Doctor Vikatan: இன்று பலரும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அதனால் இரவில் தூங்க முடியாமல், காலையில் தூங்கி, மாலையில் விழிப்பதை வழக்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் சரியானதா? அவர்களுக்கு மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுமா? இரவுத்தூக்கம் தவிர்ப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?
Uma , விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
மெலட்டோனின் என்பது தூககத்துக்கான ஹார்மோன். நம் மூளையின் ஒரு பகுதியான பீனியல் சுரப்பியிலிருந்து சுரக்கப்படுவது இது. பொதுவாக இரவு நேரம் தொடங்கும்போதுதான் இந்த ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். அதிகாலையில் 2 முதல் 4 மணி வரை அதன் சுரப்பு உச்சத்தில் இருக்கும். அதையடுத்து அது குறையத் தொடங்கும். 'சர்கேடியன் ரிதம்' எனப்படும் உடல் கடிகார சுழற்சியில் சாதாரணமாக இப்படித்தான் நடக்கும். அதனால்தான் காலையில் விழிப்புடன் இருக்கவும், இரவானால் தூங்க வேண்டும் என்றும் நம் உடல் நமக்கு உணர்த்தும்.
நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு இந்தச் சுழற்சி தலைகீழாக இருக்கும். அதாவது மெலட்டோனின் உச்சத்தில் இருக்கும்போது அவர்கள் வேலை பார்ப்பார்கள். அது குறையும்போது தூங்க வேண்டும். அதனால்தான் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு ஒருவித ஓய்வற்ற நிலை எப்போதும் இருக்கும். அதைச் சரிசெய்ய சில விஷயங்களைப் பின்பற்றாவிட்டால் அவர்களது தூக்க சுழற்சி பெரிதும் பாதிக்கப்படும். எனவேதான் அவர்களை தொடர்ச்சியாக நைட் ஷிஃப்ட் வேலை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்துவோம். நைட் ஷிஃப்ட்டுக்கு பிறகு 48 மணி நேர பிரேக் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்துவோம்.
அதே சமயம் இரண்டு நாள்கள் பகல் ஷிஃப்ட், அடுத்த இரண்டு நாள்களுக்கு நைட் ஷிஃப்ட் என மாறி மாறிப் பார்ப்பது இன்னும் மோசம். உடல் அதற்குப் பழகவே பழகாது.
மெலட்டோனின் சுரப்பைத் தூண்டுவதில் இருட்டுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. எனவே நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், வேலை முடித்து காலை வீடு திரும்பியதும், வெளிச்சம் சிறிதும் ஊடுருவாத டார்க் நிற திரைச்சீலைகள் போட்ட அறையில் தூங்க வேண்டும். காலிங் பெல் சத்தம், செல்போன் சத்தம் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காலையில்தான் தூங்க முடிகிறது என்றால் அந்த நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது காலையில் 10 மணிக்குதான் தூங்க முடியும் என்றால் அந்த நேரத்திலிருந்து மாற வேண்டாம்.
நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு மெலட்டோனின் சுரப்பானது மற்றவர்களைவிட குறைவாக இருப்பதை சில ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. அதனால்தான் நைட் ஷிஃப்ட் வேலையில் இருந்தாலும், பகலில் தூங்கினாலுமே இரவிலும் தூக்கம் வரும். அதைத் தவிர்க்க 'பிரைட் லைட் தெரபி' என்ற ஒன்றைப் பரிந்துரைப்போம். அதாவது பணியிடத்தில் நல்ல பிரகாசமான பளீர் லைட்டுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளச் சொல்வோம். தேவைப்பட்டால் சிலருக்கு மெலட்டோனின் சப்ளிமென்ட்ஸையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
குறிப்பிட்ட மணி நேரத் தூக்கம்தானே முக்கியம்.... இரவில் வேலை பார்த்துவிட்டு, பகலில் தூங்கினால் என்ன பிரச்னை என்று கேட்டால், அது ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பதே மருத்துவர்களின் பதில். இயற்கைக்கு மாறாக உடலியல் கடிகார சுழற்சியை மாற்ற நினைக்கக்கூடாது. ஆனால் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அப்படித்தான் இரவில் வேலை, பகலில் தூக்கம் என வாழ வேண்டியவர்கள், அந்த வாழ்க்கை முறையை சிறப்பாக வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/amount-of-sleep-or-time-of-sleep-which-is-more-important
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக