திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை அடுத்திருக்கும் கொட்டகுளம் பகுதியை சேர்ந்தவரான விஜி, நீப்பத்துறையில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் வைத்திருக்கிறார். அம்மாபேட்டையைச் சேர்ந்த பழநி என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக விஜியின் ஒர்க்ஷாப்புக்கு சென்றிருக்கிறார். அந்தப் பழக்கத்தில் சில தினங்களிலேயே இருவரும் நண்பர்களாக மாறியிருக்கின்றனர்.
தனது குடும்பச் செலவுக்காக விஜி அக்கம்பக்கத்தினரிடம் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருக்கிறார். அதனால் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் கேட்டு அடிக்கடி அவரது ஒர்க்ஷாப்புக்கு வந்திருக்கிறார்கள். அதனை பார்த்த அவரது புதிய நண்பரான பழநி, சென்னையில் தனது பணக்கார நண்பர் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் லட்சக்கணக்கில் கறுப்புப் பணம் இருப்பதாகவும், ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் கறுப்புப் பணம் கொடுப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
முதலில் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் மெக்கானிக் விஜி. அப்போது தனது பாக்கெட்டில் இருந்த கறுப்பு மை தடவியிருந்த 500 ரூபாய் நோட்டை காட்டிய பழநி, அதன்மீது ஒரு ரசாயனத்தை தடவியிருக்கிறார். அப்போது அந்த கறுப்பு மை மறைந்து சாதாரண ரூபாய் நோட்டைப் போல மாறியதால் விஜிக்கு ஆசை ஏற்பட்டது. மேலும் இதேபோன்று கறுப்பு மை தடவிய கறுப்புப் பணம் கட்டு கட்டாக இருக்கிறது என்று தனது செல்போனில் இருந்த ஒரு சில வீடியோக்களை காட்டினார் பழநி. அதில் இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் மனசு மாறியிருக்கிறாய் விஜி.
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் இரண்டு லட்சம் கிடைக்கும் என்றும் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் நான்கு லட்சம் கிடைக்கும் என்றும் கூறிய பழநி, தேவைப்படும்போது கறுப்பு மையை அழித்துவிட்டு செலவு செய்துகொள்வதுடன், கடனையும் அடைத்துவிட்டு லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் பழநியுடன் வந்த கணத்தம்பூண்டியைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர், தங்களிடம் நிறைய கறுப்பு பணம் இருப்பதால் இப்படி நிறைய பேருக்கு உதவி செய்துவருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
அதற்கு, `எல்லாம் சரிதான். ஆனால் ஏற்கெனவே கடனில் இருக்கும் என்னிடம் இப்போது பணம் இல்லை’ என்று கைவிரித்த விஜியிடம், வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைக்கலாம் என்று பழனியும், பிரங்க்ளினும் ஐடியா கொடுத்திருக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொண்ட விஜி, வங்கியில் ஏற்கனவே குறைந்த தொகைக்கு அடகு வைத்திருந்த தனது மனைவியின் தங்க நகையை மீட்டு, அடகு கடையில் வைத்து பழநியிடம் ரூ.75,000 ஆயிரம் கொடுத்திருக்கிறார்.
அதற்கு பதிலாக கறுப்பு மை தடவப்பட்ட கரன்சிக் கட்டுகள் அடங்கிய ஒரு பார்சலை கொடுத்தார் பழநி, நோட்டை சோதனை செய்து பார்க்கும்படி கூறியிருக்கிறார். அவர் கொடுத்த ரசாயனத்தை ஒரு நோட்டில் தடவியபோது கறுப்பு மை மறைந்ததும் திருப்தியடைந்த விஜி, பார்சலை வீட்டுக்கு எடுத்துச் சென்று கறுப்பு மையை நீக்க முயற்சித்திருக்கிறார்.
Also Read: கேரளா: ரூ.150 கோடி தங்க நகை மோசடி! - மஞ்சேஸ்வரம் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கைது
முதலில் ஒன்றிரண்டு நோட்டுகள் மட்டும் கரன்சியாக வர, மற்ற அனைத்தும் வெள்ளைத் தாள்களாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த விஜி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
உடனே பழநியிடம் சென்ற அவர், பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் போலீஸில் புகார் அளிப்பேன் என்று தெரிவித்ததால், பயந்துபோன பழனி ரூ.10,000 கொடுத்ததுடன் மீதித் தொகையை பிறகு தருவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் சொன்னபடி பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததால், மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் விஜி. அதனடிப்படையில் தற்போது பிராங்க்ளினை வளைத்திருக்கும் காவல்துறை, தலைமறைவாக இருக்கும் பழநிக்கு வலை வீசியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/mechanic-was-cheated-by-new-friends-with-fake-rupees-notes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக