லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க, என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறைந்தபாடில்லை. சாமானியன் தன்னுடைய உரிமைகளைக் கூட லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு அதிகாரியால் பாதிக்கப்பட்டவர் தான் ரமேஷ் குமார் (51). திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றினை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது.
ரமேஷ் குமார் தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கேட்டுள்ளார். அப்போது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று, அதனோடு சில ஆவணங்களையும் கொண்டுவரச் சொல்லியுள்ளனர் வங்கித் தரப்பிலிருந்த அதிகாரிகள். அதையடுத்து, தன்னுடைய வீட்டு மனையினை உட்பிரிவு செய்து தனிப்பட்டா வாங்குவதற்காக கடந்த 13.7.2023 அன்று ரமேஷ்குமார் விண்ணப்பித்துள்ளார்.
பட்டாவுக்கு விண்ணப்பித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் எந்த தகவலும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதையடுத்து ரமேஷ் குமார் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு கடந்த 28.8.2023 அன்று சென்றுள்ளார். அப்போது கல்பாளையம் பிர்காவுக்கான சர்வேயர் கருப்பையா என்பவரைச் சந்தித்து, 'ஒரு மாதத்திற்கு மேலாகியும் என்னுடைய வீட்டுமனைக்கு தனிப்பட்டா வழங்கவில்லையே!' எனக் கேட்டுள்ளார். அதற்கு சர்வேயர் கருப்பையாவோ, 'ஒரு வாரம் கழிச்சி என்னைய வந்து பாருங்க. வாங்கிக்கலாம்' எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார். அதையடுத்து ஒருவாரம் கழித்து ரமேஷ்குமார் பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு சர்வேயர் கருப்பையாவோ, 'நீங்க நினைக்கிற மாதிரி உடனே முடியுற வேலை கிடையாது. ஒரு 6 ஆயிரம் ரூபாயைக் கொடுங்க. ஒரே வாரத்துக்குள்ள சப் டிவிஷன் செஞ்சு, பட்டா கொடுத்துடுறேன்!' எனக் கூறியிருக்கிறார். இதனைகேட்டு கடுப்பான ரமேஷ்குமார் நேராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சொல்படி, 'முடிவாக 5 ஆயிரம் ரூபாய் தரேன் சார். வேலையை முடிச்சிக் கொடுங்க!' என ரமேஷ்குமார், சர்வேயர் கருப்பையாவிடம் கூறியுள்ளார்.
அதன்படி, மண்ணச்சநல்லூர் அருகே சர்வே பணியில் இருந்த சர்வேயர் கருப்பையாவை நேரில் சந்தித்த ரமேஷ்குமார், ரசாயணம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். இதனை மறைந்திருந்து கண்கணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார், சர்வேயர் கருப்பையாவை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், கருப்பையாவை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சர்வேயர் கருப்பையா மீது தொடர்ச்சியாக இப்படியான புகார்கள் வந்து கொண்டிருந்ததாகவும், இப்படி பலபேரிடம் அவர் லஞ்சம் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
source https://www.vikatan.com/crime/surveyor-arrested-by-vigilance-department-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக