"ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல சாலை வசதி செய்து தரவில்லை. இதனால், மழைக்காலங்களில் பத்து கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டியிருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எங்கள் பிரச்னைக்கு எப்போதுதான் தீர்வு வரும்?" என்று வெடிக்கிறார்கள் மக்கள்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் உடையகுளத்துப்பட்டியில் இருந்து மலப்பட்டி வரை சுமார் 600 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக காய்கறி வியாபாரம் செய்தும், அருகில் உள்ள ஊர்களுக்கு கூலி வேலைக்குச் சென்றும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்த சாலையானது மண்பாதையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சாலை உடையகுளத்தப்பட்டியில் இருந்து மலப்பட்டி வரை குறுகியதாக 600 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால், வேலைக்குச் சென்று வருபவர்கள், மலப்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் விரைவாக சென்று வர இந்த பாதையினை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர், "மழைக்காலங்களில் இந்த சாலைகளில் மண்ணரிப்பு ஏற்பட்டும், மழைநீர் தேங்கியும் காணப்படுவதால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் நாங்கள் முனையனூர், தாராபுரத்துனூர், சேங்கல் உள்ளிட்ட ஊர்களின் வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஆனால், இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்தால் மலப்பட்டி மற்றும் மாயனூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த வழியாக சீக்கிரம் செல்ல முடியும். ஆனால், மழைக்காலத்தில் கூடுதலாக பத்து கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
மழைக்காலங்களில் இந்த பாதையில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் போது மண்ணரிப்பு ஏற்பட்ட பள்ளங்களில் கீழே விழுந்து வருகின்றனர். அதோடு, இடையில் குறுக்கிடும் சிறு வாய்க்காலில் தண்ணீர் வரும்போது, இந்த பாதையை கடக்க முடியாது. அதனால், இது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிற்கு கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளது. அதனால், வரும் மழை காலத்திற்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், நாங்கள் அனைவரும் எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையினை தமிழக அரசிடம் திரும்ப ஒப்படைப்போம். எனவே, கரூர் மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/governance/karur-road-issue-will-the-government-take-some-action
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக