அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது, இந்தச் செய்தியைப் படிக்கும்போது. இந்திய மக்களின் குடும்ப சேமிப்பு (Household savings) கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. 2021-22-ம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.2 சதவிகிதமாக இருந்த இந்தியக் குடும்ப சேமிப்பு, கடந்த 2022-23-ம் ஆண்டில் 5.1 சதவிகிதமாகக் குறைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
அது மட்டுமல்ல, இந்தியக் குடும்பங்களின் நிதிப் பொறுப்பானது 2021-22-ம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவிகிதமாக இருந்தது, 2022-23-ம் ஆண்டில் 5.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய மக்கள் கடன் பெறுவதும் 36.9 சதவிகிதத்தில் இருந்து, 37.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.சேமிப்பு குறைவது, கடன் அதிகரிப்பது ஆகிய இரண்டுமே நம் மக்கள் இதுவரை கண்டிராத விஷயங்கள். வருமானம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு பணத்தைச் சேமிப்பதுதான் நம் மக்களின் வழக்கம்.
ஆனால், இப்போது மக்களின் சேமிப்பானது ஆண்டுக்கு ஆண்டு குறைய முக்கியமான காரணம் இரண்டு. ஒன்று, கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்களின் வருமானம் கணிசமான அளவில் உயரவில்லை; இரண்டாவது, பணவீக்கம். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை விலைவாசி உயர்வின் காரணமாக இழக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் மக்கள். சில்லறைப் பணவீக்கம் (CPI) 4 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என ஆர்.பி.ஐ இலக்கு நிர்ணயித்திருந்தாலும், அது தற்போது 6.83 சதவிகிதமாக இருப்பது மிக அதிகம். இந்தப் பணவீக்கம் குறைய வேண்டும் எனில், மக்கள் செலவு செய்வதைக் குறைத்து, சேமிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.
சேமிப்பு எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு கடன் வாங்கக் கூடாது என்ற சிந்தனையும் நம் மக்களின் மனதில் ஆழமாகவே பதிந்துள்ளது. ஆனால், இந்தச் சிந்தனை அண்மைக் காலமாக வேகமாக மாறிவருவதுடன் எந்தப் பொருளையும் கடனில் வாங்கினால் என்ன என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
திரும்பச் செலுத்த முடிகிற நிலையில் குறைந்த வட்டியில் ஓரளவுக்குக் கடன் வாங்கி, பொருள்களை வாங்க நினைப்பதில் தவறில்லை. ஆனால், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என எல்லாக் கடன்களையும் விரட்டி விரட்டி வாங்குவது எந்த வகையில் சரி? உலகம் முழுக்கவுமே பொருளாதாரம் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் நிலையில், வேலை இழப்பு என்பது தலைக்குமேல் தொங்கும் கத்தியாகவே பலருக்கும் இருக்கிறது. இந்த நிலையில், வாங்கிய கடனை சரியாகத் திரும்பக் கட்டாவிட்டால், பெரும்பாடு பட வேண்டியிருக்கும்!
ஆக, குறையும் சேமிப்பு, அதிகரிக்கும் கடன் என்கிற இந்த இரு பிரச்னைகளையும் எப்படி சரிசெய்வது என்பதை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். மக்களின் வருமானம் அதிகரிக்க வழிசெய்து தருவதுடன், எதற்கெடுத் தாலும் கடன் வாங்கும் பழக்கத்தை மக்களிடம் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில் அனைவருக்கும் நிதிக் கல்வி தர வேண்டும்!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/personal-finance/money/fall-in-indian-family-saving-and-hike-in-debt
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக