Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

`சில்லறை இருக்கா...?’ - ராமநாதபுரம் வங்கியில் நூதன மோசடி..சிக்கிய விழுப்புரம் பெண்கள்

ராமநாதபுரம் அருகே வங்கி காசாளரிடம் இருந்து நூதன முறையில் ஏமாற்றி பணத்தை அபகரித்துச் சென்ற 4 பெண்கள் சிக்கினர். திருட்டுப் பணத்தை மீட்ட போலீஸார், அவர்களைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு இரு தினங்களுக்கு முன் 4 பெண்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்கள் நேராக வங்கி காசாளரிடம் சென்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிலவற்றைக் கொடுத்து சில்லறை தருமாறு கேட்டுள்ளனர். அதனை வாங்கிய வங்கி காசாளர் 500 ரூபாய் நோட்டுக்களாக அப்பெண்களிடம் திரும்பக் கொடுத்துள்ளார். அப்போது வங்கி காசாளரின் கவனத்தை திசை திருப்பும் வகையில், அப்பெண்கள் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அக்காசாளர் இப்பெண்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சில்லரை மாற்றிய தொகையில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயை மறைத்து வைத்துக் கொண்டு பணம் குறைவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து காசாளரிடம் இருந்து கூடுதலாக ஐந்தாயிரத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். வங்கியில் வாடிக்கையாளர் பணி நேரம் முடிந்த பின் காசாளர் பணத்தை சரி பார்த்தபோது ஐந்தாயிரம் ரூபாய் குறைந்து உள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் பாம்பனில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்திற்கு சென்ற அப்பெண்கள், அங்கிருந்த காசாளரையும் இதே போல் நூதன முறையில் ஏமாற்றி அவரிடம் இருந்தும் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து, வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், பதிவான காட்சிகளை கொண்டு நூதன முறையில் பணம் திருடிய கும்பலை தேடிவந்த நிலையில் போலீஸாரிடம் 4 பெண்களும் சிக்கினர்.

உச்சிப்புளி காவல் நிலையம்

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த மாலினி, பார்வதி, மீனா, மல்லிகா ஆகியோர் என்பது தெரியவந்தது. நான்கு பெண்களும் வங்கிகள், வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று சில்லறை கேட்பதுபோல் நடித்து காசாளர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தைத் திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 12,000 ரூபாயைப் பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று கவனத்தை திசைதிருப்பி நூதன திருட்டில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், இதுபோன்ற நபர்களைக் கண்டறிய ஏதுவாக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவிப்பு செய்துள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/ramnad-police-arrests-4-women-over-cheating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக