Ad

வியாழன், 12 நவம்பர், 2020

ஒற்றை சிப்பும், அந்த கூலிங் ஃபேனும்... மேக்புக் சீரிஸில் என்ன ஸ்பெஷல்?! #AppleEvent #AppleM1

WWDC, ஐபோன் ஈவென்ட், ஐபேட் ஈவென்ட் எனக் கடந்த சில மாதங்களில் எப்போதையும் விடக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே அறிமுக நிகழ்வுகளை ஆப்பிள் நடத்தியிருக்கிறது. இந்நிலையில், 'இருங்க பாஸ் இன்னும் முடியல!' என இன்னொரு அறிமுக நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தது ஆப்பிள். நேற்று நடந்த இந்த நிகழ்வுக்கு 'One More thing' எனப் பெயர் வைத்திருந்தது. முந்தைய ஆப்பிள் அறிமுக நிகழ்வுகள் போல இதுவும் ஆன்லைனில்தான் நடந்துமுடிந்திருக்கிறது. ஈவென்ட் நடத்துவதில் ஆப்பிளின் சாமர்த்தியத்தைப் பற்றி இந்த வருடமே பலமுறை சொல்லிப் போர் அடித்துவிட்டதால் நேராக விஷயத்துக்கு வருகிறோம்.
Tim Cook

ஜூன் மாதம், மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்காக நடந்த 'WWDC 2020' நிகழ்வில் புதிய iOS, iPadOS, WatchOS, MacOs இயங்குதளங்களில் இருக்கும் வசதிகளை முதல்முறையாக உலகிற்குக் காட்டியது ஆப்பிள். இந்த நிகழ்வில் இன்னொரு சர்ப்ரைஸ் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது ஆப்பிள். 'மேக் கணினிகளிலும் இனி ஐபோன், ஐபேட்களில் இருப்பது போல எங்களது சொந்த புராசஸர் சிப்களை பயன்படுத்தப் போகிறோம்' என்று ஆப்பிள் அறிவித்ததுதான் அந்த சர்ப்ரைஸ். ARM கட்டமைப்பை கொண்ட புதிய சிப்பிற்கு (இவற்றை 'ஆப்பிள் சிலிக்கன்' என அழைக்கிறார்கள்) ஏற்றவாறு ஆப்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என மென்பொருள் வடிவமைப்பாளர்கள் சந்தேகங்கள் அனைத்துக்கும் அந்த நிகழ்வில் விளக்கம் அளித்திருந்தது ஆப்பிள். MacOS Big Sur புதிய சிப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 'இந்த வருடம் நிறைவடைவதற்குள் எங்களது சொந்த சிப்களை கொண்ட மேக் தயாரிப்புகளை அறிமுகம் செய்வோம்' எனச் சொல்லியிருந்தது ஆப்பிள். அந்த அறிமுகம்தான் நேற்று நடந்தது.

Also Read: iOS டு MacOS... புதிய ஆப்பிள் ஓஎஸ் வெர்ஷன்களில் என்ன ஸ்பெஷல்?! #WWDC2020

மேக் கணினிகளுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் முதல் ஆப்பிள் புராசஸர் சிப்பின் பெயர் M1. சமீபத்தில் வெளிவந்த ஐபோன் 12 சீரிஸில் பயன்படுத்தப்படும் A14 பயானிக் சிப் போல இதுவும் அதிநவீன 5nm அளவிலான ஒரு புராசஸர். இந்த புதிய சிப் மேக் கணினிகளுக்கு மேம்பட்ட பர்ஃபாமென்ஸையும் அதிக பேட்டரி லைஃப்பையும் தரும் என ஆப்பிள் தெரிவிக்கிறது.

சரி, M1 சிப்பில் அப்படி என்ன செய்திருக்கிறார்கள்?

Steve Jobs

2005 வரை ஆப்பிளின் மேக் கணினிகளில் IBM நிறுவனத்தின் PowerPC புராசஸர்கள்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. அந்த வருடம் நடந்த WWDC நிகழ்வில்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் PowerPC-யிலிருந்து x86 இன்டெல் புராசஸர்களுக்கு மாறப்போகிறோம் என அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பின்னணியில் பல காரணங்கள் உண்டு. பர்ஃபாமென்ஸை விடவும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அப்போது விண்டோஸ் அளவுக்கு மேக் கணினிகளுக்கு நிறுவனங்கள் மென்பொருள் வடிவமைக்கவில்லை. அதனால் விண்டோஸ் கணினிகள் பயன்படுத்தும் x86 இன்டெல் ப்ராசஸர்களுக்கு மாறுவதன் மூலம் மேக் கணினிகளுக்கான மென்பொருள் வடிவமைப்பை எளிமையாக்க முடியும். ஒரு புராசஸரிலிருந்து அப்படியே வேறொரு கட்டமைப்பைக் கொண்ட புராசஸருக்கு மாறுவது என்பது மிகப்பெரிய வேலை. ஆனால் அதைச் செய்தது ஆப்பிள். அதற்கான பலனையும் அனுபவித்தது. நாள் போக்கில் தொழில்முறை பயன்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்தும் கணினிகளாக மேக் கணினிகள் உருவெடுத்தன. இப்போதும் அப்படியான ஒரு மாற்றம் அவசியம் எனக் கருதுகிறது ஆப்பிள்.

Tim Cook announcing Apple Silicon for macs

இன்று எங்கள் சாதனங்களுக்கு ஆப்கள் தயாரித்துக் கொடுங்கள் என ஆப்பிள் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. அதிக பயனாளர்களைக் கொண்டுள்ளதால் நிறுவனங்களே மேக் கணினிகளுக்கு ஆப் தயாரிக்க தயாராகத்தான் இருப்பார்கள். அதே சமயத்தில் கடந்த சில ஆண்டுகளில் மொபைல் சாதனங்கள் பெருமளவில் வளர்ந்துவிட்டன. குறிப்பாக ஆப்பிள் அதன் பெருவாரியான வருமானத்தை ஐபோன் விற்பனையில்தான் பார்க்கிறது. ஐபேட்களும் மக்களிடையே பிரபலமாகிவிட்டது. இந்த சாதனங்களில் எல்லாம் ஆப்பிள் அதன் சொந்த சிப்களையே சில வருடங்களாகப் பயன்படுத்திவருகிறது. அனைத்தையும் அதன் சாதனங்களுக்கு மட்டும் ஏற்றவாறு பார்த்துப் பார்த்து வடிவமைப்பதால் பர்ஃபாமென்ஸ் விஷயத்தில் குவால்கம், மீடியாடெக் போன்ற மற்ற நிறுவனங்களின் மொபைல் புராசஸர்கள் ஆப்பிள் சிப்களின் அருகில்கூட வராது. இதையே மேக் கணினிகளுக்கும் செய்ய நினைக்கிறது ஆப்பிள். அப்படியே இன்டெல்லுக்கு ஒரு சில வருடங்களில் டாட்டா காட்டிவிடலாம் என நினைக்கிறது ஆப்பிள். இனி மொத்த கன்ட்ரோலும் ஆப்பிளிடத்தில் இருக்கும். இன்னொரு காரணம் மென்பொருள் வடிவமைப்பு. இன்று மென்பொருள் வடிவமைப்பாளர்கள் ஒரு ஆப் உருவாக்க வேண்டுமென்றால் ஐபோனுக்கு தனியாக வடிவமைக்க வேண்டும். மேக் கணினிகளுக்குத் தனியாக வடிவமைக்க வேண்டும். இரண்டும் வெவ்வேறு புராசஸர் கட்டமைப்பைக் கொண்ட சாதனங்கள். இப்போது மேக் கணினிகளும் ஆப்பிளின் ARM கட்டமைப்பைக் கொண்ட சொந்த புராசஸர்களுக்கு மாறுவதன் மூலம் இனி ஐபோனுக்கு வடிவமைத்தால் போதும் அது மேக் கணினிகளிலும் வேலை பார்க்கும்.

ஏற்கெனவே இன்டெல் மேக் கணினிக்கு வடிவமைக்கப்பட்ட ஆப்களை புதிய சிப்களுக்கு ஏற்றவாறு உடனடியாக மாற்ற 'ரொசெட்டா 2' என்ற மென்பொருளையும் அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால், புதிய சிப்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் ஆப்கள்தான் அதன் முழு திறனையும் உபயோகிக்க முடியும். இந்த மாற்றம் முழுவதுமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்துவிடும் என நம்புகிறது ஆப்பிள். சரி புதிய M1 சிப் பற்றிப் பேசுவோம்.

M1, இதற்கான பெயர்க்காரணம் மேக் கணினிகளுக்கான முதல் சிப் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஐபோன்களில் இருக்கும் சிப்களை 'A' சீரிஸ் என்றும் வாட்ச்சில் இருக்கும் சிப்களை 'S' சீரிஸ் என்றும் ஏர்பாட்ஸில் இருப்பதை 'W' சீரிஸ் என்றும் அழைக்கிறது ஆப்பிள். அதனால் இந்த 'M' மேக்'கைத்தான் குறிக்கிறதா என்பது ஆப்பிளுக்கு மட்டுமே வெளிச்சம்.
M1 Architecture

முன்பு சொன்னது போல ஐபோன், ஐபேட்களில் இருக்கும் 'A' சீரிஸ் புராசஸரை போன்றே இருக்கிறது M1. மொத்தம் 8 CPU கோர்கள். நான்கு பர்ஃபாமென்ஸை மேம்படுத்தும் கோர்கள். நான்கு 'Power efficiency' கோர்கள், அதாவது பேட்டரி லைஃப்பை மேம்படுத்தும் கோர்கள். இத்துடன் எட்டு GPU கோர்கள் இருக்கின்றன. 16-core நியூரல் என்ஜின் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கு இந்த நியூரல் என்ஜின் பெரிதும் கைகொடுக்கும். RAM-ம் இந்த புராசஸர் சிப்பிலேயே இருக்கும். மேல் கூறிய அனைத்தும் முன்பு தனித்தனியாக ஒரு போர்டில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும்.

இதற்கு முன் இருந்த அமைப்பு

M1-ல் ஒன்றுடன் ஒன்று எப்போதுமே இணக்கமாக இருப்பதால் பர்ஃபாமென்ஸில் பெரும் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது சந்தையில் இருக்கும் கணினி புராசஸர்களுடன் ஒப்பிட்டால் M1 நான்கில் ஒரு பங்கு மின்சாரம்தான் தேவைப்படும் என்கிறது ஆப்பிள்.

13-இன்ச் மேக்புக் ஏர்

M1 சிப்பின் அருமை பெருமைகளைக் கூறிய ஆப்பிள், அப்படியே அதனுடன் வரும் 13-இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப்பையும் அறிமுகம் செய்தது. ஆறு மாதங்களுக்கு முன்தான் அதன் புதிய மேக்புக் ஏர் மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது. அந்த டிசைனில் கைவைக்கவில்லை ஆப்பிள். உள்ளே இன்டெர்னல்ஸை மட்டும் மாற்றி M1 சிப்புடன் அறிமுகம் செய்திருக்கின்றனர். 'இதுவரை இப்படி ஒரு வேகத்தை மேக்புக் ஏரில் பார்த்திருக்க மாட்டீர்கள்' என சில டெமோக்களையும் காட்டியது. 3.5x CPU பர்ஃபாமென்ஸ், 5x கிராபிக்ஸ் பர்ஃபாமென்ஸ் என லைவ்வாக 4K ProRes வீடியோக்களையெல்லாம் மேக்புக் ஏரில் எடிட் செய்துகாட்டினார்கள். முன்பு மேக்புக் ஏர் மாடல்கள் எடிட்டிங்கிற்கு உகந்ததாகக் கருதப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புராசஸர்களை குளிர்விக்க உள்ள ஃபேன் கூட கொடுக்கவில்லையாம். அந்த அளவுக்கு எந்த சத்தமும் வெப்பமும் இல்லாமல் இயங்குமாம் மேக்புக் ஏர்.ஆப்பிள்

Macbook Air with M1

ஏற்கெனவே, பேட்டரி விஷயத்தில் மேக்புக் லேப்டாப்கள் டிஸ்டிங்ஷன் வாங்கும். அதில், இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறார்கள். ஒற்றை சார்ஜில் 15 மணிநேரம் வெப் ப்ரவுஸிங், 18 மணிநேரம் வீடியோ ப்ளேபேக் என பேட்டரியிலும் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும் எனத் தெரிவித்தது ஆப்பிள். இது முந்தைய மேக்புக் ஏரை விட 6 மணிநேரம் அதிகம். இதனால் அலுவலகத்திற்குச் செல்பவர்கள் சார்ஜரை மறந்து வைத்துவிட்டு வந்தாலும் எந்த சிக்கலும் வராது எனத் தெரிகிறது.

அடுத்தது 13 இன்ச் மேக்புக் ப்ரோவை அறிமுகம் செய்தார்கள். இதிலும் டிசைனில் மாற்றங்கள் எதுவும் இல்லை. உள்ளே M1 சிப் பொருத்தியிருக்கிறார்கள். முந்தைய மாடலை விட 2.8x CPU பர்ஃபாமென்ஸ், 5x கிராபிக்ஸ் பர்ஃபாமென்ஸ் இதில் இருக்கும். ஒற்றை சார்ஜில் 17 மணிநேரம் வெப் ப்ரவுஸிங், 20 மணிநேரம் வீடியோ ப்ளேபேக் என முந்தைய மாடலின் பேட்டரி திறன் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியிருக்கிறது.

Macbook Pro active cooling solution

மேக்புக் ஏர் பற்றிப் பேசும்போது உள்ளே ஃபேனே தேவையில்லை என மார்தட்டிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ பற்றிப் பேசும்போது அதன் உள்ளே இருக்கும் மேம்பட்ட ஃபேன் ('active cooling solution' என்றுதான் சொல்வார்களாம்) பற்றிய பெருமைகளை அடுக்கியது.

சொல்லப்போனால் இப்போது மேக்புக் ஏர் மாடலுக்கு மேக்புக் மாடலுக்கும் டிசைனை தவிர்த்து வெகுசில வித்தியாசங்களே இருக்கின்றன. அதில் இந்த ஃபேனும் ஒன்று. இத்துடன் M1 சிப் கொண்ட மேக் மினி ஒன்றையும் அறிமுகம் செய்தது ஆப்பிள்.

ஆப்பிளின் சொந்த சிப்கள் என்பதால் விலை குறையும் என யாராவது கனவு கண்டுகொண்டிருந்தால் அதை அப்படியே மறந்துவிடுங்கள். அனைத்துமே கிட்டத்தட்ட அதே விலையில்தான் விற்பனைக்கு வருகின்றன மேக் மினியை தவிர்த்து. மேக் மினி மட்டும் விலை குறைந்திருக்கிறது. பர்ஃபாமென்ஸிலும் பேட்டரியிலும் இவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தும் விலை அதிகரிக்கவில்லையே என நினைத்து சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

மேக் மினி
  • மேக் மினி- 64,900 ரூபாய் முதல்

  • மேக்புக் ஏர்- 92,900 ரூபாய் முதல்

  • மேக்புக் ப்ரோ-1,22,900 ரூபாய் முதல்

'அபார பர்ஃபாமென்ஸ், அசத்தல் பேட்டரி' என இவையனைத்தும் ஆப்பிளின் வார்த்தைகள்தான். இன்னும் யார் கைகளிலும் M1 சிப் கொண்ட மேக்புக் சாதனங்கள் கிடைக்கப்பெறவில்லை. விமர்சனங்கள் வரத்தொடங்கினால்தான் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா எனத் தெரிய வரும். ஆனால், இதுவரை ஆப்பிள் சொன்னதில் பெரிய மாறுதல்கள் இருந்ததில்லை. ஆனால் இந்த 3x, 5x கணக்கெல்லாம் M1 சிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஆப்களை வைத்து ஆப்பிள் சொல்லும் கணக்கு. இன்றைய நிலையில் குறைந்த அளவிலான ஆப்கள் மட்டுமே அப்படி முழுவதுமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேக் கணினிகளை அடுத்த லெவலுக்கு எடுத்துசெல்லும் இந்த முயற்சி வெற்றிபெறுமா... காத்திருந்து பார்ப்போம்!


source https://www.vikatan.com/technology/gadgets/one-chip-changes-it-all-new-macbooks-with-m1-series-launched

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக