இந்திய அணிக்காக ஆடியபோது அதிரடி சூரராக அறியப்பட்டவர் வீரேந்திர சேவாக். கையுறைகளை சரி செய்து கொண்டு வெகு இயல்பாக அங்கும் இங்கும் திரும்பி பார்த்தாலே எதிரணியின் ஃபீல்டர்கள் பதறிவிடுவார்கள்.
முதல் பந்தையை பவுண்டரியுடன்தான் ஆரம்பிக்க வேண்டும் என்பது சேவாக்கின் கிரிக்கெட் புத்தகத்தில் அதிமுக்கியமான விதி. ஜீரோவில் இருந்தாலும் சரி, சதத்தை நெருங்கும் தருவாயாக இருந்தாலும் சரி சேவாக்கிடம் ஒரே மாதிரியான அணுகுமுறைதான் வெளிப்படும். பதற்றமறியா அவருடைய பேட் பவுண்டரியை மட்டுமே குறிவைக்கும். அப்படிப்பட்ட சேவாக் முன்னாள் வீரர் ஒருவருடன் நிகழ்ந்த சம்பவத்தை இப்படி பகிர்கிறார்.
'அவரை இதுவரை இரண்டு முறைதான் சந்தித்திருப்பேன். முதல் முறை ஒரு விமானப் பயணத்தின் போது சந்தித்தேன். அப்போது..
சேவாக்: சார்...நீங்கள் என்னுடைய பேட்டிங்கை பார்த்திருக்கிறீர்களா?
அவர்: 'ஆம். நீங்கள் ஒரு நல்ல பேட்ஸ்மேன். உங்களை நீங்களே இன்னும் அதிகமாக நம்புங்கள். அதுபோதும்.'
சேவாக்: 'என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த எதாவது ஆலோசனை சொல்லுங்களேன்?'
அவர்: 'உங்களுக்கு ஆலோசனையெல்லாம் தேவைப்படுவதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். உங்கள் கால்களை கொஞ்சம் அகற்றி நின்று ஆடுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்த உரையாடல் அது. ஆனால், இந்த சந்திப்பும் சில நிமிட உரையாடலும்தான் தன்னுடைய கரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார் சேவாக். 'அவரை சந்தித்த சமயத்தில் நான் ஃபார்மில் இல்லை. ரன்கள் அடிக்கவே இல்லை. ஆனால், அந்த சந்திப்புக்குப் பிறகு அந்த சிறிய ஆலோசனைக்குப் பிறகு நான் வேறுமாதிரி ஆடினேன். டெஸ்ட்டில் என்னுடைய இரண்டாவது முச்சதத்தை அடித்தேன். ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தை அடித்தேன். நிறைய சதங்களையும் குவித்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.' எனப் பேசியிருக்கிறார் சேவாக்.
சேவாக் குறிப்பிடும் அந்த முன்னாள் வீரர் சேவாக்கின் வாழ்வில் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். ரசிகர்களாலும் சக வீரர்களாலும் 'டைகர்' என கம்பீரமாக அழைக்கப்பட்ட மன்சூர் அலிகான் பட்டோடிதான் அவர்.
இந்திய கிரிக்கெட்டின் தொடக்கக் காலத்தில் ராஜ வம்சத்தை சேர்ந்த நிறைய பேர் இந்திய அணியில் இடம்பிடித்து ஆடியிருக்கின்றனர். ஆனால், டைகர் பட்டோடி அளவுக்கு வெற்றிகரமாக இயங்கியவர்கள் வெகு குறைவே. இங்கிலாந்தில் படித்து வளர்ந்து கிரிக்கெட் ஆடி தன்னை பட்டைத் தீட்டிக்கொண்ட 'டைகர்' வெறும் 21 வயதிலேயே இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்றார்.
ஆனால், அவரின் தலைமைப் பண்பில் வயதுக்கு மீறிய பக்குவமும் தொலைநோக்குத் தன்மையும் வெளிப்பட்டிருந்தது. 1970 களுக்கு முந்தைய இந்திய அணியில் பிராந்திய மனப்பாங்கு கொஞ்சம் அதிகமாகவே ஓங்கியிருந்தது. மும்பையில் ஆடும் வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மும்பையில் ஆடினால்தான் இந்திய அணிக்கு தேர்வாக முடியும் என்கிற நம்பிக்கை வெகுவாக பீடித்திருந்தது. இதனால் அடிப்படையிலேயே அனைவரும் ஒன்றிப்போவதில் ஒரு ஒவ்வாமை இருந்தது. ஒரு முகமாம இணைவதை விடுத்து மும்பை, டெல்லி, வங்கம் என பிராந்தியத்தை மனதில் வைத்தே இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர்.
அது அணிக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பட்டோடி கேப்டனான சமயத்தில் இந்த விஷயத்தைதான் முதலில் சீர்திருத்த நினைத்தார். 'நீங்கள் உங்கள் பிராந்தியத்திற்காக ஆடவில்லை. இந்தியாவிற்காக ஆடுகிறீர்கள். அந்த உணர்வோடு ஆடுங்கள். தாழ்வு மனப்பான்மையை தூக்கி வீசுங்கள். ஒன்றாக வெல்வோம்.
' இதுதான் பட்டோடி இந்திய அணிக்கு விடுத்த முதல் கட்டளை. பட்டோடியின் கட்டளைக்கு அத்தனை பேரும் செவி சாய்க்கத் தொடங்கினர். விளைவு, 1968 இல் நியூசிலாந்தில் இந்திய அணி முதல்முதலாக டெஸ்ட் தொரை வென்றது. வெளிநாடு ஒன்றில் இந்திய அணி பெற்ற முதல் தொடர் வெற்றி இதுதான். இந்திய அணிக்குள் வென்றே ஆக வேண்டும் என்கிற உத்வேக இரத்தத்தை பாய்ச்சினார் பட்டோடி.
தனிப்பட்ட முறையில் பட்டோடியுமே தீவிரமான கிரிக்கெட்டராகத்தான் அறியப்பட்டார். இங்கிலாந்தில் அவர் படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் வலது கண்ணில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. விழித்திறன் சவாலோடுதான் அவர் கிரிக்கெட் ஆட வேண்டியிருந்தது. அந்த விபத்து மட்டும் நடந்திருக்காவிடில் பிராட்மேனை போன்ற சாதனைகளை பட்டோடி செய்திருப்பார் என முன்னாள் வீரர்களும் அவரை மதிப்பிட்டிருக்கின்றனர். பேட்டிங் மட்டுமில்லை, ஃபீல்டிங்கிற்கு முக்கியத்துவம் இல்லாத அந்த காலத்திலேயே ஃபீல்டிங் பயிற்சி செய்ய தனியாக நேரம் ஒதுக்கியவர் பட்டோடிதான். கவர்ஸில் பந்துகளை பிடிக்க அவர் பாயும் விதத்தைப் பார்த்துதான் அவருக்கு 'டைகர்' என்ற பட்டப்பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.
பட்டோடியின் மனைவி ஷர்மிளா தாகூர், 60-70 காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர். அவர் பட்டோடியை முதல் முதலாக சந்தித்த அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறார். 'அவரை முதல் முதலில் ஒரு பார்ட்டியில்தான் பார்த்தேன். அவரின் உச்சரிப்பு பிரிட்டிஷ்க்காரர்களை ஒத்ததாக இருக்கும். அதனால் அவர் பேசுவதை எளிதாக புரிந்துகொள்ள முடியாது. நகைச்சுவையாக எதையாவது பேசிவிட்டு அவரே சிரித்துக்கொள்வார். ஏனெனில், அவர் பேசுவது யாருக்கும் புரிந்திருக்காது.' என்கிற ஷர்மிளா, ஆனால், 'நான் அவருடைய நகைச்சுவை குணத்தால்தான் ஈர்க்கப்பட்டேன்.' என்றும் கூறியிருக்கிறார். 'டைகர்' பட்டோடி - ஷர்மிளா தாகூர் திருமண நிகழ்வு அப்போது இந்தியா முழுவதும் பேசப்படும் வகையில் பிரமாண்டமாக நடந்திருக்கிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா பட்டோடியின் ரசிகை என்பதும் கூடுதல் சுவாரஸ்யம். பட்டோடியின் ஆட்டத்தைக் காண பைனாகுலருடன் மைதானத்துக்கு செல்வாராம் ஜெயலலிதா. இதை ஷர்மிளா தாகூருமே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
டென்னிஸ், கால்பந்து, பேட்மிண்டன் என பல விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருந்த பட்டோடி ஒருக்கட்டத்தில் அளவுக்கு மீறி விளையாடிவிட்டதாகவும் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்ததாக பட்டோடியின் மகனும் பிரபல பாலிவுட் நடிகருமான சயீஃப் அலி கான் கூறியிருக்கிறார்.
ஓய்வுக்குப் பிறகும் கடைசிகாலம் வரை துணிச்சலாக பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். வீரர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்த போது அதில் முன் நின்றவர் பட்டோடிதான். இத்தனைக்கும் இந்த சம்பவமெல்லாம் அவர் கிரிக்கெட்டை விட்டு விலகி 30-35 வருடங்களுக்குப் பிறகு நடந்தது.
'உண்மையிலேயே அப்பாதான் அந்த இந்திய அணியை கட்டமைத்தார். அவருக்குப் பிறகு வந்தவர்கள் அந்த அணி கொடுத்த பலன்களை அனுபவித்தனர். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என பல அணிகளையும் வீழ்த்தினார்கள்.
ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் இந்திய ஒரு அணியை உருவாக்கியதற்காக ஞாயமாக அவர் பெற்றிருக்க வேண்டிய புகழை கூட அவர் பெறவில்லை. இறந்தபிறகுதான் அவரைப் பற்றி நிறைய புகழ்கிறார்கள்.' என வேதனைப்படுகிறார் சயீஃப் அலி கான்.
'டைகர்' பட்டோடி வரலாறு மறக்கக்கூடாத கம்பீர நாயகன்!
source https://sports.vikatan.com/cricket/the-story-of-tiger-pataudi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக