Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

`மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம், ரஷ்யா, இன்னும் பல’ - ஜி20 சந்திப்புகளும் முக்கிய செய்திகளும்!

ஜி 20 கூட்டமைப்பின் 18-வது உச்ச மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக ஜி 20 மாநாடு நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு செய்துவந்தது. டெல்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபம் மாநாட்டுக்காகத் தேர்வு செய்யப்பட்டது.

ஜி 20 உச்சி மாநாடு 2023

அந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட ஜி 20 கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டுக்கு வரவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘சீன அதிபர் மாநாட்டில் பங்கேற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாநாடு சிறப்பாகவே நடந்துகொண்டிருக்கிறது’ என்று பதிலளித்தார்.

மாநாட்டின் முதல் நாளில் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. ‘பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் ஜி 20 நாடுகள் கண்டிக்கின்றன. பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்தவித நிதி உதவியும், பொருள் உதவியும், அரசியல் ஆதரவும் அளிக்கக்கூடாது. பயங்கரவாத நிதித்தடுப்புக் குழுவின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது’ என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது.

ஜி 20 மாநாடு

ஊழல் நடவடிக்கைகள் மீதான சகிப்பின்மைக்கு ஜி 20 நாடுகள் உறுதியேற்றன. ஊழலை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு, சொத்து மீட்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு, ஊழல் கண்காணிப்பு தடுப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, இவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

மாநாடு முடிந்த பிறகு வியட்நாம் சென்ற ஜோ பைடன், அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘பிரதமர் மோடியிடம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது, பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் வழங்குவது ஆகியவைதான் வளமான, வலுவான தேசத்தை உருவாக்க உதவும் என்று வலியுறுத்தினேன்' என்றார். உடனே, ‘இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்பதால்தான், செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கவில்லை. அதைத்தான், வியட்நாமுக்கு சென்ற ஜோ பைடன் குறிப்பிட்டிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ஜி 20 உச்சி மாநாடு 2023

ஜி 20 மாநாட்டையொட்டி, டெல்லியிலுள்ள குடிசைப் பகுதிகளையும், மோசமான கட்டடங்களையும் பதாகைகளாலும் துணிகளாலும் மறைத்திருந்தனர் என்ற செய்திகள் வெளியாகின. மாநாடு முடியும் வரை குடிசைப் பகுதி மக்கள் வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘ஏழைகளையும் விலங்குகளையும் மத்திய அரசு மறைத்துக் கொண்டிருக்கிறது' என்று விமர்சித்தார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `` டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல். இது ஒரு திருப்புமுனை உச்சிமாநாடு, இது பல முக்கியத் துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது. ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன. உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது.” என்றார்.

இம்மானுவேல் மேக்ரான்

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ``G20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வெளியிட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான G20 நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்திருக்கின்றன. ரஷ்யா இன்னும் போரை நடத்திக்கொண்டிருக்கிறது. பிராந்தியங்களைக் கையகப்படுத்துதலுக்கான அச்சுறுத்தலையும் தவிர்க்க வேண்டும். G20 மாநாடு உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதி நிலவ உறுதியேற்றிருக்கிறது. பிரதமர் மோடிக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டார்.

இந்தியா தரப்பில், ``G20 மாநாடு என்பது புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளைத் தீர்க்கும் தளமல்ல. இது உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. காலநிலை நெருக்கடி பற்றி பேசவே இங்கு கூடியிருக்கிறோம். எனவே, ஜி20 மாநாடு மற்ற விஷயங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்து தொடர்பான அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெயர் பல்கையில் இந்தியா என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது

ஜி 20 - மோடி

மாநாடு முடிந்த பிறகு, செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஹாலுக்கு நன்றி தெரிவிக்க வந்த மோடியிடம் மைக்கை நீட்டி வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல், கையசைத்தவாறு நன்றி மட்டும் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/g-20-summit-world-leaders-meet-and-declarations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக