Ad

திங்கள், 16 நவம்பர், 2020

முல்லைப்பெரியாறுக்கு வரும் மின்வசதி... வனத்தின் வழியே மின்சாரம் கொண்டு செல்ல திட்டம்!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தண்ணீரால், தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கேரள அரசும் கேரள அரசியல் கட்சிகளும் ஏற்படுத்திய சிக்கல்கள் ஏராளம். அதில் ஒன்று தான் அணைக்கு செல்லும் மின்சாரத்தைத் துண்டித்தது. மின்சாரம் இல்லாமல், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும், அடர் வனத்திற்கு நடுவே இருட்டில் வனவிலங்குகளுக்கு மத்தியில் இரவைக் கழித்துவந்தனர்.

வல்லக்கடவு வனப்பகுதி

கடந்த 2000ம் ஆண்டு வரை, தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியில் இருந்து வல்லக்கடவு வனப்பகுதி வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் சென்று கொண்டிருந்தது. 19.06.2000 அன்று, அணைக்குச் சென்றுகொண்டிருந்த மின்சார கம்பியில் காட்டு யானை ஒன்று உரசி மின்சாரம் பாய்ந்து பலியானது. இதையடுத்து, அணைக்குச் சென்றுகொண்டிருந்த மின்சாரம் நிறுத்தப்பட்டது. வனப்பகுதிக்குள் மின்சாரம் செல்வதால், வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் கூறி அணைக்கான மின்சார வசதியைத் தடை செய்தது கேரள வனத்துறை. அதையடுத்து தமிழக அரசும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பல்வேறு முயற்சி எடுத்தும், கேரள வனத்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

Also Read: முல்லைப்பெரியாறு அணையில் பருவமழை பராமரிப்பு என்ன ஆனது? - சந்தேகம் எழுப்பும் விவசாயிகள்

இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர், 10 நாட்களுக்கு முன்னர், முல்லைப்பெரியாறு அணைக்கு தரைவழியே மின்சாரம் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி கொடுத்தது. அதையடுத்து தமிழக, கேரள பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள், மின்கம்பிகள் செல்லும் வல்லக்கடவு முதல் முல்லைப்பெரியாறு அணை வரையிலான வனப்பகுதியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தற்போது வல்லக்கடவு முதல் அணை வரையில் வனப்பகுதியில் மின்வயர்கள் பதிக்கும் பணிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் நடந்துவருகிறது.

வனத்திற்குள் மின்வயர் பதிக்கும் பணி

இது தொடர்பாக தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, “மின்வயர் பதிப்பதற்கான செலவுத்தொகை, ரூ1 கோடியே 66 லட்சம் கேரள மின்வாரியத்திற்கு தமிழக அரசு முன்னரே செலுத்திவிட்டது. ஆனால், வனத்துறை அனுமதி கிடைக்காததால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனுமதி கிடைத்து, பணிகளும் விரைவாக நடந்துவருகிறது. வனப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மின் வயர்கள் பதிக்கப்படும். ஜே.சி.பி இயந்திரம் மூலம், ஆழமாக தோண்டப்பட்டு மின்வயர்கள் பதிக்கப்படுவதால் வன விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பணிகளில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால், இம்மாத இறுதிக்குள் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம் கொடுத்துவிடலாம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/agriculture/works-to-provide-power-supply-to-mullaperiyar-dam-has-started

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக