சென்னை, சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலில் சந்த் (74). ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம், பிரோகி ஜவான் என்ற கிராமம். இவரின் மனைவி புஷ்பா பாய் ( 70), மகன் சீத்தல் (38). இவர்கள் 3 பேரும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு நேற்றிரவு ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். தலில்சந்தின் மகள் கொடுத்த தகவலின்பேரில் யானைக்கவுனி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், விசாரணை நடத்தினார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் உள்பட 6 பேர், தலில் சந்த் வீட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. சில மணி நேரத்துக்குப்பிறகு அவர்கள் வெளியில் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. அதைப் பார்த்த போலீஸார் தலித் சந்த்துக்கு தெரிந்தவர்களே இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கருதினர். அதுதொடர்பாக விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், தலில்சந்த் அவரின் மகன் சீத்தல் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆகியோர் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர். சீத்தலுக்கு ஜெயமாலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தைகளும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் ஜெயமாலா குடும்பத்தினர் தலித்சந்த், சீத்தலிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான் தலித்சந்த் அவரின் மனைவி புஷ்பா பாய் மகன் சீத்தல் ஆகிய மூன்று பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனையில்தான் எத்தனை குண்டுகள் துளைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரும். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்தபோது இந்தக் கொலை சம்பவத்தில் சீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயமாலா, புனேயில் குடியிருந்து வருகிறார். அதனால் அவரைத் தேடி ஒரு டீம் போலீஸார் புனேவுக்குச் சென்றுள்ளது.
தலித் சந்த் மற்றும் அவரின் மனைவி, மகன் துப்பாக்கியால் சுடப்பட்டது குறித்து அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தோம். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் மழை அதிகமாக பெய்தது. அதனால் தெருவிலும் நடமாட்டம் இல்லை. மேலும் வீடுகளும் பூட்டப்பட்டிருந்துள்ளன. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுவந்துள்ளது. தலித் சந்த் மற்றும் அவரின் மனைவி, மகனை துப்பாக்கியால் சுடப்பட்டபோது பட்டாசு வெடிக்கிற சத்தம் என்றே அந்தப்பகுதியில் உள்ளவர்கள் கருதியுள்ளனர்.
Also Read: சென்னை: பிரபல ரௌடியின் மகன் ஓட ஓட விரட்டிக் கொலை - வைரலாகும் சிசிடிவி காட்சி
ஜெயமாலாவிடம் விசாரித்ததால்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். தலில்சந்த் குடும்பத்தினர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரித்துவருகிறோம். கொலையாளிகளுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரணை நடந்துவருகிறது. விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம் என்றனர்.
சவுகார்பேட்டையில் துப்பாக்கி சூடும் சத்தம் கேட்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
மூன்று பேர் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து மீடியாக்கள், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இறந்தவர்களின் சடலங்களைக்கூட யாரும் வீடியோ, புகைப்படங்கள் எடுத்துவிடக்கூடாது என்பதில் போலீஸ் டீம் கவனமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/one-family-was-shot-dead-in-chennai-police-investigating-with-the-help-of-cctv
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக