Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

அரசுப் பள்ளி மாணவர்கள் விபரம் - சென்னை ஐ.ஐ.டி-யின் ஆர்.டி.ஐ பதில் சர்ச்சை!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. முக்கியமாக, நீட் தேர்வால், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீராவதாக புகார் எழுந்து வந்தது.

நீட்

Also Read: மூளையில் நினைப்பதை மொழியாக்கம் செய்யும் புதிய கண்டுபிடிப்பு... சென்னை ஐ.ஐ.டி அசத்தல்!

அதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ம.தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈஸ்வரன், சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம், ``அதுபோன்ற ஆவணங்களை நாங்கள் பராமரிப்பதில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2(f), 2 (j) ஆகியவற்றின் அடிப்படையில் தகவல் வழங்கவும் அவசியம் இல்லை. இந்தப் பதிலில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்” என்று பதிலளித்துள்ளது.

இதுகுறித்து ஈஸ்வரன் கூறும்போது,``மருத்துவப் படிப்புகளைப் போல, ஐ.ஐ.டி-யிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் சேருகின்றனரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால்தான், உண்மை நிலவரம் தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டேன். சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அரசின் நிதியில் இயங்கும் ஓர் கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஈஸ்வரன்

எப்படி, மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கினார்களோ, அதேபோல, சென்னை ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பான விபரங்களை மேல்முறையீடு செய்து வெளியில் கொண்டு வருவேன்” என்றார் உறுதியான குரலில்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/madras-iits-controversy-rti-replay

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக