Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

`உழைப்பை மதிப்பவர்கள் அங்கு இல்லை!' தி.மு.க-வில் இணையும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்?

தமிழக முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க பொருளாளருமான மருத்துவர் சுந்தரராஜ், தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல் வெளிவந்திருக்கிறது. தி.மு.க-வில் தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக இருக்கும் ராஜ கண்ணப்பன் மூலமாக இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மருத்துவர் சுந்தரராஜிடம் பேசினோம்.

``அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தியில் நீங்கள் தி.மு.க-வில் இணையவிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

சுந்தரராஜ்

``என்னை தி.மு.க-வில் உள்ளவர்கள் அணுகிப் பேசுகிறார்கள். நான் கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாததும் ஒரு காரணம். சேவல் சின்னத்தில் போட்டியிட்ட காலத்திலிருந்து இந்தக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். அமைச்சராக இருந்தபோதும் இரவு பகலாக வேலை பார்த்திருக்கிறேன். அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டேன். இன்னொரு கட்சிக்குப் போக வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால், ` நான் தி.மு.க-வுக்குள் வந்தால் பரமக்குடித் தொகுதியைப் பிடித்துவிடலாம்' எனக் கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசிவருகின்றனர். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறேன்."

``அண்மையில் ராமநாதபுரத்துக்கு வந்தபோதும் முதல்வர் உங்களிடம் போனில் பேசியதாகத் தகவல் வந்தது. பிறகு ஏன் அதிருப்தி?

``நான், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மூவரும் சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்கள். அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. முதல்வர் சொல்வதை மற்ற அமைச்சர்கள் கேட்பதில்லை. அம்மா ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அந்த வார்த்தையை அனைவரும் ஏற்றுச் செயல்படுவார்கள். இப்போது அப்படியில்லை. மற்றபடி, வேறு கட்சிக்குப் போகும் முடிவில் இல்லை.

அம்மா என்னை சேவல் சின்னத்தில் வேட்பாளராக நிறுத்தினார். அன்றிலிருந்து இன்று வரையில் தொகுதி மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். அதனால் மன திருப்தியோடுதான் இருக்கிறேன். மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் எவ்வளவு உழைத்தேன், இந்தக் கட்சியில் அமைச்சர், எம்.எல்.ஏ-வாக இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தார்கள் என்ற விவகாரங்களுக்குள் போக விரும்பவில்லை."

Also Read: 'மேன் ஆஃப் தி சீரிஸ்' எடப்பாடி இல்லை பன்னீர்தான்! ரகசிய பின்னணி

``முதல்வரை நேரடியாக சந்தித்துப் பேசலாமே?"

`` பரமக்குடி இடைத்தேர்தலின்போது, ` நீங்கள்தான் கேண்டிடேட். மக்களைப் போய் பாருங்கள்' என முதல்வர் சொல்லித்தான் நான் சீட் கேட்டேன். இடையில் யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. எனக்கு சீட் மறுக்கப்பட்டது. நான் இந்தக் கட்சிக்குக்காக உழைத்திருக்கிறேன். அதையெல்லாம் நினைத்துப் பார்க்காத ஆள்கள் கட்சியில் இருந்தால் என்ன செய்வது? அதைப் பற்றியெல்லாம் நான் வருத்தப்படவில்லை. மற்ற கட்சிக்குப்போவதைவிட, நான் மக்களுக்கு உண்மையாக இருக்கிறேன். எனக்கு அதுபோதும்."



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-admk-former-minister-joining-dmk-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக