Ad

சனி, 2 செப்டம்பர், 2023

"கொஞ்சம் பணம் கொடுத்தால், நிறைய பணம் தருவோம்" - இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணிடம் 4.69 லட்சம் மோசடி!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த மாதம் 17-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓர் இன்ஸ்டாகிராம் ஐ.டி-யில் இருந்து... "ரூ.750 செலுத்தினால், 10 முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக ரூ.23,500-ஐ பெற்றுக் கொள்ளலாம்" என விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதனை கண்ட அந்த பெண், அந்த நபருடன் 'சேட்' செய்து பேசியிருக்கிறார். 

விழுப்புரம்

அப்போது, "சிறிய தொகையை கொடுத்தால், அதனை ட்ரேடிங்கில் முதலீடு செய்து, அதிக லாபம் தருவோம்" என எதிர் முனையில் சேட்டிங் செய்தவர் கூறியதோடு, 5 வாட்ஸ்அப் எண்களை அனுப்பி, வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளும்படி கூறினாராம். 

இதனை உண்மையென நம்பி அந்த பெண், தனது அண்ணன் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த வங்கிக் கணக்கிலிருந்து 3,05,497 ரூபாயையும்; தனது அம்மா, பெரியப்பா மகன், உடன்பிறந்த சகோதரர் ஆகியோரின் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து 1,64,050 ரூபாயும் என மொத்தம் 4,69,547 ரூபாயை 17.08.2023 முதல் 29.08.2023 வரை 22 தவணைகளாக, எதிர்முனையில் பேசியவர் அளித்த யு.பி.ஐ ஐ.டி-களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மோசடி

ஆனால் அந்த நபர், அந்தப் பெண்ணிடம் சொன்னபடி பணத்தை தராமல் ஏமாற்றியதோடு, மேலும் இரு வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைத்து பல்வேறு காரணங்களை கூறி, அதிக பணம் அனுப்புமாறு கேட்டு ஏமாற்றி வந்தாராம். எனவே, அந்த நபரை கண்டறிந்து தான் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு, விழுப்புரம் சைபர் க்ரைம் போலீஸாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். அதன்படி கடந்த 1-ம் தேதி மதியம் வழக்கு பதிவுசெய்த சைபர் க்ரைம் போலீஸார், நூதன முறையில் ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஆசையை தூண்டும் வகையில் இளம்பெண்ணிடம் பேசிய நபர் ஒருவர், அப்பெண்ணிடம் இருந்து நூதன முறையில் 4.69 லட்சத்தை ஏமாற்றியுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/crime/villupuram-young-woman-loses-4-lakhs-in-online-fraud-through-instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக