Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

சிவகாசி: தடையால் ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம் - மீண்டும்உற்பத்தியைத் தொடங்க தயக்கம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு உள்ளே 3 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தியில் 5 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத்தை சிவகாசியைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்தி செய்து வருகின்றன.

பட்டாசு விற்பனை

இந்நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுகளால் ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, சிக்கிம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் இம்மாதம் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்தனர். இத்தடையை நீக்கக்கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அம்மாநில முதல்வர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால், அறிவித்தபடியே தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பட்டாசு வெடிக்க அறிவிக்கப்பட்ட தடையால் சிவகாசியில் ரூ.600 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன், மீண்டும் பட்டாசு உற்பத்தியைத் தொடங உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய டான்பாமா சங்கத்தின் (தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்) தலைவர் கணேசன்,``சிவகாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள 1,070 பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகளை உற்பத்தி செஞ்சுட்டு வர்றோம்.

பட்டாசு

இந்த வருஷம் கொரோனா ஊரடங்கினால் ரூ.2,100 கோடி மதிப்பிலான மதிப்பிலான பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதமே அந்த 7 மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பியிருந்த சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான பட்டாசுகள் அந்த மாநிலங்களில் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.

இந்த நிலையில், தடை உத்தரவால் அம்மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் சிவகாசியில் குடோன்களில் ரூ.600 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், எங்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிற்கும் பட்டாசு வெடிப்புக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை. தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களிலும் அடுத்து வருகிற கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகை, திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் கட்களின் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

பட்டாசு

இல்லாவிட்டால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். வழக்கமாக தீபாவளிப் பண்டிகை முடிந்த 10 நாள்களில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியை மீண்டும் தொடங்கிவிடுவோம். ஆனால், தற்போதைய பட்டாசு தேக்கம் காரணமாக உடனடியாக உற்பத்தியைத் தொடங்க உற்பத்தியாளர்கள் தயங்குகிறார்கள். எனவே, உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே மீண்டும் உற்பத்தி தொடங்குவது முடிவு செய்ய முடியும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/sivakasi-firecrackers-factories-refuses-to-begin-production-over-loss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக