Ad

புதன், 7 அக்டோபர், 2020

``மனித மூளைக்கு AI மாற்றாகாது!''- முகேஷ் அம்பானி

வெறும் டெலிகாம் நிறுவனமாக மட்டுமில்லாமல் இந்தியாவின் மிக முக்கிய டெக் நிறுவனமாகவும் வளர்ந்து நிற்கிறது ரிலையன்ஸ் ஜியோ. அதை நிரூபிக்கும் விதமாக இந்த கொரோனா காலத்திலும் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் பலவும் ஜியோவில் முதலீடு செய்திருக்கின்றன. டெக் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுடனும் ஏதோ ஒரு வகையில் கூட்டணி அமைத்திருக்கிறது ஜியோ.
Artificial Intelligence | செயற்கை நுண்ணறிவு

இப்போது டெலிகாம், ஆன்லைன் வர்த்தகத்திற்கு அடுத்து இந்தியாவைப் புரட்டிப்போடும் பெரிய விஷயமாகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இருக்கும் என நம்புகிறார் முகேஷ் அம்பானி. என்றும் மனித அறிவை செயற்கை நுண்ணறிவு விஞ்சிவிடாது. ஆனால், நமது வளர்ச்சியில் AI மிகவும் முக்கிய பங்காற்றும் எனப் பேசியிருக்கிறார் அவர்.

"பொருளாதார வளர்ச்சி, நவீன வேளாண்மை, குறைந்த விலை மருத்துவம், உலகத்தரக் கல்வி என இந்தியாவின் கனவுகளை நனவாக்கச் செயற்கை நுண்ணறிவு இன்றியமையாதது." என நேற்று நடந்த Responsible Artificial Intelligence for Social Empowerment summit (RAISE 2020) மாநாட்டில் பேசியிருக்கிறார் அவர்.

"செயற்கை நுண்ணறிவில் உலகின் முன்னணி நாடாக உயர இந்தியாவிற்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் தற்போது சரியாக அமைந்து இருக்கிறது. பலம் பொருந்திய, சம வாய்ப்பளிக்கும் நிலையான இந்தியாவைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும். நான்காவது தொழிற்புரட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தத் தொழில்நுட்பங்கள்."

முகேஷ் அம்பானி

இந்தியாவில் பல தொழில்களும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கிறது. இப்படி தனிப்பெரும் நிறுவனமாக இருந்தாலும் முறையான டேட்டா விதிமுறைகள் நிறுவப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் முகேஷ்.

“இந்தியாவை ஒரு முன்னணி டிஜிட்டல் சமூகமாக உருமாற்றத் தேவையான அனைத்து விஷயங்களும் இப்போதே நம்மிடத்தில் இருக்கின்றன. தேவைக்கு அதிகமான தகவல்களை நமது சமூகமும் பொருளாதாரமும் உருவாக்கப் போகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு எரிபொருள் இந்தத் தகவல்கள்தான். இந்தத் தகவல்கள் நம் டிஜிட்டல் வளம். இப்போது உலகமே இதை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் அரசு இந்த டிஜிட்டல் வளங்களைப் பாதுகாக்க முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பு ஒன்றை நிறுவும் என நம்புகிறோம். மக்களின் ப்ரைவசியை அது பாதுகாக்க வேண்டும்" என்றும் பேசியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

மொபைல் போன்

இதே மாநாட்டில், "அறிவிலும் கற்றலிலும் எப்போதும் உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்துவருகிறது. அபாரமான மனித அறிவின் வெளிப்பாடுதான் செயற்கை நுண்ணறிவு. இதுவும் நமக்கான களம்தான்" எனப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு ஆயுதமாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அனைவரும் இதில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

நாளைய உலகில் செயற்கை நுண்ணறிவு எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்... கமென்ட்களில் பதிவிடுங்கள்!


source https://www.vikatan.com/technology/tech-news/ai-never-can-never-replace-human-mind-says-mukesh-ambani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக