Ad

திங்கள், 16 நவம்பர், 2020

கஜா புயல்: `முடிந்துப்போன புராணக் கதையா..?’ - நினைவுகூரும் டெல்டா மக்கள்

கஜா புயலின் கோரத்தாண்டவம்

கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்பத்திய அதிர்வுகள் இப்போதும் காவிரி டெல்டா மக்களின் மனதில் நிலைப்பெற்றுள்ளது. இரண்டாண்டுகள் நிறைவடைந்தாலும் கூட, அந்த நள்ளிரவு மற்றும் அதிகாலைப் பொழுதை, பேரதிர்ச்சியுடனும் ரணத்துடனும்தான் நினைவு கூர்கிறார்கள். கஜாவின் வெறியாட்டத்தை தொடர்ந்து, தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தன. ஏராளமான மனித உயிர்கள் பறிப்போயின. கால்நடைகள் மாண்டுப்போயின. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. லட்சக்கணான மரங்கள் கீழே சாய்ந்தன. அந்த பெரும் சோகம் நிகழ்ந்து, இன்று அதிகாலையுடன் இரண்டாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு முழுமையாக கிடைத்துவிட்டதா ?

கஜா புயல் பாதிப்பு

2018, நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு... கஜா புயல் எழுப்பிய பேரிரைச்சல், டெல்டா மக்களை, மரண பயத்தில் உறைய வைத்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஒட்டுமொத்த டெல்டா பூமியும் இருளில் மூழ்கியது. ஏதோ ஒரு பெரும் அசாம்பாவிதம் நடந்துக்கொண்டிருக்கிறது என உள்ளுணர்வில் உணர்ந்தார்கள். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை பெரும்பாலான மக்களால் யூகிக்க முடியவில்லை. பொழுது விடிந்த பிறகுதான், இங்கு நிகழ்ந்து முடிந்த பேரவலம், வெளியுலகை உலுக்கி எடுத்தது.

வீரசேனன்

கஜா புயலின் பேரதிர்ச்சி பொழுதுகளை நினைவுகூருகிறார் டெல்டா பகுதி விவசாயியான வீரசேனன். மேலும், துயர் துடைப்பு பணிகளில் தமிழக அரசு எந்தளவிற்கு செயல்பட்டுள்ளது எனவும் விவரிக்கிறார். ‘’கஜா புயல் வீசப்போகுது... இதனால் மிகப்பெரிய அளவுல பாதிப்புகள் ஏற்படப் போகுதுனு, நாலஞ்சி நாள்களுக்கு முன்னாடியே தமிழக அரசு ரெட் அலார்ட் கொடுத்துடுச்சி. மக்கள் பாதுகாப்பாக இருக்கணும்னு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தொடர்ச்சியாக எச்சரிக்கை செஞ்சிக்கிட்டே இருந்தார். முன்னெச்சரிக்கை அறிவிப்புல சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ல கோட்டை விட்டுடுச்சு. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் உணவு வழங்கவும் முன்கூட்டியே முகாம்கள் அமைச்சிருக்கணும். மீட்பு மற்றும் துயர் துடைப்பு படைகளையும் தயார் நிலையில வச்சிருக்கணும்.

புயல் கடுமையாக இருந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் இருள்ல மூழ்க வேண்டியிருக்கும்னு முன்கூட்டியே திட்டமிட்டு, கிராமப்புற வீடுகளுக்கு மெழுகு வர்த்தி கொடுத்திருக்கணும். குடிநீர் வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செஞ்சிருக்கணும். ஆனால் எதையுமே தமிழக அரசு செய்யலை. கஜா புயல் கடலூர் வழியாகதான் கரையை கடக்கப்போகுதுனு வானிலை ஆராய்ச்சி நிலையம் சொல்லியிருந்ததால, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதிகள்ல தமிழக அரசு முழுமையாக கவனம் செலுத்தல.

கஜா புயல் பாதித்த வீடு

ஆனா ஆச்சரியம், புயல் அனுபவம் பெற்ற மீனவர்கள் மிக சரியாக கணிச்சி, அதிராம்பட்டினம் வழியாக தான் புயல் கரையை கடக்கப்போகுதுனு முன் கூட்டியே சொன்னாங்க. இதனால் தான் பயணப்பட்ட பகுதிகள்லயும் இதன் சுற்றுவட்டார பகுதிகள்லயும் கடுமையான இழப்பு. மரங்கள் விழுந்து ஏராளமான கிராமங்கள் தனிதனியே தீவுகள் போல துண்டிக்கப்பட்டதால, மக்கள் சோறு இல்லாமல், குடிக்க தண்ணிர் இல்லாமல் திண்டாடினாங்க. மனிதநேயம் மிக்க தனிநபர்கள் களத்துல இறங்கி உதவுனதுனாலதான், மக்கள் ஓரளவுக்கு அந்த நேரத்துல மீண்டு வர முடிஞ்சிது. புயல் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள், அராசாங்கத்துக்கிட்ட நல்ல பேரு வாங்குறதுக்காக, பாதிப்பின் அளவை திட்டமிட்டே குறைச்சி காட்டினாங்க.

கஜா தாண்டவம்

புயல்ல வீடுகள் பாதிக்கப்பட்டவங்களுக்கு இன்னும் முழுமையாக இழப்பீடு கிடைக்கல. ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலை புறம்போக்குல வசிக்கும் மக்களுக்கு, இதற்கு மாற்றாக, மூன்று சென்ட் நிலம் வழங்கப்பட்டு, மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியில் வீடு கட்டித் தரப்படும்னு தமிழக அரசு அறிவிச்சிது. ஆனால் அதுக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கூட இன்னும் நடக்கலை. கஜா புயல்ல 80 லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது. தென்னையை இழந்த விவசாயிக்கு ஒரு மரத்துக்கு 1,100 ரூபாய் வழங்கப்படும்னு அரசு அறிவிச்சிது. அதுவும் எல்லா விவசாயிகளுக்கும் முழுமையாக கிடைக்கலை. நெல் வயல்கள்ல உள்ள தென்னை மரங்களுக்கும், புறம்போக்கு நிலத்துல உள்ள வீட்டுத்தோட்டங்கள்ல இருந்த தென்னைக்கும் இழப்பீடு வழங்கப்படலை.

கஜா புயலில்

பல ஆண்டுகளுக்கு முன்னாடி, அரசு ஆவணங்கள்ல தென்னந்தோப்புனு குறிப்பிடப்பட்டிருந்த தென்னைக்கு தான் இழப்பீடு கொடுத்தாங்க. டெல்டா பகுதிகள்ல ஒரு ஹெக்டேருக்கு 225 மரங்கள் வளர்ப்போம். ஆனால் அதிகபட்சம் 175 மரங்களுக்கு தான் இழப்பீடு கொடுத்தாங்க. சமீப காலங்கள்ல உருவாக்கப்பட்ட தென்னைந்தோப்புகள்ல இருந்த மரங்களுக்கு இந்த இழப்பீடும் கூட கிடைக்காமல் போயிடுச்சு.

கஜாவில் சிதிலமடைந்த குடிசை

தென்னையை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு, புதிய தென்னங்கன்றுகள் கொடுத்துச்சு. அது தரமில்லாமல் இருந்ததுனாலயும், டெல்டா பகுதிக்கு ஏற்றதாக இல்லாததாலயும், அந்த கன்றுகளால் விவசாயிகளுக்கு பலன் இல்லாமல் போயிடுச்சி. தனியார் நர்சரியில ஒரு தென்னங்கன்று 400-500 ரூபாய்னு விலை கொடுத்து வாங்கி, புது கன்றுகள் நட்டாங்க. பூச்சித்தாக்குதல்களால், அதுவும் வளராமல் போயிடுச்சு. கஜா புயல்ல தென்னை மட்டுமில்ல, வாழை, பலா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, தேக்குனு இன்னும் ஏராளமான மரங்கள் கீழே சாஞ்சி,, விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம்.

கஜா புயல்

ஆனால், இதுக்கெல்லாம் இழப்பீடு கொடுக்கப்படவே இல்லை. கஜா புயல்ல விவசாயிகள் மட்டுமல்ல... மீனவர்களும் கூட தங்களோட வாழ்வாதாரங்களை இழந்திருக்காங்க. பல லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள படகுகள், மீன் வலைகள் சேதமடைஞ்சிது. அதுகெல்லாம் இழப்பீடு கிடைக்கவே இல்லைனு நிறைய மீனவர்கள் ஆதங்கப்படுறாங்க. கஜா புயல் ஏதோ முடிஞ்சிப்போன புராணக்கதைனு அரசாங்கம் நினைக்குது. இது மிகவும் கண்டிக்கத்தககது.” என்றார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக இழப்பீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் டெல்டா மக்கள்.

Also Read: கஜா புயல், ஊரடங்கு... நசுங்கிய பொருளாதாரம் நம்பிக்கை கொடுத்த ஆடு வளர்ப்பு!



source https://www.vikatan.com/news/tamilnadu/peoples-share-about-kaja-cyclone-and-damage-it-created

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக