Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

`ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கான ரூ.1,000 ஊக்கத்தொகை என்ன ஆனது?' - அண்ணாமலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கேயம் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து தாராபுரம் சாலை ரவுண்டானா வரை நடைப்பயணமாக வந்த அண்ணாமலை, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், "அடுத்த 25 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நம் நாடு முக்கியமான பங்கை வகிக்கும். பாஜக ஆட்சியின் 10 ஆண்டுகளில், முதல் 5 ஆண்டு ஏழைகளின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகள் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. வரும் அடுத்த 5 ஆண்டு அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைக்காக செலவிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

உலக அளவில் நம் நாடு 3-ஆவது பொருளாதார நாடாக மாற வேண்டுமென்றால், அதற்கு ஊழல் இல்லாத தேசத்தை நேசிக்கும் தலைவர் வேண்டும். நரேந்திர மோடிதான் அதற்கு தகுதியானவர். தமிழகத்தில் இந்த 29 மாத காலம், திமுக குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்துகிறது. மத்தியில் ஊழலில்லாத ஆட்சி அதேவேளையில் தமிழகத்தில் 28 மாதங்களில் ஊழல் நிறைந்த ஆட்சி. இதை மக்களிடம் விளக்கத்தான் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்கிறேன்.

அண்ணாமலை

தமிழக அரசு டாஸ்மாக்குக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயத்துக்கு கொடுப்பதில்லை. விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் அளிப்பதாக தமிழக அரசு கூறியது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. ரூ. 52-க்கு இருந்த கொப்பரை விலையை ரூ.108-க்கு மேல் மத்திய அரசு குறைந்தபட்ச விலையை உயர்த்தியுள்ளது. ஆனால், அதை கொள்முதல் செய்ய தமிழக அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் தேங்காய் எண்ணெய்க்கு செஸ் வரி விதிக்கப்படுகிறது.

திமுகவின் 371-ஆவது தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இன்றுவரை அந்த வாக்குறுதி ஆனது என்று தெரியவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவியைப் பொருத்தவரை 60 சதவீத பெண்களுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துளது. எங்கு பார்த்தாலும் சாதிக்கலவரம் அதிகரித்துள்ளது.

அண்ணாமலை

29 ஆண்டுகளாக மகளிருகளுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் கண்ணாமூச்சி ஆடிவந்தனர். ஆனால், அதை தகர்த்தெறிந்து இன்று மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மோடி உறுதி செய்துள்ளார். பாஜக-வில் 33 சதவீத பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களில் இருவர் மட்டுமே பெண் அமைச்சர்கள். இதை வைத்துக் கொண்டுதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/what-happened-to-the-rs-1000-incentive-for-bull-care-takers-annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக