Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

தி.மு.க, பா.ம.க-வின் வாரிசுத் தலைமை குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை! - கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ``வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் சொன்னது சரிதான். எங்களுக்கான எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டு, பேரம் நடத்தி தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

கார்த்தி சிதம்பரம்

தி.மு.க-வைப்போல் நாங்களும் ஒரு நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சர்வே எடுத்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே தி.மு.க-வுடன் கலந்தாலோசித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம். வெற்றி என்பது சீட்டு எண்ணிக்கையில் அல்ல. எங்களுடைய முக்கிய நோக்கம் ஊழல் நிறைந்த அ.தி.மு.க அரசு அகற்றப்பட வேண்டும் என்பதுதான். மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்துக்கு வந்தால், எதிர்க்கட்சிகள் ஏன் அஞ்ச வேண்டும்? உள்துறை அமைச்சர் ஒன்றும் சர்வாதிகாரி இல்லை. அப்படி உள்துறை அமைச்சரைக் கண்டு அச்சப்பட வேண்டுமென்றால், என் தந்தை உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நான் மற்றும் தொகுதி மக்கள் அச்சப்பட்டு இருக்க வேண்டும்.

Also Read: `கொரோனா காலத்தில் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்!’-மத்திய அரசைச் சாடிய கார்த்தி சிதம்பரம்

பா.ஜ.க தலைவர் முருகன் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக உள்ளது. முருகனுக்கு இதுபற்றிய அரசியல் நுணுக்கங்கள் தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும், அதன் தனித்தன்மை வேறுபடும். காங்கிரஸ் தனித்து நின்றால், எவ்வளவு வாக்குகள் வாங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ், தி.மு.க-விலும் கொள்கை ரீதியாகக் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இதனால், கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என்று யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பீகார் நிலவரம் வேறு தமிழகத்தின் நிலவரம் வேறு.

கார்த்தி சிதம்பரம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்துவோம். எங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியா காந்திதான். குடும்ப அரசியல் குறித்து காங்கிரஸிடம் மட்டும் கேள்வி கேட்பது ஏன்? பல மாநிலங்களில் முக்கியத் தலைவர்களின் வாரிசுகள்தான் அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்றனர். தமிழகத்திலும் கூட தி.மு.க-விலும் பா.ம.க-விலும் வாரிசு தலைமைதான் உள்ளது. இதுகுறித்து எல்லாம் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலைக் கணிக்க முடியாது’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sivanga-mp-karthi-chidambaram-speaks-about-various-issues-in-pudukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக