விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45), கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவருடன் கொத்தனார் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் தற்போது ஆதரவின்றி தெருக்களில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியைச் பூர்வீகமாக கொண்ட ஆறுமுகம், வீட்டை விட்டு வெளியேறி விருதுநகரில் பிழைக்க வந்துள்ளார். இங்கு, கிடைத்த வேலைக்கு சென்று வயிற்றுப்பிழைப்பு நடத்தி வந்த அவர், வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆதரவற்ற நிலையில் இருப்பதால் தங்குவதற்கு இடமோ, சரியான உணவோ கிடைக்காமல் தினம் அல்லல்பட்டு வந்த ஆறுமுகம், விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்துக்கு கீழ் உண்டு, உறங்கி நாள்களை கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆறுமுகம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த சுரேஷ்குமார், தன்னுடன் பணிபுரிந்த ஆறுமுகத்தின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதையடுத்து அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடிவுசெய்த சுரேஷ்குமார், தன்னிடம் செல்போன் இல்லாததால் ஆம்புலன்ஸை அழைப்பதற்காக அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியிருக்கிறார். ஆனலும், அது கைகொடுக்காமல் போகவே, அங்கு நின்றிருந்த தள்ளுவண்டியில் ஆறுமுகத்தை அமரச்செய்து மருத்துவமனை நோக்கி புறப்பட்டுள்ளார்.
சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளுவண்டியில் ஆறுமுகத்தை வைத்து தள்ளியவாறே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அவர், அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அனுமதித்தார். இதைத்தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரிக்கையில், "ஆறுமுகத்திக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக" தெரிவித்தனர். இந்த செயல் குறித்து சுரேஷ்குமாரிடம் பேசிட முயற்சி செய்தோம். ஆனால் உடனடியாக அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. உறவுகள் மீது நம்பிக்கையற்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மத்தியில், உடன் பழகியவரின் உயிரை காப்பதற்காக நோய்வாய்பட்ட நண்பரை மூன்று கிலோமீட்டர் தூரம் தள்ளுவண்டியில் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த சுரேஷ்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/features/human-stories/virudhunagar-man-saves-his-co-worker-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக