தூங்காநகர் மதுரையில், விமான நிலையத்துக்குச் செல்லும் பகுதியில், இரவு 2 மணிக்கு சேலையைப் போர்த்திக்கொண்டு பெண் கவுன்சிலர் ஒருவர், கடும் குளிருடன் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில், மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. வேலையாட்கள் குழியைத் தோண்டி குழாய்களை இறக்கிக் கொண்டிருந்தனர். கவுன்சிலரின் அருகில் இருந்தவர், `நீங்கள் கிளம்புங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.
அதற்கு கவுன்சிலர், `நான் கிளம்பிவிட்டால் அதிகாரிகள் கிளம்பிவிடுவார்கள், அதிகாரிகள் கிளம்பிவிட்டால் வேலை முடங்கிடும். நாளை காலைக்குள் வேலை முடிக்கவில்லை என்றால் சாலை நெரிசல் ஏற்பட்டுவிடும். எத்தனை மணியானாலும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறேன்' என்றார். இரவு முழுவதும் விழித்திருந்தாலும் மறுநாள் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் பணி முடிந்ததும் மீண்டும் கவுன்சிலர் வேலை, கட்சி வேலை என்று சுழன்றுகொண்டிருந்தவர் வேறு யாரும் இல்லை. மக்கள் பணியில் தன்னுயிரை இழந்த மதுரை வில்லாபுரத்து முன்னாள் கவுன்சிலர் லீலாவதி.
லீலாவதி, எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் பணியாளர் குப்புசாமியை மணந்தவர். இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். குப்புசாமி மூலமாக ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தன்னுடைய சமூகப்பணியைத் தொடங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அங்கமாக லீலாவதி இருந்துள்ளார். கட்சியில் இணைவதற்கு முன்னதாகவே லீலாவதிக்கு சமூக அக்கறை மேலோங்கியுள்ளது.
அரசாங்கத்தின் திட்டமான அறிவொளி இயக்கத்தின் விழிப்புணர்வு பிரசாரம் நடந்த காலமது. அப்பிரசாரத்துக்கு ஆட்கள் தேவைப்பட, லீலாவதியிடம் அரசு உதவி கேட்டுள்ளது. அரசின் நலத்திட்டத்துக்கு உதவ நினைத்த லீலாவதி, எட்டாவது படிக்கும் மகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் அனுப்பி வைக்கிறார். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காலம் என்பதால் தன் குழந்தையை இரவு வீட்டில் சேர்த்தால் மட்டும் போதும் என்ற கோரிக்கையுடன் அனுப்பியுள்ளார். இச்செயல் லீலாவதிக்கு இயல்பிலேயே சமூக அக்கறை இருந்ததை உணர்த்துகிறது.
லீலாவதி, காலை 6 மணிக்கு எழுந்தவுடனே ரேடியோ கேட்கும் பழக்கமுடையவர். காலையில் ரேடியோவில் செய்திகளைக் கேட்டுக்கொண்டே லீலாவதியின் வீட்டு வேலைகள் தொடரும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பின் தன் சமூக கடமைகளைச் செய்ய வீட்டிலிருந்து புறப்பட்டுவிடும் தியாகச்சுடர். ஜனநாயக வாலிபர் சங்கத்தில் செயல்பட்டபோது அரசாங்கத்திடம் `வேலை கொடு' என்ற பிரசார இயக்கம் மாநில அளவில் விமரிசையாக நடந்தது. இந்தப் பிரசார இயக்கத்தில் திறம்பட செயல்பட்டார். மனித சமூகத்தின் மாற்றத்துக்கு திரைப்படமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படியிருக்கையில் திரைப்படங்கள் பெண்ணின் மாண்பையும், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதையையும் குலைப்பதாக இருக்கக் கூடாது. ஆனால், அன்றைய பல திரைப்படங்கள் பெண்ணை இழிவாகச் சித்திரித்தன.
இதற்கு எதிராக லீலாவதி, ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து ஆபாசப்படங்களின் சுவரொட்டிகளுக்கு தார் பூசும் இயக்கத்தில் செயல்பட்டார். நேர்மை, மக்களின் மீதான நேசம், கொள்கைப் பிடிப்பு இவையனைத்தும் லீலாவதியை சிபிஎம் கட்சியின் மாநில குழு உறுப்பினராக்கின. லீலாவதிக்கு கட்சி இரண்டு பொறுப்புகளை ஒப்படைத்தது. மாதர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராகவும், கைத்தறி நெசவாளர் சம்மேளணத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றும் பொறுப்பு லீலாவதியிடம் கொடுக்கப்பட்டது. அன்றைய காலத்தில் கைத்தறி தொழிலாளிகளின் வாழ்வாதாரம், நூல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது நூல் விலை ஏற்றத்தைக் கண்டித்து லீலாவதி நெசவாளர்களுடன் இணைந்து மாநில முழுவதும் 15 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டமானது உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கைதான லீலாவதி 13 நாள்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைத்தறி நெசவாளர்களின் உரிமைக்காகப் போராடியவர், பெண்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளிலும் கவனம் செலுத்தினார். விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம், பொங்கல் பண்டிகைக்கு மளிகைப் பொருள்கள் கொடுப்பதற்கு அரசை வலியுறுத்தி போராட்டம் என லீலாவதியின் போராட்டப் பட்டியல் பெரிது.
கட்சிக்கூட்டங்கள், கட்சியில் கொடுக்கப்படும் வேலைகள், கைத்தறி நெசவாளர்களுக்கான போராட்டம், மாதர் சங்க வேலைகள் என்று சக்கரம் போல் சுழன்றுகொண்டிருந்த லீலாவதி எந்த இடத்திலும் தளர்ந்ததே இல்லை. பெண்கள் எவ்வளவு உயரத்துக்குச் சென்றால் என்ன! சமையலறையிலிருந்து விடுதலை மட்டும் அன்றும் கிடைக்கவில்லை, இன்றும் கிடைக்கவில்லை. லீலாவதி, பொது வேலையில் உள்ள பாரத்தை மட்டும் சுமக்கவில்லை. வீட்டு வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு, பொருளாதார சிக்கல் என எல்லாவற்றையும் தாங்கிப் பிடித்துள்ளார். வீட்டு வேலை செய்வதில் தன்னுடைய கணவர், குழந்தைகளிடமிருந்தும் எந்த வித உதவியும் பெறவில்லை.
இதுகுறித்து அவருடைய கணவர், ``என்னுடைய பங்களிப்பு இந்த வீட்டில் மிகக் குறைவு. வீட்கு தேவையான பொருளாதாரத்தில் மட்டுமே என்னுடைய பங்கு இருந்தது. அதுவும் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் லீலாவதி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு பொதுப்பணியையும் சிறப்புடன் செய்துள்ளார் என்பதை இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது" என்கிறார். போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் வாழ்ந்ததால் லீலாவதி பெரும்பாலும் நடந்தே பல இடங்களுக்கும் பயணித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டு பயணிக்கத் தொடங்கியுள்ளார். மக்கள் தங்களின் பிரதிநிதியாக ஊராட்சி தேர்தலில் மக்கள் லீலாவதியைத் தேர்ந்தெடுத்தனர்.
லீலாவதி தேர்தலில் போட்டியிட்ட போது பல பிரச்னைகளால் சூழப்பட்டாலும், துணிச்சலாக அவற்றைச் சமாளித்தவர்.
``உள்ளாட்சித் தேர்தல் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சிலர் கள்ள ஓட்டு போட வந்திருந்தனர். சமூக விரோதிகளால் சலசலப்பும் ஏற்பட்டது. ஆனால் எல்லாப் பிரச்னைகளுக்கு மத்தியிலும் கம்பீரமாக தேர்தல் பூத்தில் நின்ற லீலாவதி எனக்கும் சமூகத்திற்கும் கிடைத்த புதையல்" என்றவரின் துக்கம் தொண்டையை அடைக்க... கவுன்சிலராக பணியாற்றிய 18 மாதங்களில் லீலாவதி மக்களின் முக்கிய பிரச்னைகளைக் கையில் எடுத்ததாக கூறினார். ரேஷன் கடையில் பொருள்கள் விநியோகிப்பதில் முறைகேடுகள் இருந்தன. அந்தப் பிரச்னையில் தலையிட்டு முறைகேடுகள் இல்லாமல் மக்களுக்கு ரேஷன் பொருள் சென்றடைவதற்கு வழிவகை செய்தார்.
மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படையான ஆதாரமே தண்ணீர்தான். ஆனால் அரசாங்க லாரிகளில் விநியோகிக்கும் குடிநீருக்கு மக்களிடமிருந்து சட்டவிரோதமாக ரவுடிகளால் பணம் வசூலிக்கப்பட்டது. பணம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வில்லாபுரத்தில் குடிநீர்குழாய்கள் வரவிடாமல் தவிர்த்தனர். இந்தப் பிரச்னையில் தலையிட்ட லீலாவதி, மக்களுக்கு கட்டணமில்லாமல் குடிநீர் கிடைக்கச்செய்தார். கள்ளச்சாராய விநியோகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளையும் லீலாவதி எடுத்தார். வியாபாரிகளிடம் ரவுடிகள் மாமூல் வசூலித்து வந்தனர். லீலாவதி கவுன்சிலர் ஆனதும் மாமூல் வாங்கிய ரவுடிகளை கதறவிட்டார். ரவுடிகளின் வருமானத்தையே கேள்விக்குறியானதால் லீலாவதி மீது ரவுடிகளுக்கு வன்மம் அதிகரித்தது.
கவுன்சிலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே லீலாவதி வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் முத்துராமலிங்கம் கருமலையன், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துராமலிங்கம் உள்ளாட்சித் தேர்தலில் தன் தம்பி மனைவியை போட்டியிட வைத்தார். ஆனால், லீலாவதி தேர்தலில் வெற்றி பெற்று, சிறப்பாகச் செயல்பட்டதால் முத்துராமலிங்கத்துக்கு வன்மம். இதனால் லீலாவதி படுகொலை செய்யப்பட்டார்.
பல நேரங்களில் பழைய சோறு, பயணத்துக்கு சைக்கிள், தங்குவதற்கு குருவிக்கூடு போன்ற வீடு. இதற்கெல்லாம் மத்தியில் சமூகப்பணி, லீலாவதி நிஜமாகவே மதுரையின் அதிசயம்தான்.
source https://www.vikatan.com/gender/empowerment/councilor-leelavathy-who-fought-for-the-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக