Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்! - தமிழகத்தில் அதிக, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் எவை?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 2021 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது முடிந்தவர்களாக இருப்பவர்களை கணக்கிட்டு திருத்த பணியை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று சென்னையில் வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல்

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

மாவட்ட வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை

வருகிற 21, 22-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ம் தேதியன்று இறுதி செய்யப்பட உள்ளது. ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் படி மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 வாக்காளர்களும் திருநங்கை வாக்காளர்கள் எண்ணிக்கை 6,385 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமநாதபுரம்
இராமநாதபுரம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,55,366 வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் தொகுதி தமிழகத்தில் குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக இருக்கிறது. இந்த தொகுதியில் மொத்தம் 1,73,107 வாக்காளர்களே உள்ளனர். மாவட்ட வாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/election/for-2021-tn-assembly-election-draft-voter-list-released

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக