தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கண்ணாடிகுளம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (41). விவசாயம் செய்துவரும் அவர் மாடுகளையும் வளர்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிதடி ஏற்பட்டுள்ளது. அந்த விரோதம் கொலை வரை சென்றுள்ளது.
உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தியதால் வேலுச்சாமி ஊரை காலிச் செய்துவிட்டு கயத்தாறு டோல்கேட் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்துள்ளார். கயத்தாறு பகுதியில் மனைவியுடன் குடியிருந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இளநீர் வியாபாரம் செய்து வந்த வேலுச்சாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வேலுச்சாமிக்கு தன் மனைவி இசக்கியம்மாளுக்கு கண்ணாடிகுளத்தை சேர்ந்தவரும் தனது எதிரியுமான வேல்முருகனுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சில வாரங்களுக்கு முன்பு இசக்கியம்மாள் கணவனைப் பிரிந்து தன் பெற்றோருடன் தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுதுக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார்.
தன் மனைவி இசக்கியம்மாள் பிரிந்து செல்வதற்கு வேல்முருகன் தான் காரணம் என வேலுச்சாமி சந்தேகப்பட்டுள்ளார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தென்காசி மாவட்ட கண்ணாடிகுளம் சென்றுள்ளார். அங்கு வேல்முருகன் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு சென்ற வேலுச்சாமி அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
வேல்முருகன் உயிரிழந்த பின்னரும் ஆத்திரம் குறையாத வேலுச்சாமி, மீண்டும் வெட்டியதுடன், வேல்முருகனின் தலையைத் துண்டித்து சாக்கில் போட்டு தனது மொபெட்டில் எடுத்துச் சென்றிருக்கிறார். அப்பகுதியில் தோட்டங்களில் வேலை செய்தவர்கள், வேல் முருகனின் தலையற்ற உடல் மட்டும் கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஊத்துமலை போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதனிடையே, தலையை தூக்கிச் சென்ற வேலுச்சாமி, அதை சுமார் 40 கி.மீ தூரம் எடுத்துச் சென்று தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுத்துக்குடி கிராமத்தில் தன் மனைவி வசிக்கும் வீட்டின் முன்பாக போட்டுவிட்டு தப்பிச் சென்றார். அவரை ஊத்துமலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலுச்சாமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து செல்ல வேல்முருகன் தான் காரணம். அதனால் அவரை விடக்கூடாது என்பதற்காகவே அரிவாளுடன் கண்ணாடிகுளம் சென்றேன். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த வேல்முருகனை விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கொலைக்குப் பயன்படுத்திய இரு அரிவாள்கள், மொபெட் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் விவசாயியை கொடூரமாக கொலை செய்து அவரது தலையை தூத்துக்குடி மாவட்டத்துக்குத் தூக்கிச் சென்று வீசிய கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!
source https://www.vikatan.com/crime/man-hacks-farmer-to-dead-for-family-reasons-near-tenkasi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக