Ad

புதன், 20 செப்டம்பர், 2023

`ரூ.9,000 கோடி’ - சென்னை ஓட்டுநர் அக்கவுன்டில் வரவு வைக்கப்பட்ட பணம்; பேசி திரும்பப் பெற்ற வங்கி!

பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், கோடம்பாக்கத்தில் நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணியளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் போது குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து ரூ 9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தி

முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாமல் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என குழம்பியிருக்கிறார். தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ105 இருந்த நிலையில், யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்திருக்கிறார். ஆனாலும், அதை சோதித்துப் பார்க்க தனது வங்கிக் கணக்கிலிருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகே ரூ 9 ஆயிரம் கோடி பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை நம்பிய அவர், அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும், இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

திரும்பப் பெறப்பட்ட தொகை

இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பிலிருந்தும், ஓட்டுநர் ராஜ்குமார் தரப்பிலிருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வங்கி தரப்பின் உரையாடல்

இதன் முடிவில், ரூ.9000 கோடி பணத்திலிருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவித்திருக்கின்றனர். தற்போது, வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ9000 ஆயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/money/9000-crores-wrongly-deposited-in-the-car-drivers-account-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக