Ad

புதன், 7 அக்டோபர், 2020

`நான்கு கண்டிஷன்கள்!'- போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன்

நடிகர் சுஷாந்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக ஒரு வழக்கும் சுஷாந்தின் காதலி ரியாவின் வாட்ஸ்அப் சாட்டின் அடிப்படையில் ஒரு வழக்கையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் நடிகை ரியா கடந்த செப்டம்பர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் ஷோவிக்கும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ரியா சக்ரபோர்த்தி

இவர்களது ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சரங் வி கோட்வால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை ரியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேநேரம், ரியாவின் சகோதரர் ஷோவிக்கின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சுஷாந்துக்கு ஷோவிக் மூலமாக போதைப்பொருள் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அப்டெல் பாசித் பரிஹருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது.

Also Read: `சுஷாந்த் மரணம் கொலையல்ல.. தற்கொலைதான்!'- எய்ம்ஸ் மருத்துவர் குழு

ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பெர்சனல் பாண்ட் மற்றும் அதே அளவு மதிப்பிலான ஒன்று அல்லது இரண்டு ஸ்யூரிட்டிகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடிகை ரியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், இவற்றை சமர்பிக்க அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டதால், உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ரியா ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், முன் அனுமதியின்றி மும்பை சிறப்பு நீதிமன்ற அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளது. அதேபோல், அடுத்த 6 மாதத்துக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் மாதத்தின் முதல் திங்கள்கிழமைகளில் ஆஜராகவும் ரியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுஷாந்த், ரியா சக்கரபோர்த்தி

ரியாவுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு வழக்கறிஞர் அணில் சிங், உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருப்பதால், இந்த உத்தரவைக் குறைந்தது ஒருவாரம் நிறுத்திவைக்கா வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால், நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் ரியா, அடுத்த 10 நாள்களுக்கு தினசரி ஆஜராக உத்தரவிட வேண்டும் என அரசு வழக்கறிஞர் வேண்டுகோள் வைத்த நிலையில், நீதிபதி அதை ஏற்றுக்கொண்டார்.

Also Read: சுஷாந்த் வழக்கு: `4 சொட்டுகள் கலந்து குடிக்க வை!’ - ரியா வாட்ஸ்அப் உரையாடல் அம்பலப்படுத்திய சதி?

இதுகுறித்து பேசிய ரியாவின் வழக்கறிஞர் சதிஷ் மணிஷிண்டே, ``ரியாவுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மையே வெல்லும். இந்த வழக்கில் ரியா கைது செய்யப்பட்டது சட்டத்தை மீறி நடந்த செயல். இதன்மூலம் சிபிஐ, அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என 3 மத்திய அரசு ஏஜென்சிகள் மூலம் ரியா துரத்தப்பட்டது முடிவுக்கு வந்திருக்கிறது'' என்றார்



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/mumbai-hc-grants-bail-for-actress-rhea-in-drugs-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக