Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

அனிதாவின் கூவல், ரம்யாவின் தண்ணீர் குடம்... தவிக்கிது மனசு தவிக்கிது! பிக்பாஸ் - நாள் 44

பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் இனி கடுமையாக இருக்கும் என்பதற்கான அறிகுறி இன்று தெரிந்தது. ‘என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா’ என்கிற பன்ச் வசனம் போல் நிலைமை மாறியது. ‘on the toes’ என்பது போல் குதிகாலில் தயாராக நின்று கொண்டிருக்கும் படி தொடர்ந்து வேலைகள் செய்ய வேண்டும். போட்டியாளர்கள் இனி திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை பிக்பாஸ் தெளிவாக இன்று உணர்த்திருக்கியிருக்கிறார்.

44-ம் நாளில் என்ன நடந்தது என்ன?!

பிக்பாஸ் - நாள் 44

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்திலிருந்து ‘'பாண்டி நாட்டு கொடியைப் போல'’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. கார்டன் ஏரியாவில் ரயில், கடிகாரம், தண்ணீர் லாரி உள்ளிட்ட செட்டப்களை செய்திருந்தார்கள். கரும்பலகையில் நேர அட்டவணை குறிக்கப்பட்டு எந்தெந்த நேரத்தில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று பிரிக்கப்பட்டிருந்தது. ‘அட்டவணை’ன்னா என்னாது?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் சுச்சி.

வீட்டில் உள்ளவர்கள் ஐந்து அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். இதில் ஒவ்வொரு அணியும் சுழற்சி முறையில் கடிகாரமாக மாற வேண்டும். அதில் ஒருவர் நிமிட முள்ளாகவும் இன்னொருவர் மணி முள்ளாகவும் இருப்பார். மூன்றாமவர் இதர போட்டியாளர்களுக்கு நேரத்தை அவ்வப்போது அறிவிப்பதோடு, குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை முடியாமல் தொடர்ந்தால் அதைத் தடுக்க வேண்டும்.

பிக்பாஸ் - நாள் 44

நேர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி வேலைகள் முடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண்களை இழப்பார்கள். கடிகாரமாக செயல்படுபவர்களில் யார் துல்லியமாக நேரத்தை கணக்கிடுகிறார்களோ அந்த அணியே வெற்றியாளர்.

அணி 1 (சனம், நிஷா, அனிதா) அணி 2 (பாலா, சுச்சி, ரம்யா) அணி 3 (கேபி, ஆரி, ரியோ), அணி 4 (சோம், சம்யுக்தா, அர்ச்சனா) அணி 5 (ஆஜீத், ஷிவானி, ரமேஷ்).

‘நம்ம அட்டவணைப்படி அந்தந்த நேரத்து வேலைகளை முடிச்சிட்டா.. மத்த நேரத்துல வேற வேலைகளைப் பார்க்கலாம். சமைக்கலாம். துடைக்கலாம்...’ என்று ஆஜீத்திற்கு டாஸ்க்கை விளக்கிக் கொண்டிருந்தார் ரியோ. (ஆஜீத்தான் இந்த வார கேப்டன் என்பது பல சமயங்களில் மறந்து விடுகிறது). ஆனால் ரியோவின் புரிதல் தவறானது. ஒவ்வொரு பணிக்கும் அட்டவணை தந்திருக்கும் போது அது அல்லாத நேரத்தில் செய்தால் டாஸ்க் விதிகளை மீறியதாகி விடலாம்.

கடந்த முறை லக்ஷுரி பட்ஜெட்டை இழந்து விட்டதால் இது குறித்த எச்சரிக்கை ஒவ்வொருவரிடமும் இருந்தது. உணவு தயாரித்துக் கொண்டிருந்த ரியோவை தடுத்து நிறுத்தி ‘காலை உணவு’க்குன்னு தனியா டைம் கொடுத்திருக்காங்க.” என்று அர்ச்சனா எச்சரித்தார். ‘அவ்ளோ நேரமா சாப்பிடாம இருக்க முடியும்?” என்று தயங்கிய ரியோ, மற்றவர்களும் எச்சரித்ததால் நிறுத்தி விட்டார்.

'வெயிலோட நிழல் நமக்கு நடுவுல வந்தா மதியம் பன்னிரெண்டு மணின்னு கண்டுபிடிச்சிடலாம்’ என்று பாலாஜி டெரராக யோசித்துக் கொண்டிருக்க, ‘மழை பெய்தா என்ன பண்றது?’ என்று பாலாஜியின் முன்யோசனையின் பின்பக்கத்தில் தீயை வைத்தார் அனிதா. இவர் நிச்சயம் முன்பென்ச் மாணவியாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

பிக்பாஸ் - நாள் 44

காலை 11.00 மணிக்கு முதல் அணி களத்தில் இறங்கியது. அனிதா நிமிட முள்ளாக மாற நிஷா மணி முள்ளாக மாறினார். சனம் நேர அறிவிப்பாளராக மாறி ‘குக்கூ.. குக்கூ’ என்று கத்திக் கொண்டிருந்தார்.

சரியான நேரமும், போட்டியாளர்களால் கணக்கிடப்படும் மணிக்கூண்டின் நேரமும் நிகழ்ச்சியில் தொடர்ந்து நமக்கு தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எனவே இவர்கள் எத்தனை நிமிடங்கள், நேரத்தை தவறாக கணிக்கிடுறார்கள் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்தது.

நவீன வசதிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மனித குலம் தனது சிந்தனையின் பரிணாம வளர்ச்சி வழியாக பல விஷயங்களைக் கண்டுபிடித்தது. வெயில் நிழலைப் பார்த்தும் வானத்தைப் பார்த்தும் நேரத்தை ஏறத்தாழ துல்லியமாக கணித்து விடுவதில் இப்போதும் கூட கிராமத்து மக்கள் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். ஆனால் நவீன கண்டுபிடிப்புகள் வந்து விட்ட பிறகு நமது மூளையின் இயக்கம் பல வகைகளில் சோம்பேறித்தனம் அடைந்து விட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு முன்பு ‘லேண்ட்லைன்’ காலத்தில், நாம் பல தொலைபேசி எண்களை மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தோம். ஆனால் இப்போது கைபேசி வந்துவிட்ட பிறகு எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டாம் என்கிற வசதி காரணமாக எந்தவொரு எண்ணும் நினைவில் இருப்பதில்லை. ஏற்கெனவே மனிதன் தனது மூளையில் குறைந்த சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நவீன வசதிகளைச் சார்ந்திருப்பதன் மூலம் அந்த இயக்கம் இன்னமும் குறைந்து விடுகிறது.

பன்னிரெண்டு மணியானவுடன் இவர்கள் ரயிலைத் தள்ளிச் செல்ல வேண்டும். மணிக்கூண்டின் படி நேரம் 12:00. ஆனால் அப்போது சரியான நேரம் 12:14. எனில் முதல் அணி 14 நிமிடங்கள் தவறாக கணக்கிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் அந்த ரயிலை எதற்காக தள்ளிச் செல்ல வேண்டும்? புரியவில்லை. பிக்பாஸ் சொல்லி விட்டார். அவ்வளவுதான். பாகுபலி பாலாஜி ரயில் வண்டியை முன்னே இழுத்துச் செல்ல, பின்னால் சிலர் தள்ளினார்கள். பேருந்தை தள்ளாமலேயே ‘தள்ளு... தள்ளு’ என்று வெறும் சத்தம் மட்டும் போடும் ஆசாமி போல ஷிவானி போன்றவர்கள் பின்னால் ஊர்வலமாக சென்றார்கள்.

பிக்பாஸ் - நாள் 44

ரயில் வருகிறது என்பதலோ என்னமோ அனிதா டிடிஆர் மாதிரி கறுப்பு கோட் போட்டுக் கொண்டு விதம் விதமான அசைவுகளுடன் மணியை கணக்கிட்டுக் கொண்டிருந்தார். பிறகு கிளி குரலில் கத்த வேண்டும் என்பதற்கு மாறாக வேறு குரலில் கத்திக் கொண்டே வீட்டிற்குள் உலவிக் கொண்டிருந்தார்.

'‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்-ன்ற மாதிரி ‘இன்ட்ரஸ்ட் வந்துட்டா அனிதா டாஸ்க்கை செமயா பண்றாங்க.. ஆனா விருப்பம் இல்லைன்னா சொதப்பிடறாங்க. விஜயதசமி டாஸ்க்ல ஆங்க்கரா இவங்களுக்குத்தான் நெறய வாய்ப்பு இருந்தது. அது இவங்களுக்குப் புரியல.. வருத்தப்பட்டாங்க'’ என்று அனிதாவைப் பற்றி சம்யுக்தா சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு விநாடியையும் வாய்விட்டுச் சொல்லி நேரத்தை கணக்கிடும் சலிப்பான டாஸ்க்கை ‘டான்ஸ் ஆடுவதின் மூலம்’ சற்று சுவாரஸ்யமாக மாற்றினார் பாலாஜி.

மதிய நேரம் 2 மணி. கடிகார அணியினர் மாற வேண்டிய சமயம். எனவே முதல் அணி கீழே இறங்கியது. இவர்கள் மூன்று மணி நேரத்தை, மூன்று மணி பதினெட்டு நிமிடங்களாக கணித்தார்கள்.

அடுத்த அணியான பாலா, சுச்சி மற்றும் ரம்யா அணி களத்தில் கடிகாரமாக இறங்கியது. அப்போது மழை பெய்ய ஆரம்பித்தாலும் (அனிதா ஒரு தீர்க்கதரிசிதான்) குடை பிடித்து டாஸ்க்கைத் தொடர்ந்தார்கள். பிக்பாஸ் தந்த அறிவிப்பு ஒன்றை எடுக்கப் போன ரியோவிற்கு குடைபிடித்து கூடவே நடந்து வந்தார் ஷிவானி. (பாலாஜியை வெறுப்பேற்றுவதற்காக இருக்குமோ... என்னவோ).

அந்த புதிய அறிவிப்பு என்னவென்று பார்த்தால், மக்கள் அரைமணி நேரத்திற்கு Gibberish-ல் பேச வேண்டுமாம். ஆனால் இது மற்றவர்களுக்கு புரியவும் வேண்டுமாம். அறிந்த மொழியை மறந்து விட்டு, விநோதமான ஒலிகளின் மூலம் அல்லது சொற்களைப் புரட்டிப் போட்டு பேச வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

பிக்பாஸ் - நாள் 44

பிக்பாஸ் வீடு ஏற்கெனவே மண்டை குழம்பி ஒரு மார்க்கமாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறது. அதில் தீயை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தார் பிக்பாஸ். அரை மணி நேரத்திற்கு விநோதமான சப்தங்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருந்தன. இந்த டாஸ்க்கைப் பற்றி அறியாத ஒருவர் எவராவது அப்போது உள்ளே நுழைந்திருந்தால் மரண பீதியோடு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியிருப்பார்.

‘குங்ஃபூ படங்களில் வரும் சண்டை சத்தம், கொரிய மற்றும் சீன மொழி கலந்த விசித்திர சத்தம், டப்பிங் படங்களின் சத்தம், ஊசி வாங்கலையோ ஷாமி.. என்கிற சத்தம் போன்றவற்றை கலந்து கட்டி ரணகளமாக அடித்தார்கள். ரமேஷிற்கு இந்தப் பிரச்னையே இல்லை. ‘வாயைத் திறந்து பேசினால்தானே!

உண்மையில் தேவையான நேரத்தில் மட்டும் பேசினாலே போதும். இயல்பு வாழ்க்கையில் அதைத்தானே செய்கிறோம்? ஆனால் இவர்கள் சும்மாவே இதை கத்திக் கொண்டிருந்தார்கள். ஆரி மூக்கினால் கொடுத்த சத்தத்தை அப்படியே சீன மொழியாக எடுத்துக் கொள்ளலாம். கழிப்பறைக்குள் இருந்த கேபியை வெளியே இருந்த ரியோவும், சோமும் இணைந்து விநோதமான சப்தத்தில் கத்தி கலாட்டா செய்தது நல்ல காமெடி. இதில் சோமு விரல்களை நீட்டி ‘ஒன்றுக்கா... இரண்டுக்கா...’என்று அவரை விசாரித்தது உவ்வேக்..

ஷிவானி சாதாரணமாகப் பேசினாலே விநோத ஒலியாகத்தான் கேட்கும். அதில் அவர் மேலும் மசாலாவைக் கூட்டி பேசும் போது டிவி ஸ்பீக்கர் வெளியே வந்து விடுவது போல குதித்தது. அனிதா... கேட்கவே வேண்டாம். வழக்கமாகவே ஜெனிலியா மோடில்தான் இருப்பார். இப்போது தமிழ் சினிமாவின் அத்தனை கதாநாயகிகளின் கலவையாக மாறி விட்டார்.

பிக்பாஸ் - நாள் 44

இந்த லட்சணத்தில் இவர்கள் இந்த சப்தத்தை வைத்துக் கொண்டு அந்தாக்ஷரி வேறு விளையாடினார்கள். அனிதா,ஷிவானி, சனம் குழு நடனமாடிக் கொண்டிருக்க கடிகார அணியில் இருந்த பாலாஜி, கையில் இருந்த துணியை விளையாட்டாக எறிந்தார். அவருடைய குறி ஷிவானிக்கோ, என்னமோ... ஆனால் அது சனத்தின் மீது விழவும் ‘அச்சச்சோ’ என்று நாக்கை கடித்துக் கொண்டார். (‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை தெரு நாய்க்கு தான் கிடைக்கனும்னு விதி இருந்தா அதை யாராலையும் மாத்த முடியாது’ என்பது சந்தானம் திரைப்படத்தின் ஒரு காமெடி).

அரை மணி நேரம் முடிந்ததை ‘குக்கூ’ சத்தத்தின் மூலம் சுச்சி தெரியப்படுத்தியதால் Gibberish டாஸ்க் ஒருவழியாக முடிந்து தொலைத்தது. (காது ங்கொய்…)

கடிகார அணி தனது பணியை முடித்து கீழே இறங்கியது. ஆனால் இவர்கள் மூன்று மணி நேரத்தைக் கணக்கிட 4 மணி நேரம் 12 நிமிடங்களை எடுத்துக் கொண்டது ஓவர். (ரம்யா இருந்துமா அந்த டீம் புத்திசாலித்தனமா செயல்படலை?!) சுச்சியை அப்படியே தூக்கி இறக்கினார் பாலாஜி. (ஷிவானியை வெறுப்பேத்துறது இப்ப இவர் டர்ன் போல). இருந்தாலும் தாம் நேரத்தை தவறாக கணக்கிட்டு விட்டோமோ என்று பாலாஜிக்கு சந்தேகம் தோன்றிக் கொண்டிருந்தது.

டிவியில் ஓர் அறிவிப்பு வந்தது. சரியாக 06.00 மணிக்கு ஸ்டோர் ரூம் கதவு 30 விநாடிக்கு மட்டும் திறந்திருக்குமாம். பிக்பாஸ் ஸ்பெஷல் Snacks தருகிறாராம். (இந்த அறிவிப்பு வந்த போது சரியான நேரம் 07:10). சிறப்பு சிற்றுண்டிக்காக ஸ்டோர் ரூம் வாசலில் படுக்கையைப் போட்டிருந்தார்கள். ஆனால் வந்ததென்னவோ டீயும் சுண்டலும்தான். பாலாஜி வெறுத்துப் போனார். கதவைத் திறந்து எடுத்தவர் இதை கூவி விற்க வேண்டுமாம்.

பிக்பாஸ் - நாள் 44
‘வாட்டரு.. வாட்டரு பாக்கெட்’ என்று கூவி விற்ற அனுபவம் சோமிற்கு ஏற்கெனவே இருந்ததால் ‘டீ சாப்பிடுங்க மேடம்’ என்று விற்றுக் கொண்டிருந்தார். ‘'என்னய்யா... சுண்டல் விக்கச் சொன்னா கடலை போடறே’' என்று பாலாஜியை கலாய்த்துக் கொண்டிருந்தார் சனம்.

தண்ணீர் பிடிக்கும் நேரம். உண்மையில் அப்போது நேரம் 8:10. ஆனால் 06:30 என்றது மணிக்கூண்டு அணி. மழைக்காலம் என்பதால் இவர்களுக்கு அது தெரியவில்லை போல. நிஷாவிற்கு குழாயடிச் சண்டையில் பல வருட ட்ரெய்னிங் உண்டு போல. புகுந்து ரணகளமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவரும் அர்ச்சனாவும் ‘அவன் இவன்’ படத்தில் வரும் அம்பிகா –பிரபா போல பரஸ்பரம் வண்டை வண்டையாக திட்டிக் கொண்டார்கள். தலைமுடியை இழுத்துக் கொலைவெறியுடன் இவர்கள் சண்டை போட ரம்யா விசிலடித்து மகிழ்ந்தார். ஆனாலும், நிஷா கொஞ்சம் ஓவர்ஆக்ட்டிங் கொடுத்து சொதப்பினார்.

தண்ணீர் நின்று போனாலும் நிஷாவின் அலப்பறை நிற்கவில்லை. ‘நான் ஆம்பளைக்கு ஆம்பளைடி’ என்று எல்லோரையும் சுழற்றி சுழற்றி சூறாவளியாக தாக்கிக் கொண்டிருக்க, அவரைத் தடுத்து நிறுத்துவதற்கான உபாயத்தை ரமேஷ்தான் முதலில் கண்டுபிடித்தார். நிஷாவின் இடுப்பில் கை வைத்தால் கூச்சம் வந்து விடும் என்பதை ‘திருடர்கள்’ டாஸ்க்கில் ஏற்கெனவே பார்த்தோம். அவர் இப்போது சரியாக நினைவுப்படுத்த, அதை வைத்து யானையை அடக்குவது போல நிஷாவை அடக்கினார்கள்.

உண்மையான நேரம் 09:30. அந்தச் சமயத்தில் மணி எட்டு ஆகி விட்டதாக சொல்லி ரியோ அணி கடிகாரத்தில் இருந்து இறங்கியது. இந்த அணி மூன்று மணி நேரத்தை கணிக்க எடுத்துக் கொண்ட நேரம், மூன்று மணி 1 நிமிடம். அதாவது ஒரு நிமிடம் மட்டுமே தவறு. வாவ்.. எனில் இந்த அணி மிகத் துல்லியமாக செயல்பட்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் - நாள் 44

இந்த ரணகளத்திற்கு இடையில் ஒரு டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். அதாவது அடுத்த பத்து நிமிடத்திற்கு கறுப்பு –வெள்ளை திரைப்படங்களில் வரும் பாத்திரங்களைப் போல் பேச வேண்டுமாம். ‘பராசக்தி கோர்ட் ரூம் வசனத்தை சிறப்பாக பேசிய நிஷா இடையில் ‘டங் ஸ்லிப்’ ஆகியதால் சொதப்பினார். இவரது வசனத்தின் இடையே சொந்தக் கதையை கலந்தடித்தார் நிஷா.

அடுத்ததாக ‘ரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதாவாக வந்தார் அனிதா. எம்.ஆர்.ராதாவாக அல்லாமல் ‘அலைகள் ஓய்வதில்லை' ராதா போல பேசினாலும் ஒரு மாதிரி நன்றாகவே சமாளித்தார் அனிதா. தனது பேச்சின் இடையே பிக்பாஸ் வீடு ‘கப்படிக்கும் கதையையும்’ லோக்கல் மொழியில் போட்டுக் கொடுத்து பிக்பாஸை நாறடித்தார் அனிதா.

எம்.ஜி.ஆர் குரலை நன்றாகவே மிமிக்ரி செய்தார் ரியோ. இவர் கேபியை வைத்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். வசனத்தின் இடையே நாயகியின் தோள்பட்டையை மசாஜ் செய்யத் தவறவில்லை. எம்.ஜி.ஆரின் பிரத்யேக பாணியில் அது முக்கியமானது. நாயகியை நம்பியார் (ரமேஷ்) வந்து குத்தி விடுவதால் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையில் ஜாலியாக கத்திச் சண்டை நடந்தது.

கேமராவைப் பார்த்து வடிவேலுவின் பாடி லேங்வேஜில் சிறப்பாக பேசிக் கொண்டிருந்தார் நிஷா. கிச்சனில் ஆஜீத் உதவி செய்ய வந்த போது சப்பாத்தி மாவை வெடுக்கென்று சுச்சி பிடுங்கிக் கொண்டதாக சிறிய பஞ்சாயத்தில் இறங்கினார் கேபி. சுச்சியின் செய்கையில் மனம் புண்பட்ட ஆஜீத் அங்கிருந்து விலகி விட தன் ஆட்சேபத்தை சுச்சியிடம் நேராகவே கேட்டு விட்டார் கேபி. ‘ஹே.. நான் இயல்பாத்தான் இழுத்தேன்’ என்று சச்சி சொல்ல பிரச்னை பெரிதாகாமல் முடிந்தது. ஆனாலும் கேபி அதை மற்றவர்களிடம் சொல்லி புகைந்து கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 44

“ஏம்ப்பா.. தம்பி.. பாத்ரூம்லாம் ஒழுங்கா கழுவினியா..?” என்று ஏலம் எடுத்த கான்ட்ராக்டர் போல ஷிவானி கேட்க “ஊறினப்புறம்தான் கழுவணும்... நீ முன்ன, பின்ன பாத்ரூம் சுத்தம் செஞ்சிருக்கியா?” என்று பதிலுக்கு பாலாஜி நோஸ்கட் செய்து விட முகம் சுருங்கிப் போய் அமர்ந்தார் ஷிவானி. அவரை இழுத்து ஜோடியாக ‘இங்லீஷ்’ நடனம் ஆடி கூல் செய்தார் பாலாஜி.

கடிகார அணி கீழே இறங்கியது. சோம், சாம், அர்ச்சனா ஆகியோரைக் கொண்ட இந்த அணி, மூன்று மணி நேரத்தைக் கணிக்க எடுத்துக் கொண்ட நேரம் 3 அணி 8 நிமிடங்கள். பரவாயில்லை.

ரியோ தன் மனைவிக்கு ‘ரொமான்ட்டிக்காக’ ஹார்ட்டின் வரைந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னதோடு இந்த நாள் நிறைவிற்கு வந்தது.

பிக்பாஸ் - நாள் 44

ஆக.. இருப்பதிலேயே பாலா, சுசித்ரா, ரம்யா ஆகியோரைக் கொண்ட அணிதான் நேரத்தைக் கணக்கிடுவதில் அதிகம் சொதப்பியிருக்கிறது. ஒவ்வொரு அணியும் இதை மூன்று முறை செய்ய வேண்டும். நாளை என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

நேரக் குழப்பமும் காலக்குழப்பமும் கலந்து அடித்ததால் இன்றைய எபிஸோட் ‘நோலன்’ படம் பார்த்தது போலவே இருந்தது என்றால் நோலனின் ரசிகர்கள் நிச்சயம் கொலைவெறியுடன் அடிக்க வந்து விடுவார்கள்.


source https://cinema.vikatan.com/television/anitha-ramya-steal-the-show-bigg-boss-tamil-season-4-day-44-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக