Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

`அரோகரா' என்றால் துன்பங்கள் அறுந்து இன்பங்கள் விளையும்... கந்த சஷ்டி விரத சிறப்புகள்!

கந்த சஷ்டி விரத காலங்களில், முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களில் எல்லாம் விண்ணை முட்டும் கோஷமாக 'அரோகரா' எழுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!' என்று திருச்செந்தூரில் சூர சம்ஹார விழா நாளில் விண்ணை முட்டும் இந்த கோஷத்தைக் கேட்டு சிலிர்க்காதவர்கள் உண்டா!

இந்த ஆண்டு இந்த கோஷம் பொதுவெளியில் கேட்காமல் இருக்கலாம். எனினும் முருக அன்பர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் கந்த சஷ்டி விரத நாள்கள் அனைத்திலும் தோன்றுமே! 'அரோகரா' என்பதன் பொருளென்ன?! அதைச் சொல்வதால் என்ன பலன்கள் கிட்டும் என்பதை பார்ப்போம்.

கந்த சஷ்டி விரத சிறப்புகள்

திருவண்ணாமலையில் மட்டுமே 'அண்ணாமலைக்கு அரோகரா, எங்கள் உண்ணாமுலையம்மைக்கும் அரோகரா' என்று பக்தர்கள் கூடி ஒலி எழுப்பி வணங்குவது வழக்கம். முதலில் சைவ சமய அடியார்களின் வழிபாட்டு கோஷமாக இருந்த இந்த 'அரோகரா' முதன்முதலில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரால் உருவானது என்பர். காழிப்பிள்ளையான திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் திரு அவதாரமாகவேப் போற்றப்படுபவர். சிறு பிள்ளையான இவரை சுமந்து செல்ல முத்துப் பல்லக்கை ஈசனே இவருக்கு அளித்தார். பல்லக்கைச் சுமந்து சென்ற அடியவர்கள், ஒருமுறை சுமக்கும் களைப்பு நீக்க 'ஏலேலோ ஏலேலோ..." என்று பாடியபடி வந்தனர். இந்த சந்த நயத்தில் மயங்கிய காழிப்பிள்ளை அதன் பொருளைக் கேட்டார். களைப்பு நீங்கப் பாடிய அந்த ஏலேலோவுக்குப் பொருள் ஏதுமில்லை என்று அவர்கள் கூற, சகலமும் சிவமாக சிந்திக்கும் ஞானப் பிள்ளை அவர்களுக்கு பொருள் கொண்ட சந்தப் போற்றுதலை அருளியது. அதுதான் 'ஹர ஹரோ ஹரா' என்ற துதி. 'ஈசனை வணங்கி இதைச் சொன்னால் உங்கள் களைப்பு நீங்குவதோடு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்!' என்றும் அருளினார்.

Also Read: கந்த சஷ்டி 2020: அழகு முருகனின் அருள் கூறும் 7 சிறப்புத் தகவல்கள்!

ஹர என்றால் ஈசன், ஹரோ என்றால் துன்பம், ஹரா என்றால் அறுவது. ஆக 'ஹர ஹரோ ஹரா' என்றால் 'ஈசனே துன்பங்களை நீக்கி எங்களுக்கு நல்லருள் புரிவாய்!' என்று பொருள். இன்னும் ஒருவகையில் கூறுவதானால் 'ரோகம் என்றால் பிணி; அரோகம் என்றால் பிணியற்ற வாழ்வு. அரன் என்றால் ஈசன்; ஹர என்றால் நீக்குபவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது 'பிணியாற்ற வாழ்வை அருள்வாய் ஈசனே!' என்று அர்த்தம். மேலும் வெறுப்பை நீக்கி, அன்பை வளர்ப்பாய் என்றும் அர்த்தமிருப்பதாக பெரியோர்கள் கூறுவர்.

கந்த சஷ்டி

இப்படி பலவகைகளில் பொருள் தரக்கூடிய இந்த அற்புத வழிபாட்டுத் துதி நாயன்மார்களின் காலத்துக்குப் பிறகு சைவ வழிபாட்டில் வழக்கொழிந்தது. மலையின் மீது ஏறி காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் களைப்பு நீக்கும் மந்திரச் சொல்லானது அரோகரா. 'ஹர ஹரோ ஹரா' என்பதே எளிய மக்களின் வழிபாட்டில் திரிந்து இணைந்து அரோகரா என்றானது. எப்படி மாறினாலும் என்ன... கந்தபெருமானை மகிழ்விக்கும் எளிய மந்திரமாக எங்கும் மாறிவிட்டது. 'சரவணபவ' என்ற ஷடாட்சரத்துக்கு இணையாக இந்த 'அரோகரா' என்ற வாழ்த்துக் கோஷம் உருவாகிவிட்டது. அரோகரா என்பவருக்குப் பிணியும் இல்லை; துன்பமும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா... குமரனுக்கு அரோகரா! என்று வாய்விட்டு மனம் மலர்ந்து கூவிப் பாருங்கள். கந்தன் வேண்டியதை எல்லாம் கொடுப்பான். வேதனையற்ற வாழ்வை அருள்வான்!


source https://www.vikatan.com/spiritual/gods/2020-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக