Ad

சனி, 14 நவம்பர், 2020

`யூரியாவுக்கு பதில் தயிரே போதும்! - முஸாஃபர்பூர் இயற்கை விவசாயிகளின் கலக்கல் முயற்சி

இயற்கை விவசாயத்தில், `செலவு குறைவு, வரவு பெரிது' என்பதுதான் தாரக மந்திரம். அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் தயிரைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர் விவசாயிகள். தயிரைப் பயன்படுத்தியே விவசாயமா என்று தோன்றலாம். ஆமாம்... தமிழ்நாட்டிலேயும் இயற்கை விவசாயத்தில் தயிர் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருபடி மேலே போய் தயிரையே சற்று மாற்றி யூரியா, டி.ஏ.பி-க்கு மாற்றாக விவசாயத்தில் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள் பீகார் மாநிலம் முஸாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்.

Farmer (Representational Image, File)

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகர்நாத் பிரசாத் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இந்தத் தயிர் கலவையைப் பயன்படுத்தி யூரியாவின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளனர். 2 லிட்டர் தயிரைக் கொண்டு 25 கிலோ யூரியாவின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் அங்கீகரித்துள்ளது. பீகார் மாநிலம் முஸாஃபர்பூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் விவசாயிகள் யூரியாவுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதோடு மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் வளரும் செடிகளுக்கு பூப்பதற்கு முன் அதாவது, செடி நட்ட 25-வது நாளில் தயிரைத் தெளித்தால் நல்ல வகையில் பூக்கள் பூத்து மகசூல் பெருக்கும் என்கின்றனர் விவசாயிகள். அதேபோன்று நெல், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு நட்ட 40-வது நாளுக்கு மேல் தெளித்தால் அதிக பூக்கள் பூப்பதும், நிறைய காய்கள் காய்ப்பதும் நடக்கிறது என்கின்றனர் விவசாயிகள். இதையே சற்று மதிப்புக்கூட்டி வெந்தய பேஸ்ட் அல்லது வேப்பெண்ணெயைத் தயிர் கலவையில் கலந்தால் அது மிகச்சிறந்த பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

தயிர் கலவையை எப்படித் தயாரிப்பது?

2 லிட்டர் தயிரை ஒரு மண் சட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் காப்பர் (தாமிரம்) கம்பி அல்லது ஸ்பூனைப் போட்டு 8-15 நாள்கள் விட வேண்டும். அதன் நிறம் மாறியிருக்கும். பிறகு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். நெல், காய்கறிகள், மக்காச்சோளம், கோதுமை என்று அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது. இதனால் யூரியாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் தயிர் கலவையை மண்புழு உரத்தோடு (வெர்மி கம்போஸ்ட்) கலந்து பயிர்களுக்குக் கொடுத்தால் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைத் தீர்க்கும். பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள், பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். தயிர், மண்புழு உரம் கலந்த கலவையை நெற்பயிர் என்றால் தூவலாம். பழப்பயிர்கள், மரப்பயிர்கள் என்றால் வேரைச் சுற்றி இடலாம் என்று தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

மாணிக்கம்

இது சம்பந்தமாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வளம்குன்றா வேளாண்மை துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மாணிக்கத்திடம் பேசியபோது, ``தயிரைப் பயிர்களுக்குக் கொடுக்கும்போது தயிரிலுள்ள மூலக்கூறுகளைப் பயிர்கள் உடனடியாக எடுத்துக்கொள்ளும். இதனால் பயிர்களுக்கு இம்யூனிட்டி பவர் கூடும். அதனால், பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நாம் குளுக்கோஸ் சாப்பிட்டால் உடல் ஆற்றல் பெறுவது போன்றதுதான் இது. இது நோய்களுக்கு எதிரான பயிரின் உறுதித் தன்மையை நிறுவ செய்கிறது. தயிரில் நுண்ணுயிரிகள் நிறைய இருக்கின்றன. இதன் செயல்பாடு தயிரை எடுத்துக்கொள்ளும் மனிதர்களுக்கோ பயிர்களுக்கோ ஒரு எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்கிறது.

தயிரில் காப்பர் கம்பியை வைப்பது, நோய் எதிர்ப்பு சக்தி தயிரில் கலக்க வேண்டும் என்பதற்காகத்தான். காப்பர் மூலமாக கிடைக்கும் காப்பாக்சி குளோரைடு, நோய் எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கிறது. எப்படி காப்பர் டம்ளரில் தண்ணீர் வைத்து குடிக்கிறோமோ அதைப் போன்றதுதான் இது. ஆனால், காப்பர் தயாரிப்பில் நிறைய ரசாயன பொருள்கள் பயன்படுத்துவதால், பல்கலைக்கழகம் அதைப் பரிந்துரைப்பதில்லை. இதற்குப் பதிலாக ஆவாரம் பூக்கள், இலை, விதைகளைப் பயன்படுத்தலாம். இன்னொன்று தயிர், இயற்கை விவசாயத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பஞ்சகவ்யாவில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நுண்ணுயிர்களைப் பெருக்கும் தன்மையுடையது. இந்த கொரோனா காலத்தில் இம்யூனிட்டி பவருக்காக சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுபோலத்தான், தயிரையும் பயிர்களுக்குக் கொடுப்பது. தயிரைத் தாராளமாக பயிர்களுக்குப் பயன்படுத்தி விளைச்சல் எடுக்கலாம்” என்றார்.

Farmers

இதுசம்பந்தமாகப் பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வத்திடம் பேசியபோது, ``தயிர் பொதுவாக பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள், வைரஸ் நோய்கள், பாக்டீரியா சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும். தமிழ்நாட்டிலும் விவசாயிகள் தேமோர் கரைசல், பஞ்சகவ்யா எனப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பூச்சிகளை விரட்டும் என்பது நிரூபிக்கப்படவில்லை” என்றார்.

மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயிலிடம் பேசியபோது, ``வெர்மி கம்போஸ்ட்டை (மண்புழு உரம்) பயிர்களுக்குக் கொடுக்கும்போது அது மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்ணை வளப்படுத்துகிறது. வெர்மி கம்போஸ்ட்டோடு தயிரைக் கலந்து கொடுக்கும்போது, அது மேலும் அதிகமாகச் செயலாற்றும். அதனால், வெர்மி கம்போஸ்ட்டில் தயிர் கலந்து கொடுப்பதால் தவறேதும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/bihar-muzaffarpur-farmers-uses-curd-as-a-fertiliser-instead-of-urea

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக