Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

பூரியாய் கொதித்த ஆரி; ஒரு டீஸ்பூன் கண்ணீர் அனிதா; சுச்சி சிக்கல்! பிக்பாஸ் – நாள் 40

விகடன் வாசகர்களுக்கு என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள். இந்தத் தொடருக்கு ஆதரவு அளிக்கும் ஒவ்வொவருக்கும் என் அன்பும் பிரியமும். ரியோவின் பாணியில் சொன்னால் ‘டேக் இட்டு’.

வந்த புதிதில் மற்றவர்களுக்கு அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்த சுச்சியம்மன் இப்போது தனக்கே யாராவது அருள் சொல்ல மாட்டார்களா என்கிற அளவிற்கு பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அடிப்படையில் அவர் அன்பிற்கு ஏங்கும் ஆசாமி என்று தெரிகிறது.

அர்ச்சனாவும் சுச்சியைப் போல் புதிதாக நுழைந்த போட்டியாளர்தான். ஆனால் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் வெகுசீக்கிரமே அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டார். அதிகாரப் பொறுப்பில் அமர்ந்து விட்டார். சமையல்கட்டுதான் உண்மையான அதிகாரம் என்கிற பிரக்ஞை அர்ச்சனாவிற்கு இருக்கிறது. ஆனால் சுச்சியால் அதைச் செய்ய இயலவில்லை. மிகவும் பின்தங்கியிருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 40

வந்த முதல் நாளில் இருந்தே சுச்சி தன்னை பாலாஜி குரூப்புடன் அடையாளம் காட்ட ஆரம்பித்து விட்டார். பாலாஜியை வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் பாலாஜியோ ஷிவானிக்கு தரும் கவனத்தில் துளி கூட சுச்சிக்கு தருவதில்லை. மாறாக பல சமயங்களில் ‘வாயை மூடு’ என்று அவமானப்படுத்தவும் செய்கிறார். இந்த விஷயங்கள் சுச்சிக்கு மனப்புழுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் காட்சி உங்களுக்கு நினைவிருக்கலாம். "பாலாஜிய மட்டுமே ஏன் குத்தம் சொல்றீங்க?” என்று தலைவிரி கோலத்துடன் பிக்பாஸ் வீட்டு கேட் அருகில் அமர்ந்து கொதித்த சுச்சியை கையிடுக்கில் அமுக்கி சமாதானப்படுத்திய பாலாஜி, பிறகு ஷிவானி எழுந்து சென்றவுடன் இவரும் சட்டென்று எழுந்து சென்று விட்டார். தன்னை ஆதரிக்கும் சுச்சிக்கு ஆதரவாக சற்று நேரம் அமர்ந்திருப்போம் என்று கூட அவருக்குத் தோன்றவில்லை.

"பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையில் தான் குறுக்காக வந்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்களோ... குறிப்பாக பாலாஜி அவ்வாறு நினைக்கிறானோ... அப்படியெனில் அடுத்த நிமிடமே அங்கிருந்து விலகி விடுவேன். நான் என்ன லைன்ல நிக்கறேன்னு நெனக்கறானா... வாந்தி வருது" என்றெல்லாம் அனிதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சுச்சி. அனிதாவே வாயடைத்துப் போகும் வகையில் ஸ்பேஸ் விடாமல் அனத்திய சுச்சியை ஒருவகையில் பாராட்டவே வேண்டும்.

சம்யுக்தாவிற்கு அடுத்த நிலையில் சமாதானத் தூதுவர் எண்-2 ஆக பாலாஜியிடம் தூது சென்றார் அனிதா. ஆனால் பாலாஜி தான் செய்யும் காரியங்களில் மிகத் தெளிவாகவே இருக்கிறார். அதை வெளிப்படையாகவே சொல்லியும் விடுகிறார்.

பிக்பாஸ் – நாள் 40
நான் அதனால்தான் சொல்கிறேன், பிக்பாஸ் விளையாட்டை சரியாக விளையாடிக் கொண்டிருக்கும் ஆட்களில் பாலாஜி முக்கியமானவர். உடனே ‘நீங்க பாலாஜி ஆர்மியா?’ என்று கேட்டு விடாமல் நிதானமாக யோசித்தால் இது புரியும். ஆனால் பாலாஜியின் முன்னே நிற்கும் ஒரு சவால் என்னவென்றால், அவர் பார்வையாளர்களின் வெறுப்பையும் எளிதில் சம்பாதித்துக் கொள்கிறார். இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

“இங்க யாருக்கும் யாரும் நண்பர் இல்லை. எனக்கும் ஷிவானிக்கும் இடையில் ஒண்ணுமில்ல. வெளியுலகம் அப்படி நெனச்சிக்கிட்டா எனக்கு கவலையில்லை. சுச்சிக்கு சில விஷயங்களை கத்திதான் சொல்ல வேண்டியிருக்கு” என்ற பாலாஜி, “அவங்க அவங்களை நம்பித்தான் நிக்கணும். மத்த யாரையும் நம்பி இருக்கக்கூடாது" என்பது போல் சொன்னது திருவாசகம். இந்த எளிய உண்மை சுச்சிக்கு ஏன் புரியவில்லை என்று தெரியவில்லை. அவரால் இப்போது எதிரணிக்கும் செல்ல முடியாது. பாலாஜி குரூப்பிலும் தங்க முடியாது. திரிசங்கு சொர்க்கம்தான். அந்த சொர்க்கத்தை அனுபவிக்கவே முடியாது.

40-வது நாள் விடிந்தது. ‘பேட்ட பராக்’ என்கிற ரகளையான பாடலைப் போட்டார் பிக்பாஸ். மக்கள் கையில் கிட்டார் இருக்கிற பாவனையில் ராக் பாடகரைப் போன்ற பாவனைகளைத் தந்து ஆடினார்கள். முடியை விரித்துப் போட்டு சுச்சி ஆடுவதைப் பார்க்கும் போதுதான் தினமும் ‘பகீர்’ என்கிறது.

நேற்று இரவு அனிதாவிடம் புலம்பிய அதே விஷயத்தை இப்போது பாலாஜியை ஓரங்கட்டி பேசினார் சுச்சி. ஆனால் அந்த அனத்தலை இடதுகையால் உதறியபடி பாலாஜி பேசினது சிறப்பு. "இங்க குரூப்னு எதுவும் கிடையாது. என்னை நம்பிதான் நான் நிக்கறேன்” என்ற பாலாஜி ‘எப்ப தேவையோ அப்ப மட்டும்தான் பேசணும்’ என்று சொன்னதை, “ஓ... என்கிட்ட எப்ப தேவையோ அப்பதான் பேசுவியா...” என்று அதையும் தவறாகப் புரிந்து கொள்கிற மனக்குழப்பத்தில் இருக்கிறார் சுச்சி.

பிக்பாஸ் – நாள் 40

இரண்டு பேருக்கு இடையில் இருக்கும் நெருக்கமான நட்பில், ஒரு புதிய நட்பு நுழையும் போது அவர் எதிர்கொள்கிற அதே மனச்சிக்கல்தான் சுச்சிக்கும் வந்திருக்கிறது. ‘சரிப்பட்டு வந்தால் தொடர வேண்டும்... இல்லையெனில் விலகி நிற்க வேண்டும்’ அவ்வளவுதான் மேட்டர். நடைமுறை வாழ்க்கையிலேயே இதுதான் விஷயம் என்னும் போது பிக்பாஸ் விளையாட்டில் இது மேட்டரே கிடையாது. அங்கு நண்பர்கள், பகைவர்கள் என்று எவரும் கிடையாது. அதுவும் ஓர் அரசியல் களம்தான்.

பாலாஜி என்னும் பாறாங்கல்லில் முட்டி மண்டையை உடைத்துக் கொண்ட சுச்சி, அடுத்து சென்ற இடம் ஷிவானி. பாலாஜி பாறாங்கல் என்றால் ஷிவானி விலாங்கு மீன். எளிதில் பிடித்து விட முடியாது. ஷிவானியிடம் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று வந்த சுச்சிக்கு அங்கும் தோல்விதான் கிடைத்தது. “உங்க ரெண்டு பேருக்கும் ரொமாண்டிக் பாட்டுல்லாம் போட்டு பிரமோ போடறாங்க” என்று முதலில் திரியைக் கொளுத்திய சுச்சி, அடுத்ததாக, “இப்படியேதான் ஃபைனல் வரைக்கும் இருக்கப் போறீங்களா?” என்று இன்டர்வியூ எடுக்க "இதுதான் என் இயல்பு” என்றார் ஷிவானி. பாலாஜியின் சமநிலையில்லாத போக்கைப் பற்றி சுச்சி புகார் செய்ய சமாளித்து விட்டு நழுவிவிட்டார் ஷிவானி.

‘அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையில் தீவிரமானதொரு சண்டை நிகழ்ந்து விட்டு பிறகு அடுத்த கணமே எப்படி சமாதானம் ஆக முடியும்?’ என்பது குறித்து ஷிவானிக்கும் சுச்சிக்கும் சந்தேகம் இருக்கிறது. அது போலியான நடிப்பு என்று நினைக்கிறார்கள். இருக்கலாம். ‘அன்பே ஸ்ட்ராட்டஜி’.

இந்த சீஸனில் முதன்முறையாக புகையறைக்குள் நடைபெற்ற காட்சியைப் பார்க்க முடிந்தது. “ஷிவானி கிட்ட என்ன பேசினே?” என்று பாலாஜி விசாரிக்கும் போது (அவர் பயம் அவருக்கு!) ‘அவ கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ’ என்று நழுவிச் சென்றார் சுச்சி. இது பற்றி பிறகு ஷிவானியிடம் விசாரித்து அறிந்த பாலாஜி ‘இதுதான் வாழைப்பழத்துல ஊசி ஏத்தறது’ என்று சுருக்கமாகவும் அதே சமயத்தில் கச்சிதமாகவும் புரிந்து கொண்டார்.

“நான் உள்ளே போய் சில மாற்றங்களைச் செய்யப் போகிறேன்” என்கிற பாசிட்டிவ்வான உத்வேகத்துடன் உள்ளே வந்த சுச்சி, பிக்பாஸ் வீடு என்னும் புயலில் மாட்டிக் கொண்டு அல்லலுறுவது பரிதாபமான கதை.

**

பிக்பாஸ் – நாள் 40

"'எப்படி இருக்கீங்க?” என்பது போன்ற ஒரு சாதாரண உரையாடலுக்கு கூட இடக்கு மடக்காக எதையாவது சொல்லி நகைச்சுவையாக்குவது ஒரு மனவியாதி" என்று நிஷாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் ரியோ. அதற்கும் "முறுக்கு... நீ இதை நொறுக்கு" என்று இடக்கு மடக்காக பதில் சொல்லி சிரித்தார் நிஷா. “அதுக்காக அமைதியாவும் இருந்துடக் கூடாது. அதுவும் ஒரு வியாதிதான்" என்று பக்கத்தில் இருந்த சிறப்பு மருத்துவர் சோம் சொல்ல அதற்கும் நிஷா சிரித்தார். “இப்ப ரைமிங் மிஸ் ஆகுது. அப்ப க்யூர் ஆயிட்டு வருதுன்னு அர்த்தம்" என்று ரியோ சொன்னது டைமிங் ஆன காமெடி.

நிஷாவின் இயல்பு அதுதான் என்றால் அவர் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். நிஷா காமெடி பீஸாக மாறி விடக்கூடாது என்று ரியோ நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால் ரியோவே பல சமயங்களில் நிஷாவை காமெடி பீஸாகத்தான் கையாள்கிறார்.
அடுத்த வார தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு. இதில் இளையவர்களான ஆஜித் மற்றும் கேபியின் பெயர் பலமுறை அடிபட்டது நல்ல விஷயம். ‘காணாமல் போன சிறுவர்கள்’ பட்டியலில் இருந்து விலகி அவர்கள் மெல்ல மெல்ல முன்னேறி வருவது வளர்ச்சிக்கான அறிகுறி. சோம் மற்றும் நிஷாவின் பெயர்களும் அடிபட்டன.

தலைவர் போட்டிக்கு இறுதி நிலையில் வந்தவர்கள் ஆஜித், கேபி மற்றும் நிஷா. இது வழக்கம் போல் உடல் தகுதியை வைத்து செய்யப்படும் டாஸ்க். எனவே நிஷா வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை. இந்த பேட்டர்னை மாற்றி மூளையைப் பயன்படுத்தி வெற்றி பெறும் விளையாட்டை பிக்பாஸ் சமயங்களில் பின்பற்றலாம்.

ஒருவேளை நிஷா வெற்றி பெற்றால் அவருடைய தலைமையில் வீடு எப்படி இருக்கும் என்று பார்க்க நினைத்தேன். அது நிறைவேறவில்லை. பலூனை உடைத்து விளையாட்டில் வெற்றி பெற்று தலைவர் ஆனார் ஆஜித்.

பிக்பாஸ் – நாள் 40

‘நான்தான் தலைவராக்கினேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளும் வாய்ப்பு இந்த முறை பாலாஜிக்கு இல்லை. ஆனால் ஆஜித், பாலாஜி குரூப்பை சேர்ந்தவர் என்பதால் பாலாஜிக்கு சில அனுகூலங்கள் இருக்கலாம். ஆஜித்தை கைப்பாவையாக வைத்து சில காரியங்களை முடிக்க நினைக்கலாம். பலூன் போட்டி முடிந்ததும் ‘இந்த பலூன்ல இருந்தா காயின் கொட்டுது’ என்று சீரியஸாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் ரமேஷ்.

சனத்தின் பிறந்தநாள். எனவே அதற்கான கேக் வந்தது. பெரும்பாலோனோர் குழுமியிருந்தாலும் ‘அவஹ வந்துரட்டும்’ என்று பாலாஜிக்காக காத்திருக்க முடிவு செய்தார் சனம். (குஷி –பார்ட் 2). சனத்தின் ‘சனங்கள்’ அதாவது உறவினர்கள் வீடியோ வாழ்த்து சொன்னார்கள்.

**

பிக்பாஸ் – நாள் 40

வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் ஒரு புதிய பஞ்சாயத்து. எலுமிச்சையை தலையில் தேய்த்தால் பைத்தியம் போகுமாம். ஆனால் அதே எலுமிச்சைக்காக பைத்தியக்காரத்தனமாக அடித்துக் கொண்டார்கள். ‘நாங்க கேட்கும் போது லெமன் கிடைக்க மாட்டேங்குது. ஆனால் ரமேஷூக்கு மட்டும் கிடைக்குது’ என்கிற புகாரை சம்யுக்தாவும் சுச்சியும் வைத்தார்கள். இதை ஆரி விசாரித்துக் கொண்டிருந்தார்.

கிச்சன் டீம் பொறுப்பில் இருந்த அனிதாவிடம், ஆரி இதைப் பற்றி விசாரிக்க, “சம்யுக்தா மேட்டரை விட்டுடுங்க" என்று செளகரியமாக சொன்ன அனிதா, "எதையுமே கண்டுக்க மாட்றீங்க” என்பது போன்ற புகாரை போகிற போக்கில் சொல்லி விட, ஆரி எண்ணெய்யில் போட்ட பூரி போல சூடானார்.

“நீ தலைவர் பொறுப்பை சரியாக செய்யவில்லை" என்று சொல்வது கடுமையான குற்றச்சாட்டு. அதை சொல்லி விட்டு, "ஏன் கத்தறீங்க” என்று ஆரியிடம் அனிதா கேட்பது முறையற்றது. செய்வதையும் செய்து விட்டு, "யார் கூடவும் இந்த வீட்ல பேச பயமாயிருக்குது. யாருதான் எனக்கு இருக்காங்க?" என்று ஒரு டீஸ்பூன் கண்ணீர்விட்டார் அனிதா.

கண்ணீரை பெண்கள் ஒரு பயங்கரமான ஆயுதமாக பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தினாலும் மதிப்பிழந்து போகும். அதிலும் அனிதாவின் புலம்பலும் கண்ணீரும் பல சமயங்களில் எரிச்சல் மூட்டும் விதமாக இருக்கிறது.

பிக்பாஸ் – நாள் 40

'ஒரு புறாவிற்கு இத்தனை அக்கப்போரா’ என்கிற வசனம் போல "அரை லெமனுக்கு ஏம்ப்பா இத்தனை சண்டை?” என்று இடையில் ஆலோசனை சொன்னார் சனம். அவருக்கு ‘எலுமிச்சை’ விவகாரத்தில் போதுமான முன்அனுபவம் இருப்பதே காரணம்.

"நாங்க முன்னாடியே சொல்லிட்டுத்தான் எடுத்து வெச்சோம்” என்று நிஷாவிற்காக பரிந்து கொண்டு வந்தார் ரியோ. ‘முன்னாடியே சொல்லிட்டோம்’ என்பது நியாயமான காரணம் அல்ல. ஒரு வீட்டில் அனைவருக்கும் உணவு பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் திட்டமிடுவதே நேர்மையானது. ஆனால் அதிகாரம் கையில் இருப்பவர்களிடம் இது போன்ற பாரபட்சங்கள் நிகழ்ந்துதான் தீரும். அதுதான் மனித குணம்.

‘அய்யோ... கண்டுபிடிச்சிருவாய்ங்க போலயே’ என்பது போல் பதறிய நிஷா, ‘சின்ன சின்ன விஷயத்துக்குதான் பெரிய பஞ்சாயத்து வெக்கறாய்ங்க’ என்று அலுத்துக் கொண்டார். ‘தோ பார். பயப்படாத... செக்ஷன் 3-A- ஒரு ரூல் இருக்கு. அதைச் சொல்லி நீ இந்த எலுமிச்சம் பழம் கேஸ்ல இருந்து வெளியே வந்துடலாம்’ என்பது போல் நிஷாவிற்கு வழக்கறிஞர்களாக மாறி ஆலோசனை தந்து கொண்டிருந்தார்கள், ரியோவும் அர்ச்சனாவும். கிச்சன் டீம் மாறியும் இன்னமும் அதிகாரம் அர்ச்சனா குழுவிடம்தான் இருக்கிறது போல.

‘மக்களே.. இது தீபாவளி வாரம்... மகிழ்ச்சியா இருக்கணும்னு பிக்பாஸ் சொல்லியிருக்காரு’ என்கிற கறார் அறிவிப்பின் மூலம் ஆட்டத்தைக் கலைத்தார் அர்ச்சனா. அது அவர்களின் குழுவிற்கு சார்பாக எடுக்கப்பட்ட சாதுர்யமான விஷயம். ‘பஞ்சாயத்தாடா.. இது... பஞ்சாயத்தே இல்லைடா. இந்தப் பய வேணுமின்ட்டே பேசறாண்டா’ என்று நாற்காலியை விசிறியடித்து ஆட்டையைக் கலைத்த அந்தப் பெரியவருக்கு நிகரான சாதுர்யம் அர்ச்சனாவிற்குள்ளும் இருந்தது.

அனிதாவிற்குப் பரிசாக அளிக்கப்பட்ட கரடி பொம்மையை ரம்யா வைத்து விளையாடிக் கொண்டிருக்க அதை தான் பிடுங்கி அழும்பு செய்து கொண்டிருந்தார் அர்ச்சனா. இதைக் கண்டு பொறுக்காத ரம்யா, ‘ஏம்ப்பா... தம்பி. நீ ஏதோ மார்ஷியல் ஆர்ட்ஸ்லாம் படிச்சிருக்கியாமே. அந்த கரடி பொம்மையை பிடுங்கிக் கொடு பார்ப்போம்’ என்பது போல் சொல்லி சோமை ஏவி விட ‘இதோ’ என்று மின்னல் நொடியில் பிடுங்கித் தந்தார் சோம். ரம்யாவிற்காக இமயமலையைக் கூட தொட்டு வரும் உற்சாகத்தில் இருக்கிறார் அவர்.

“பொண்ணைப் பார்த்தவுடனேயே… அம்மாவை மறந்துட்ட பாத்தியா...” என்று அர்ச்சனா சென்டிமென்டடலாக மிரட்ட மறுபடியும் ரம்யாவிடம் சென்றார். ஏறத்தாழ இதே போன்றதொரு சம்பவம் ஆஜித் – ரமேஷ் – நிஷா ஆகியோர்களுக்கு இடையில் நடந்தது. இதில் நிஷாவிடம் ரமேஷ் கோபித்துக் கொண்டார். ஆனால் இங்கு அது போன்ற விபத்துக்கள் ஏதும் நடைபெறவில்லை.

**

பிக்பாஸ் – நாள் 40

அடுத்தது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. ஒரு பிரபல நிறுவனத்தின் சார்பில் மக்கள் விற்பனையாளர்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் மாற வேண்டும். இதற்காக வீடு இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டது.

அணி A-ல் கேபி, ரியோ, அனிதா ஆகியோர் விற்பனையாளர்களாக இருந்தார்கள். அணி B-ல் சாம், சோம், ரமேஷ் ஆகியோர் விற்பனையாளர்களாக இருந்தார்கள். ‘அந்தக் காலம்... அது அது வசந்த காலம்’ என்கிற பாரம்பர்ய பாடலைப் பாடி முதல் அணி வாடிக்கையாளர்களை வரவேற்க, இரண்டாவது அணியோ லேகியம் விற்பவர்களைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தது. ‘வாங்க சார்.. வாங்கம்மா’ என்று கூட்டத்தைக் கூட்டி கூவிக் கொண்டிருந்தார் சோம். சுச்சியும் ரம்யாவும் மிக மொக்கையான ஸ்லோகன்களைச் சொன்னதில் ஒரிஜினல் கடை ஓனரே காண்டாகியிருப்பார்.

ரம்யாவை வாடிக்கையாளராக பார்த்தவுடன் சோமிற்கு உற்சாகம் தாங்கவில்லை. விட்டால் கடையையே எழுதிக் கொடுத்து விடுவார் போலிருக்கிறது. லேகியம் விற்ற இரண்டாவது அணி வெற்றி பெற்றது. இதற்காக பரிசுகள் வழங்கப்பட்டன.

புத்தம் புது ஆடைகளில் வண்ணமயமாக மக்கள் வந்து நிற்க ‘விக்ரமன்’ படக்காட்சி போல இருந்தது. ‘நீங்க எல்லோரும் ரொம்ப அளகா இருக்கீங்க... ரவா லட்டும் முறுக்கும் சூப்பர்’ என்பது போல் பிக்பாஸ் சான்றிதழ் தர, மக்கள் உற்சாகமானார்கள்.

அடுத்ததாக ‘அதிர்ஷ்ட சக்கரம்’ என்னும் சுவாரஸ்யமான விளையாட்டு. சக்கரத்தைச் சுற்றி விட்டு வந்து நிற்கும் எண்ணின் பின்னால் என்ன பரிசு என்பது ஒளிந்திருக்கும்.

‘நீங்க அறிவிப்பை நல்லா படிச்சீங்க அர்ச்சனா’ என்று ஒருமுறை பிக்பாஸ் பாராட்டி விட்டார் என்பதற்காக ஒவ்வொரு முறையும் நாடகத்தனமாக பேசி இம்சிக்கிறார் அர்ச்சனா. இதற்கான அறிவிப்பையும் அவர்தான் வாசித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஹை டெசிபலில் கத்துவதை யாராவது பொதுநல வழக்கு போட்டு தடுக்கலாம். இப்படி கத்துவதைத்தான் சிறந்த பாணி என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. காது ‘ஙொய்’ என்றாகி எரிச்சல்தான் மிஞ்சுகிறது.

பிக்பாஸ் – நாள் 40
அதிர்ஷ்டம் சார்ந்த இந்த விளையாட்டில் சிலருக்கு நல்ல பரிசுகள் கிடைத்தன. சோமிற்கு DJ music கிடைத்தது. ஆனால் சிலருக்கு வெறும் ‘ஹேப்பி தீபாவளி’ மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றமானார்கள். ரம்யாவிற்கு அவரது சிரிப்பைப் போலவே ‘மத்தாப்பூ’ பரிசாக வந்ததில் ஏதோவொரு கவித்துவமான நீதி இருக்கிறது. (ஹிஹி...)

இந்த வரிசையில் சனத்திற்கு கிடைத்ததுதான் ஹைலைட். ஆம். அவருக்கு ‘எலுமிச்சம்பழம்’ பரிசாக கிடைத்தது. இந்த தற்செயலான காமெடிக்கு மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘கூல்டிரிங்ஸ்’ என்கிற பரிசு வந்தவுடன் சுச்சியும் அர்ச்சனாவும் பேய் பிடித்தது போல் ஏன் கத்திக் கூவினார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் விரும்பிக் கேட்டதாக இருக்கலாம் போல.

“என்ன பிக்பாஸ்... சுண்டல், முறுக்கு–ன்னு சைட்டிஷ் மட்டும் கொடுத்திருக்கீங்க. மெயின் அயிட்டத்தை காணோமே" என்று கவுண்டமணி குரலில் முயற்சி செய்து பேசிய ரியோ பிறகு சோமுடன் இணைந்து தண்ணியடித்ததைப் போன்று பாவனை செய்து சமாதானம் ஆனார். இவ்வாறு மதுவில் அதிகம் விருப்பம் உள்ளது போல் பாவனை செய்பவர்கள், பாதி பாட்டில் பியரிலேயே குப்புறப்படுத்து விடுவார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.

வேறு ஏதும் கன்டென்ட் கிடைக்கவில்லை போல. ‘ஆலுமா டோலுமா’ வகையறா பாட்டுக்களை ஒலிக்க வைத்து ‘ஆடுங்க’ என்பது போல் விட்டு விட்டார் பிக்பாஸ். மழை பெய்தாலும் உற்சாகமாக ஆடினார்கள் மக்கள். ஸ்டோர் ரூம் மணி அடிக்கும் போது வீட்டின் உள்ளே ரியோவும் சோமுவும் மட்டும் இருந்தார்கள். ‘பிக்பாஸ் இரக்கப்பட்டு சரக்கு அனுப்பியிருப்பாரோ’ என்கிற நப்பாசையுடன் வந்தவர்களுக்கு சோறு காத்திருந்தது. ‘ச்சே..’ என்று வெறுத்துப் போனவர்கள் சிக்கனும் கூடவே இருந்ததைப் பார்த்து கூலாகி விட்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 40

இந்த வாரம் நாட்டாமைக்கு அதிக வேலையிருக்காது. தீபாவளி சமயம் என்பதால் இரண்டு நாட்களும் கொண்டாட்ட மனநிலையிலேயே கழிந்து விடலாம். மேலும் இந்த வாரம் நாமினேஷனும் இல்லை என்கிற காரணத்தினால் எவிக்ஷன் சடங்கும் இல்லை. அதனாலேயே இந்த வாரம் டல்லடித்தது என்பதையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.

சரி, இந்த வாரம் எவிக்ஷன் சடங்கு ஒருவேளை இருந்திருந்தால் ‘வீட்டை விட்டு முதலில் வெளியேற்றப்பட வேண்டியவர் யார்?” கமென்ட் பாக்ஸில் கொலைவெறியோடு வந்து பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்...


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-captain-in-the-house-bigg-boss-tamil-season-4-day-40-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக