அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இம்மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு தலைப்புகளில் கட்சி நிர்வாகிகளின் உரைகளை ஆற்ற, முதன்மைச்செயலாளர் துரை வைகோவின் பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டது.
துரை வைகோ பேசும்போது, "சனாதனத்தை அம்பேத்கர் எதிர்த்தார். சனாதனம் குலக்கல்வியை வலியுறுத்துகிறது. திறமையால் சாதிக்க முடியாது என்றது. பெண்களை அடிமைகளாகவும், குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாகவும், உடன்கட்டை ஏறுவதையும் சனாதனம் ஆதரித்தது. பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள். திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதையெல்லாம் மாற்றியது திராவிட அரசியல்.
மொகலாயர், கிறித்தவ மெஷினரிகளால் அழிக்க முடியாத சனாதனத்தின் முதுகெலும்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர், பெரியார், அண்ணா, ஆகியோரால் உடைக்கப்பட்டதை அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்ச் சமுதாயத்துக்காக கடந்த 60 ஆண்டுகளாக பெரியார், அண்ணா வழியில் உழைத்து வருகிறார் தலைவர் வைகோ. அவர் மீதான உங்கள் அன்புக்கு ஈடில்லை.
அதனால்தான் இன்று இவ்வளவு பேர் திரண்டு வந்துள்ளீர்கள். இதை பார்த்து தலைவர் வைகோ இன்று இரவு நிம்மதியாக உறங்க போவார். 3 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கத்தின் எதிர்காலம் கருதி, தொண்டர்களின் நலன் கருதி அரசியலுக்கு வந்தவன் நான். இல்லை, உங்களால் இழுத்து வரப்பட்டேன். நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த இயக்கத்தின் வெற்றிகளில் எனக்கும் பங்கு உண்டு.
தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இல்லாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டும் வகையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படத்தை தயாரித்தேன். அது உலகில் பல இடங்களில் பார்க்கப்பட்டு வருகிறது.
3 ஆண்டுகளுக்கு முன் தலைவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்திட சிலர், சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் தவறான தகவல்களை பரப்பினார்கள். அதையெல்லாம் தாங்கினேன்.
பொடா வழக்கில் சிறையில் இருந்து வெளியில் வந்து தலைவர் வைகோவுக்கு மக்கள் ஆதரவு அளித்தும், தான் தேர்தலில் போட்டியிடாமல் அந்த வாய்ப்பை சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கு கொடுத்தார்.
ஒருமுறை மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள வாஜ்பாய், அத்வானி ஆகியோர் வற்புறுத்தியபோதும் அதை ஏற்க மறுத்தவர். ஆனாலும் கட்சிக்குள் ஒரு குள்ளநரி கூட்டம் சதி செய்து கொண்டிருந்தது.
எனக்கு இந்த இயக்கம் கொடுத்த பதவி கூட தேவையிலை. தொண்டர் என்ற அடையாளம் போதும். நான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. நான் என்று கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் வெற்றி பெறவே உழைப்பேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/government-and-politics/politics/durai-vaiko-speech-at-madurai-mdmk-conference
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக