட்டு கட்டி, பஜ்ஜி சொஜ்ஜி செய்துவைத்து, ‘எப்போ வருவாரோ...' என்று தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைக்காகக் காத்திருந்து... எனக் கல்யாணச் சந்தையில் அரங்கேறும் சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலத்தையே திரையில் பார்த்துவந்தோம் 'மௌனராகம்'வரை. மாப்பிள்ளையை வேண்டுமென்றே காக்கவைத்து, மழையில் நனைந்து, பாட்டுப் பாடி ஆட்டம் ஆடிவிட்டு தாமதமாக வீட்டிற்குள் நுழையும் 'மௌனராகம்' திவ்யா மூலம் அந்த ஸ்டீரியோடைப்பை உடைத்தார் மணிரத்னம். அவரின் சிஷ்யை சுதா கொங்கரா, 'சூரரைப் போற்று' பொம்மியின் மூலம் உடைத்திருப்பது, மணி உடைத்ததைவிட பெரிய, நிறைய ஃபர்னிச்சர்களை!

சூரரைப்போற்று

இயக்குநர் சுதாவின் கதாநாயகி பொம்மை போலல்லாது கதையின் நாயகியாகவும் இருப்பார் என்பதை 'இறுதிச்சுற்றி'ல் பார்த்தோம். 'இறுதிச்சுற்று' படத்தின் பிரதான கதைக்கரு, ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கும் அவளின் கோச்சுக்குமான உறவைச் சுற்றியே இருந்ததனால் நாயகியின் கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட கனம் இருந்தது. ஹீரோ மாதவனின் திமிருக்கு சற்றும் சளைக்காத சண்டைக்காரியான மதியின் பாத்திரப் படைப்பு, அவளை நம் மனதில் சம்மணமிட்டு அமர வைத்ததில் ஆச்சர்யம் இல்லை.

ஆனால், 'சூரரைப் போற்று' கதைக்களமோ முழுக்க முழுக்க தன் கனவை நிறைவேற்றப் போராடும் ஹீரோவின் ஹீரோயிசத்தை சொல்லும் கதை. ட்ரெய்லர் முழுக்க 'மாறா மாறா' எனத் தெறித்த வசனங்களைப் பார்த்தபோது, கதாநாயகியான அபர்ணாவின் பாத்திரப் படைப்பை பற்றிய கேள்வி எழுந்தது நிஜம். 'ஹீரோயிசம் பேசும் சினிமாவில் ஹீரோயினுக்கு பெரிதாக என்ன வேலை இருந்துவிடும்?' எனத் தோன்றிய எண்ணத்தை சுழற்றியடிக்கும் விதமாக சுந்தரி கதாபாத்திரத்தை நம் முன் நிறுத்தியிருக்கும் சுதாவிற்கு பலமான பாராட்டுகள்!

'எல்லோருக்கும் ஏரோப்ளேன் பயணம்' என்ற இலக்கை நோக்கி நாயகன் நகரும் கதைக்களத்தில், நாயகிக்கு இத்தனை அழுத்தமான பாத்திரப் படைப்பு வாய்ப்பது அத்தனை சுலபமல்ல. அப்படிக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி பெர்பார்மென்சில் பின்னி எடுத்திருக்கும் அபர்ணாவிற்கு ஆயிரம் ஹார்ட்டீன்கள்!

இயக்குநர் சுதா கொங்கரா

“இந்த அநியாயம் எங்கயாச்சும் நடக்குமா? மாப்பிள்ளையைத் தேடி பொண்ணு வீட்டுக்காரங்க போவாங்களா?” எனக் கேட்கும் அம்மாவிடம், “சந்தையில் மாடு பாக்கப்போற மாதிரி பொண்ணு பார்க்கப் போகமாட்டேன்னு மாப்பிள்ளை சொல்லி இருக்காருல்ல. அதான் நான் போறேன்” எனச் சொல்லி கெத்துடன் பையன் பார்க்கப்போகும் நாயகியின் அறிமுகக் காட்சியே அம்புட்டு அதகளம்.

இதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாக எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்றாலும், திரையில் பார்க்கும்போது 'அப்புடிப்போடு' என்று துள்ளுகிறது மனம்.

Also Read: ``நஷ்டமானாலும் பரவாயில்லை!'' - ஓடிடி-க்கு ஏன் வந்தது சூர்யாவின் `சூரரைப் போற்று'?

நாள், கிழமை, நல்ல நேரம் எல்லாம் பார்த்து, உறவும் நட்பும் சூழ பெண் - மாப்பிள்ளை பார்ப்பது என்ற நடைமுறையைப் பெயர்த்தெடுக்கும்படியான அடுத்த ஷாட், பிண ஊர்வலமொன்றில் ஆடும் ஹீரோவை ஹீரோயின் முதன்முதலாகப் பார்க்கும் காட்சி. 'பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? சமையல் கை வருமா?' போன்ற நேர்காணலுக்கு இடம் கொடுக்காமல், “இதெல்லாம் அத்துப்படிதான் ஆனா செய்யமாட்டேன்” எனச் சொல்லும் அடுத்தடுத்த காட்சிகள் முழுக்கவே, பொம்மி வெறும் பொம்மை ஹீரோயின் இல்லை எனச் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

சூரரைப் போற்று

“உன்னை 20 பேர் வேணாம்னு விட்டாங்க” எனத் தன்னை மட்டம்தட்ட முயலும் கதாநாயகனிடம், “உங்க ஐடியாவையும்தான் 24 பேங்க்ல வேணாம்னு சொல்லிட்டாங்க, அதைப் பத்தி பேசுவோமா?” என பொம்மி திருப்பிக் கேட்கும் இடம், தூள். 'அட்டு பிகரு, மொக்கை பிகரு' என நாயகனால், நாயகனின் நண்பர்களால் உதாசீனப்படுத்தப்படும் நாயகிகளிடமிருந்து, 'நான் வேறயாக்கும்' என அழுத்தமாக உணர்த்துகிறாள் பொம்மி.

“மாப்பிள்ளையே ஒத்துக்கிட்டாப்ல... நீ ஏன்மா வேணாம்ங்கிற?”

''என்னைய வேணாம்னு சொன்ன அந்த 20 மாப்பிள்ளையை ஏன்னு கேட்டியா?”

தனக்கு இணையாக வரப்போகும் ஒருவரை ஓகே சொல்லவும் நோ சொல்லவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று காலம் காலமாக நம்பப்பட்ட பொதுவான மனப்பாங்கைச் சாடும் வசனம்... வெல்கம்.

கல்யாணத்திற்குச் சம்மதித்த சூர்யாவை, “அதுக்குள்ளே எப்படி முடிவு பண்ணுனீங்க? புத்தி ஒரு நிலையா இருக்காதா?” எனக் கேட்டு காலி செய்யும் இடத்திலும், “என் முடிவை விடிஞ்சதும் சொல்றேன்” என கெத்து காட்டும் இடத்திலும் சுந்தரியை அத்துணை பிடிக்கிறது!

“புருஷன்தான் பொண்டாட்டிக்கு சோறு போடணுமா? பொண்டாட்டி நீ எனக்கு போடமாட்ட?” எனக் கேட்கும் சூர்யாவிடம், கல்யாணத்திற்கு மூன்று முக்கிய கண்டிஷன்கள் போடுவது தொடங்கி(அதிலும் அந்த இரெண்டாவது கண்டிசன்!), கடைசியில் கணவரிடமே 'டிஸ்கவுன்ட் எதுவும் பார்த்திராதீங்க' என பிசினஸ் டீலிங் பேசும் இடம்வரையிலும் எங்குமே இம்மியும் பொம்மி தன் சுயத்தை விட்டுவிலகாத காட்சியமைப்புகள் ஆஹா!

அபர்ணா பாலமுரளி

கணவனுடனான பெரும் ஊடலின்போது, “நீங்க சொன்ன அந்த கப் கேக்குதான் நமக்கு சோறு போடுது” எனச் சீறும் சீனிலும், சண்டை முடிந்த பின், “இதுதான் என் வீடு. இது மட்டும்தான் என் வீடு” எனச் சொல்லும் காட்சியிலும் அபர்ணாவின் முகத்தில் பரவிக் கிடக்கும் உணர்வுகள் நம்மை அட சொல்ல வைக்கின்றன!

வீரதீர பராக்கிரமங்கள் நிறைந்தவர்களாக சினிமாக்களில் காட்டப்படும் ஆக்‌ஷன் நாயகிகள்கூட ஒரு கட்டத்தில் காதல், அன்பு, குழந்தைப் பாசம், குடும்பம் என ஏதோவொரு காரணத்தினால் தங்களின் சுயத்தை இழந்து உணர்ச்சிப்பிழம்பாகவோ, தியாகச் செம்மலாகவோ மாறும்படியான திரைக்கதைகளையே பெரும்பாலும் பார்த்திருக்கிறோம். ஆனால், கதை முழுக்கவே சீற்றம் குறையாமலும், “பெரிய விஷயம் பண்றது பத்தி பேசிட்டு இருக்கீங்க, கொஞ்சம் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க. எங்கிட்ட எதுக்கு இந்த வறட்டு கௌரவம்... ஹ்ம்ம்ம்'' எனச் சீறுமிடத்திலும் தன் தனித்தன்மையை மெருகேற்றிக்கொண்டே போகிறார் பொம்மி. மேலும், குடும்பத்தைத் தூக்கி தாங்கும் நம்மூர் பெண்கள் பலரின் பிரதிநிதிபோலத் தெரிகிறார்.

Also Read: `` `சூரரைப் போற்று' படத்தோட கதையை நாங்க பாட்டுலயே சொல்லிடுவோம்!''- ராஜி, செந்தில்கணேஷ்

கதை, இசை, ஒளிப்பதிவு என மற்ற அம்சங்களைவிடவும் இப்படத்தின் கதாநாயகியின் பாத்திரப் படைப்பை இந்தளவுக்கு சிலாகிக்கக் காரணம், மண உறவு சமத்துவமிக்கதாக மாற வேண்டியதன் அவசியத்தைப் போகிற போக்கில் உணர்த்தும்படியான காட்சிகளாக மட்டுமே அபர்ணா மற்றும் சூர்யா வரும் காட்சிகள் திரையில் விரிவதுதான். வரவேற்கிறோம். தன் கேள்விகளாலும் பதில்களாலும், கைதட்டல்களையும் நம் மனதையும் சீனுக்கு சீன் அள்ளிக்கொள்கிறார் பொம்மி.

அபர்ணா பாலமுரளி

இப்படியொரு காத்திரமான பெண் கதாபாத்திரத்தைப் படைத்த சுதாவுக்கும் பாத்திரத்தின் வீரியம் உணர்ந்து நடித்திருக்கும் அபர்ணாவுக்கும் பாராட்டுகள். இதுபோன்ற பிரேக்கிங் ஸ்டீரியோடைப்களுக்கு வெல்கம் சொல்லியிருக்கும் நடிகர் + தயாரிப்பாளர் சூர்யாவை மனதார பாராட்டலாம்!

-அனுசுயா. எம்.எஸ்



source https://cinema.vikatan.com/women/an-analysis-on-soorarai-pottru-movie-bommi-character

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக