விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கடந்த மாதம் 24-ம் தேதி, பகுதி நேர வேலை என்று கூறி, டெலிகிராம் ஐ.டி மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர், "நான் அனுப்பும் லிங்க் உள்ளே சென்று, அதில் வரும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை பெறலாம்" என்று தெரிவித்திருக்கிறார். இதனை உண்மையென நம்பிய பார்த்திபன், அந்த அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய லிங்க் உள்ளே சென்று தனக்கான பக்கத்தில் லாகின் செய்துள்ளார். அந்த நபர் சொன்னபடி செய்ததற்காக trail amount என ரூ.1013-ஐ தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளார் பார்த்திபன்.
இதனைத் தொடர்ந்து, பார்த்திபனிடம் பேசிய அந்த அடையாளம் தெரியாத நபர், "சிறிய தொகையை முதலீடு செய்து 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம்" என கூறியிருக்கிறார். அதன்படி பார்த்திபன், கடந்த மாதம் 31-ம் தேதி, 10,077 ரூபாயை செலுத்தி 18,000 ரூபாயாக திரும்ப பெற்றிருக்கிறார். அதே தினம் மீண்டும் 26,000 ரூபாயை செலுத்தி, 31,150 ரூபாயாக திரும்ப பெற்றிருக்கிறார். எனவே இதனை உண்மையென நம்பிய பார்த்திபன்... அந்த அடையாளம் தெரியாத நபர் பணம் அனுப்பும்படி டெலிகிராம் மூலம் அனுப்பி வைத்த யூ.பி.ஐ ஐ.டி மற்றும் வங்கி கணக்கிற்கு மொத்தமாக 1,54,000 ரூபாய் அனுப்பி வைத்து, சொன்னபடி டாஸ்க்கை முடித்துள்ளார்.
அதன்பின், வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர், பார்த்திபனுக்கு சேர வேண்டிய தொகையை தராமல், மீண்டும் பகுதிநேர வேலை செய்யும்படி கூறி ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பார்த்திபன், அந்த அடையாளம் தெரியாத நபரை கண்டறிந்து, தான் இழந்த பணத்தை மீட்டுத் தரும்படி விழுப்புரம் சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தார். அதன்படி 08.09.2023-ம் தேதி வழக்கு பதிவுசெய்த ஆய்வாளர் தேவநாதன் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார், குறிப்பிட்ட வங்கி கணக்குகளை முடக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு நபரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஆரோவில் அருகே உள்ள இடையான்சாவடி பகுதியில் வசித்து வருபவர் நிகில் ஷேகர் திவாணி. மேலே குறிப்பிட்டுள்ள சம்பவத்தைப்போல, பகுதி நேர வேலை என்று கூறி, கடந்த 4-ம் தேதி டெலிகிராம் வாயிலாக தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் அனுப்பும் லிங்க்கில் சென்று ஹோட்டல்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை பெறலாம் என கூறியிருக்கிறார். அதன்படி நிகில் செய்ததற்காக trail amount என்று 1,000 ரூபாயை நிகிலின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.
இதனை நிகில் நம்பியதும், மேற்கண்ட சம்பவத்தை போல பணம் செலுத்தி டாஸ்க் முடித்தால் கூடுதல் பணம் என கூறினாராம் அந்த அடையாளம் தெரியாத நபர். அதன்படி அன்றைய தினமே (04.09.2023) 10,000 ரூபாயை செலுத்தி 17,000 ரூபாயையும்; 25,000 ரூபாயை செலுத்தி 45,000 ரூபாயையும் நிகில் திரும்ப பெற்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி டெலிகிராம் மூலம் 4 வங்கி கணக்கு விவரங்களை அந்த அடையாளம் தெரியாத நபர் நிகிலுக்கு அனுப்பி, பணம் செலுத்தி டாஸ்க் முடிக்க கூறியிருக்கிறார்.
இதனை உண்மையென நம்பிய நிகில், தன்னுடைய மனைவி மற்றும் சகோதரரின் வங்கி கணக்குகளில் இருந்து 2,10,490 ரூபாயை, குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு 5 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த அடையாளம் தெரியாத நபர் நிகிலுக்கு சேரவேண்டிய தொகையை தராமல், ஏமாற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிகில், விழுப்புரம் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவுசெய்துள்ள சைபர் க்ரைம் போலீஸார், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்துபோது, "ஒரு சம்பவம் ஒடிசாவிலிருந்தும், மற்றொன்று பாட்னா பகுதியிலிருந்தும் நிகழ்த்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பிட்ட வங்கி கணக்குகளை முடக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சேரவேண்டி தொகையை மீட்டு தரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். குற்றவாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.
source https://www.vikatan.com/crime/a-gang-has-defrauded-two-people-from-villupuram-district-of-rs-36-lakh-by-claiming-to-be-part-time-online-jobs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக