Ad

சனி, 14 நவம்பர், 2020

''மத ரீதியாக தமிழர்களைப் பிளவுபடுத்த பா.ஜ.க திட்டம்'' - சொல்கிறார் திருமாவளவன்!

கருப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு, மனு ஸ்மிருதிக்கு ஆதரவு, தடையை மீறி வேல் யாத்திரை என தடதட அரசியலை கையிலெடுத்து பாய்ச்சல் காட்டுகிறது தமிழக பா.ஜ.க. மத அரசியல் விவகாரங்களில் பெரிய கட்சிகளே அடக்கி வாசித்துவரும்போது, துணிச்சலாக எதிர்க்குரல் எழுப்பி வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

இந்த நிலையில், அண்மைக்கால அரசியல் சூழல்கள் குறித்து திருமாவளவனைச் சந்தித்துப் பேசினேன்.

பா.ஜ.க-வின் வேல் யாத்திரை

''மனு தர்மம் நூல் பெண்களை இழிவு படுத்துகிறது என்ற தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன?''

''அதிகாரபூர்வ பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள மனு நூலிலும் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க மிக மூர்க்கமாக எதிர்த்தது மனு தர்மம் நூலைத்தான். இதுகுறித்த அம்பேத்கரின் பேச்சு மற்றும் எழுத்துகளை மத்திய அரசே வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.''

''தி.மு.க கூட்டணியைத் தேர்தலில் பலவீனப்படுத்துவதுதான் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் என்கிறார்களே?''

''மனு தர்மம் விவகாரத்தை தேர்தல் உத்தியாகத்தான் தமிழக பா.ஜ.க பயன்படுத்துகிறது. இந்தியா முழுக்க அரசியலுக்காக பா.ஜ.கவினர் என்ன உத்தியைக் கையாள்கிறார்களோ அதை தமிழ்நாட்டிலும் கையாள்கிறார்கள். அதாவது, 'இந்து - இந்து அல்லாதோர் அல்லது இந்து விரோதிகள்' என தமிழ்ச் சமூகத்தை இரண்டாகப் பிளப்பதுதான் அவர்களது அரசியல் வியூகம்''

திருமாவளவன் - ஸ்டாலின்

''இந்து மதத்தில் உள்ள குறைகளாக நீங்கள் சுட்டிக்காட்டும் விஷயங்கள், கூட்டணிக்குள் சங்கடத்தை ஏற்படுத்தாதா?''

''என்னுடைய சமூகத்திலேயேகூட இந்துக்கள்தானே பெருவாரியாக இருக்கிறார்கள். என் குடும்பமே இந்துக் குடும்பம்தான். என்னுடைய சாதி சான்றிதழே 'இந்து ஆதி திராவிடர்' என்றுதானே இருக்கிறது. இந்து சமூகத்தில் இருந்துவரக்கூடிய நீண்டகால வன்கொடுமைகளையும் சாதி, வர்ண அடிப்படையிலான பேதங்களையும் நாங்கள் விமர்சிக்கிறோம் அவ்வளவுதான். சைவ மதத்தைச் சார்ந்தவர்களே, 'நாங்கள் இந்துக்கள் இல்லை' என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்களே...

'இது நமக்கு எதிரானது. பாதிப்பை ஏற்படுத்தும்' என்று எங்கள் கூட்டணிக் கட்சியினர் யாரும் நினைக்கவில்லை. 'நியாயத்தின் பக்கம் திருமாவளவன் நிற்கிறார்' என்பதை உணர்ந்து மனபூர்வமாக ஆதரித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கின்றனர்.''

''வி.சி.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குச் செல்வோரைத் தடுப்பதற்கும், ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதற்கும் மனு தர்மம் சர்ச்சையில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதாகச் சொல்கிறார்களே''

''அப்படியென்றால், தலித்துகள் அனைவரும் இந்துக்கள் இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்களா?... 'நான் இந்து தர்மத்துக்கு எதிராகப் பேசுகிறேன், தலித்துகள் என் பின்னால் அணி திரள்கிறார்கள்' என்று அவர்கள் சொல்வார்களேயானால், 'தலித்துகள் இந்துக்கள் அல்ல' என்ற வரலாற்று உண்மையை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

கட்சியில் மாவட்ட நிர்வாகத்தை மறு சீரமைப்புச் செய்துகொண்டிருக்கிறோம். தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்காதோ என்ற எண்ணம் கொண்ட ஒருசிலர் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இது எந்தவகையிலும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.''

திருமாவளவன் - ரவிக்குமார்

''வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கும் உங்களுக்கும் இடையே பனிப்போர் நிகழ்வதாக செய்திகள் வெளிவருகின்றனவே?''

''எங்களுக்குள் எந்தவிதப் பிரச்னையும் இல்லை!. எப்போதெல்லாம் வி.சி.க-வைப் பலவீனப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகளைக் கிளப்பிவிட்டு முயற்சி செய்கிறார்கள். அப்படியெல்லாம் ஒருபோதும் வி.சி.க பலவீனப்படாது.''

''மத்திய பா.ஜ.க ஆட்சியைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?''

''பா.ஜ.க எப்படியான பாசிச ஆட்சி நடத்திவருகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம்... நடிகர் அமிதாப் பச்சன் மீது அவர்கள் தொடுத்திருக்கும் வழக்குகள்தான். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குரோர்பதி நிகழ்ச்சி நடத்துகிறார் அமிதாப். அந்த நிகழ்ச்சியில், '1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி அம்பேத்கர் எரித்த நூல் எது?' என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு 'விஷ்ணு புராணம், பகவத் கீதை, மனு ஸ்மிருதி, ரிக் வேதம்' என 4 பதில்களும் கொடுக்கப்படுகின்றன. இதில், 'மனு ஸ்மிருதி' என்பதுதான் விடை.

அமிதாப் பச்சன்

'இந்தியச் சமூகத்தில் சாதியத் தீண்டாமைகளை எதிர்கொண்ட அம்பேத்கர், இந்த சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக மனு ஸ்மிருதியை எரித்தார்' என்ற வரலாற்று உண்மையை அமிதாப்பச்சன் எடுத்துச் சொல்கிறார். இதிகாசம், புராணம் என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கொண்டிருக்கும் சனாதனவாதிகளுக்கு மத்தியில் அமிதாப்பச்சன் இப்படியொரு வரலாற்று உண்மையை எப்படி சொல்லலாம் என்று அவர் மீது வழக்குப் பதிந்துவிட்டனர். இந்த பாசிச ஆட்சியாளர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்வு.''

Also Read: மதுரை: ஆடு முதல் காஸ்ட்லி கார் வரை! - திருமண சீர்வரிசையால் திகைக்க வைத்த முன்னாள் எம்.எல்.ஏ

''தமிழ்நாட்டில், மதவாத அரசியல் எடுபடுமா?''

''பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில்கூட, தமிழ்நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒருவித பதற்றம் இருந்தது. மதம் சார்ந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ எந்தவொரு நிலைப்பாடும் இங்கே இல்லை. முஸ்லிம்களேகூட இங்கே அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆக, பா.ஜ.க-வின் மதவாத அரசியலில் தமிழ்நாடு மட்டும் தனித்த ஒரு தீவாகவே இருந்து வந்திருக்கிறது.

எல்.முருகன் வேல் யாத்திரை

நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 50% இட ஒதுக்கீடு மற்றும் ஆணவப் படுகொலை என சமூக நீதி சார்ந்த விஷயங்களில் தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், இவற்றில் எந்தவொரு பிரச்னை பற்றியும் தமிழக பா.ஜ.க பேசியது இல்லை.

நடைமுறையில் மக்களுக்கு இருக்கிற பிரச்னைகளுக்கும் பா.ஜ.க எடுக்கிற மதவாத நிலைப்பாட்டுக்கும் எந்தவிதப் பொருத்தமும் இல்லை. ஆனால், அதையே பொருத்தப்பாடாக மாற்றுகிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் மதவாதத்தை முதன்மைப்படுத்துகிறது பா.ஜ.க. ஆனால், அவர்களது முயற்சி இங்கே எடுபடாது!''

Also Read: ஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

''பகுத்தறிவு பேசுகிற தமிழ்நாட்டில் மத அரசியல் எடுபடாது என்கிறீர்கள். ஆனால், இன்னும் இங்கே சாதி அரசியல் இருக்கிறதுதானே?''

''தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளாக சமூக நீதி அரசியல்தான் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம்

காவிரி பிரச்னை, ஈழத் தமிழர் பிரச்னை, எழுவர் விடுதலை, ஜி.எஸ்.டி., இந்தி-சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில், மத்திய - மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்துவரக்கூடிய முரண்பாடுகள் குறித்த உரையாடல்கள்தான் தமிழ்நாட்டில் மிக வலுவாக பேசப்பட்டு வருகின்றன. மற்றபடி எல்லா மாநிலங்களிலும் இருப்பதுபோல் இங்கும் சாதியக் கொடுமைகள் இருந்து வருகிறதுதான். அரசியல் கட்சிகளும் அதைக் கண்டும் காணாமல் ஒதுங்கியே நிற்கும்.''



source https://www.vikatan.com/news/politics/interview-with-viduthalai-siruthaigal-party-leader-thirumavalavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக