Ad

திங்கள், 16 நவம்பர், 2020

``எங்க நண்பர்கள் இவங்க!" - வௌவால்களைக் கொண்டாடும் ஐரோப்பிய திராட்சை விவசாயிகள்... ஏன்?

உலகில் ஒரு மிகப்பெரிய பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸை பரப்பும் ஒரு முக்கிய கருவியாக இது இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்ததால் ஏற்பட்ட அச்சம்தான், மிகக் குறுகிய காலத்தில், மனிதனின் முதல் எதிரியாக வௌவால்கள் சித்திரிக்கப்பட்டுவிட்டன.

ஆனால், மனிதனால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த வௌவால்களுக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விவசாயிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர். உலகின் சிறந்த ஒயின் தயாரிக்கும் பிராந்தியங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் போர்டியாக்ஸ் பகுதியில், வௌவால்கள் ஹீரோக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

திராட்சை

கடந்த சில ஆண்டுகளாகவே, ஐரோப்பிய திராட்சை உற்பத்தியாளர்கள் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் பூச்சித் தாக்குதலால், இப்பகுதியில் திராட்சை விளைச்சல் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா தாக்கம் அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. விளைச்சல் குறைவு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஒயின் விற்பனை சரிவு என இருபக்கமும் அடி வாங்கும் விவசாயிகளுக்கு இந்தப் பாலூட்டிகள் ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளன.

இரவு நேரத்தில் திராட்சைத் தோட்டங்களுக்கு வரும் இந்தப் பாலூட்டிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைப் பெருமளவில் கபளீகரம் செய்து, இயற்கையாகவே பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகளுக்கு உதவுகின்றன.

திராட்சை விளைச்சல், தரத்தை அதிகரிக்க இவை எவ்வளவு தூரம் உதவியுள்ளன என்பது துல்லியமாகத் தெரியாத போதிலும், இப்பகுதியில் உள்ள ஒயின் தயாரிப்பாளர்கள், இந்த வௌவால்களை இருகரம் கூப்பி வரவேற்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் வயல்களில், வௌவால்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்கி வருகின்றனர்.

வயல்களில் மரப் பெட்டிகளை வைத்து, தண்ணீர் வசதி, புல்வெளிகள் அமைத்து, வௌவால்களுக்கு ஏற்ற வாழ்விடத்தை உருவாக்கியுள்ளனர். தீராத பசியுடன் வயல்களில் படையெடுக்கும் இந்த வௌவால் கூட்டம் திராட்சையைத் தாக்கும் ஐரோப்பிய மோத் மற்றும் பெர்ரி மோத் எனப்படும் அந்துப்பூச்சிகளை உண்ணும். இந்தப் பூச்சிகள் பயிர்களில் சாம்பல் அழுகல் நோயை உருவாக்குகின்றன.

வௌவால்

அப்பகுதியில் உள்ள 21 வயல்களில் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில், வௌவால்கள் தங்கும் வயல்களில் பூச்சிகள் கட்டுப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், பூஞ்சை தாக்கமும் குறைந்திருந்தது.

பூஞ்சை தாக்கிய திராட்சை ஒயினின் தரத்தைக் குறைத்துவிடும். பூஞ்சை தாக்குதல் குறைந்ததால், ஒயின் தரம் உயரும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

அனைத்துக்கும் மேல், ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது. திராட்சை ரசத்தின் நறுமணத்துக்கு தீங்கு விளைவிக்கும் சில பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஒயின் தரம், சுவை மேம்படும் என அவர்கள் நம்புகின்றனர். புற்றுநோயை உருவாக்கக்கூடிய கார்சினோஜெனிக் ரசாயனம் உள்ள பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கவும் வௌவால்கள் உதவுகின்றன. தற்போது ஐரோப்பிய திராட்சை தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 55 சதவிகிதம்வரை குறைந்துள்ளது.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டத்தின்படி (EGalim Law) 2030-க்குள் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் தரங்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் ஒயின் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்தச் சட்டத்தை எளிதில் கடைப்பிடிக்க இந்த வௌவால்கள்தான் உதவுகின்றன.

மற்ற பறவைகளைப் போல வௌவால்களும் எங்களுக்கு நண்பர்கள் என்கின்றனர் ஐரோப்பிய திராட்சை விவசாயிகள். வௌவால்கள் உலகின் அனைத்து விவசாயிகளுக்கும் நண்பன்தான்.

திராட்சை

ஒரு வௌவால் ஓர் இரவில், தங்கள் உடல் எடையில் 120 சதவிகிதம் வரை உணவு உட்கொள்ளும். சராசரியாக ஒரு மணி நேரத்தில் 1,200 பூச்சிகளைக் கொன்று தின்றுவிடும். ஓர் இரவில் சுமார் 6,000 முதல் 8,000 பூச்சிகள் காலிசெய்துவிடும்.

அமெரிக்காவில் வௌவால்களின் நடவடிக்கைகளால், விசாயத் தொழில்களுக்கு சுமார் 23 பில்லியன் முதல் 53 பில்லியன் டாலர்கள் வரை லாபம் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க திராட்சைத் தோட்டங்களில், பூச்சிகளை அழிக்க வௌவால்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பல தோட்டங்களில் 300-க்கும் அதிகமான வௌவால்கள் தங்கும் வகையில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல லெய்ஸ்லர் வகை வௌவால்கள் தெற்கு ஐரோப்பா முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தோனேசியாவிலும் கோகோ தோட்டங்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வௌவால்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் 780 மில்லியன் டாலர் வரை சேமிக்கப்பட்டுள்ளது. வௌவால்கள் அந்துப்பூச்சிகளை முட்டையிடும் முன்னரே கொன்றுவிடுவதால், அந்துப்பூச்சி இனப்பெருக்கம் கணிசமாகக் குறைகிறது. வயலில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளரி அந்துப்பூச்சிகள் (cucumber beetles), க்ரீன் ஸ்டின்க் (green stink bugs) பூச்சிகளுக்கு பழுப்பு நிற வௌவால்கள் பரம எதிரி.

வௌவால்

உலகின் ஒரு மூலையில் எதிரியாகப் பார்க்கப்படும் வௌவால்கள் மறு மூலையில் சிறந்த நண்பனாகப் பார்க்கப்படுகின்றன. சீனாவில் உயிர்க்கொல்லியாகச் சித்திரிக்கப்படும் இவை, ஐரோப்பாவில் வாழ்வாதாரத்தைக் காக்கும் ரட்சகனாக இருக்கின்றன.

தற்போது விவாசாயிகளின் வாழ்வாதாரம், வெற்றி இரண்டும் இயற்கையின் கையில்தான் இருக்கிறது என்பதற்கு வௌவால்களே சாட்சி. ஆனால், இத்தனை நன்மைகள் புரியும் இந்த வௌவால்களின் ஒரே எதிரி: அதன் வாழ்விடங்களை அழிப்பது முதல், ரசாயன பூச்சிக்கொலிகளை வயலில் தெளித்து அதன் உணவை (பூச்சிகளை) நஞ்சாக்குவது வரை அனைத்து பாதக நடவடிக்கைகளில் ஈடுபடும் மனிதன் மட்டுமே.

வௌவால்கள் பற்றிய தகவல்கள்:

இரவில் செயல்படும் வௌவால்களுக்கு 15 சென்டிமீட்டர் முதல் 170 சென்டிமீட்டர் வரை நீளமான இறக்கைகள் உள்ளன. சிறிய வௌவால்கள் மூன்று சென்டிமீட்டர் நீளமும், இரண்டு கிராம் உடல் எடையும் கொண்டவை. பொதுவாக மந்தமான பார்வை கொண்டவையாக இருந்தாலும், பழம் தின்னும் வௌவால்கள் கூர்மையான பார்வை கொண்டவை.

மெக்சிகோ வௌவால்கள் ஒரு மணிக்கு 160 கி.மீ வேகம் பறக்கும் திறன் படைத்தவை. அவற்றில், ரத்தம் குடிக்கும் வௌவால்களும் உண்டு. அவை பறவை மற்றும் விலங்குகளின் ரத்தத்தை குடித்து வாழும். பெண் வௌவால்கள் தேவைப்படும்போது கருத்தரிக்கும் திறன் கொண்டவை. அவை தங்களது உடலில் ஆண் விந்துக்களை சேமித்து வைத்துக்கொண்டு தேவையான பருவத்தில் கருத்தரிக்கும் திறன் கொண்டவை.

வௌவால்

கொரோனா வைரஸ் பரவியபோது, வௌவால்களின் மீதான கோபம் பல மடங்கு பெருகியது. ஒரு கட்டத்தில் அவற்றை முற்றிலுமாக அழித்துவிடலாமா என்ற கேள்விகூட எழுந்தது. ஆனால், சூழலைப் பாதுகாப்பதிலும், இயற்கையாகப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் அவற்றின் பங்கு ஈடு இணையற்றது.

உலகம் முழுவதும் இறப்பு, தீயசக்தி, கெட்ட சகுனம் போன்றவற்றின் அடையாளமாகச் சித்திரிக்கப்படும் இந்த வௌவால்கள், சீனாவில் மட்டும் மகிழ்ச்சியின் அடையாளமாகத் திகழ்கின்றன.



source https://www.vikatan.com/news/agriculture/how-bats-helping-european-winegrowers-and-vineyards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக