பார்வர்ட் பிளாக் கட்சித்தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய பி.கே.மூக்கையாத்தேவரின் 44-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் அனைத்துக் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ ஆர்.பி.உதயக்குமார், மற்றும் ராஜன் செல்லப்பா, ஜக்கையன் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "அனைத்து சமுதாயத்தாலும் தலைவராக அழைக்கப்படும் மூக்கையாத்தேவரின் 44-வது குரு பூஜையை முன்னிட்டு எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க தென் மாவட்டத்தின் தளபதிகள் இங்கு வந்துள்ளோம்.
மூக்கையாத்தேவருக்கு சிலை, பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் அமைக்க எடப்பாடியார் காலத்தில் திட்டம் கொண்டு வரப்பட்டு இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
நம் நாடு பாரத நாடுதான். பாரதம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அனைவரும் பழைமையை விரும்புகிறார்கள். அதேபோல பாரதத்தையும் விரும்புகிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. டி.ஆர்.பாலுவே ஒப்புக்கொண்டுள்ளார். எடப்பாடியாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்" என்றார்.
அதன் பின்பு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்த வந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, "கழகத் தலைவர் உத்தரவின்படி மூக்கையாத் தேவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்." என்றவரிடம், "பாரதம் என பெயர் மாற்றம்" குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்ப, பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dindigul-seenivasan-jolly-press-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக