Doctor Vikatan: இன்றைய சூழலில் யாருக்கு, எப்போது ஹார்ட் அட்டாக் வரும் என்றே கணிக்க முடிவதில்லை. இந்நிலையில் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகளை உணர்ந்ததும் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் குறித்து கேள்விப்பட்டேன். அது உண்மையா.... எந்த மருந்தை, எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
நெஞ்சில் அழுத்துகிற மாதிரி வலி, வியர்வை, வாந்தி போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் அது ஹார்ட் அட்டாக்காக இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். இது சரியானதுதான். ஆனால் இவை மட்டுமே ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகளாக இருக்க வேண்டும் என்றில்லை. வேறு சில அறிகுறிகளும் ஹார்ட் அட்டாக் வரப்போவதை உணர்த்தலாம்.
பெண்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் எப்போதும் மேற்குறிப்பிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்க வேண்டியதில்லை. தொப்புள் முதல் தொண்டைவரை அசௌகர்யமான எந்த அறிகுறியை உணர்ந்தாலும், அது நெஞ்சை அழுத்துகிற மாதிரியான உணர்வு மட்டுமன்றி, நெஞ்செரிச்சல், குத்துகிற மாதிரி வலி போன்றவை மூன்று நிமிடங்களுக்கு மேலும் தொடர்ந்தாலும் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இவை தவிர புதிதாக ஏதேனும் ஓர் அறிகுறியை உணர்ந்தாலும் கவனம் தேவை. தோள்பட்டை வலி, அது இடது பக்க தோள்பட்டைதான் என்றில்லை, வலது பக்கத்தில் வந்தாலும் எச்சரிக்கையாக வேண்டும். பல் வலி, தாடை வலி போன்றவற்றையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.
'இதெல்லாம் ஒண்ணுமில்லை' என உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டோ, மருத்துவரை பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ அலட்சியப்படுத்தாதீர்கள். அஜீரணமாக இருக்கும், வாயுப் பிடிப்பாக இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்யாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள்.
நீங்களே வாகனம் ஓட்டிக்கொண்டு மருத்துவரைப் பார்க்கச் செல்லாதீர்கள். அந்த நிலையில் அது சரியானதல்ல. ஒருவேளை அது ஹார்ட் அட்டாக்காக இருந்தால் இதயத்துடிப்பில் சீரற்ற தன்மை ஏற்படும். அது கார்டியாக் அரெஸ்ட்டில் முடியலாம். அதாவது இதயம் சரியாக பம்ப் செய்யாததால், மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, உடனடியாக மரணம்கூட நிகழலாம்.
உங்களுக்கு ஏற்கெனவே இதயநோய் பின்னணி இருந்தால் 325 மில்லிகிராம் ஆஸ்பிரின் மாத்திரையை உடனே எடுத்துக் கொள்ளுங்கள். உடனே ஆம்புலன்ஸை அழையுங்கள். இதயநோய் ரிஸ்க் உள்ளவர்கள் ஆஸ்பிரினோடு வேறு சில மருந்துகளையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். 300 மில்லிகிராம் க்ளோபிடோக்ரெல் (Clopidogrel) மற்றும் 80 மில்லிகிராம் அட்டோர்வாஸ்டாட்டின் (Atorvastatin) ஆகியவற்றை வைத்துக்கொள்ளலாம்.
இவற்றில் முதல் இரண்டு மருந்துகளும் ரத்தத்தை உறையச் செய்யாமல் தடுப்பவை. இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதுதான் ஹார்ட் அட்டாக்குக்கான முக்கிய காரணம்.
பிளட் தின்னர் மருந்துகளை எடுக்கும்போது இந்த அடைப்பு கரையும் வாய்ப்புகள் அதிகம். ஸ்டாட்டின் என்ற மருந்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். எனவே மாரடைப்புக்கான அறிகுறிகளை உணர்ந்ததும் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு விரையுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-is-it-ok-to-take-aspirin-for-heart-attack-symptoms
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக