Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

Doctor Vikatan: மருத்துவர் கூறும் கம்பெனி மருந்துக்கு பதில் ஜெனரிக் மருந்து... பக்க விளைவு வருமா?

Doctor Vikatan: மருத்துவர் பரிந்துரைத்த கம்பெனி மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டுமா அல்லது அதில் இருக்கும் ஜெனரிக் பெயரில் உள்ள வேறு கம்பெனி மருந்துகளை வாங்கி உபயோகிக்கலாமா? அப்படி வேறு நிறுவன மருந்துகளை வாங்கி உபயோகிப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?

- Jay, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

மருத்துவர் அருணாசலம்

`குட் மேனுஃபேக்ச்சரிங் பிராக்டீஸை' (Good Manufacturing Practice)  பின்பற்றும் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் வராது. சில மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் மருந்துகளை வெளிநாடுகளுக்குக்கூட ஏற்றுமதி செய்கின்றன. அதேபோல எஃப்டிஏ (FDA) அப்ரூவல் பெறப்பட்ட நிறுவனங்களின் மருந்துகளையும் தைரியமாகப் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் அரசு நிறுவனங்களுக்கு சப்ளை செய்கிற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள்கூட தரம் என்ற விஷயத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்று தெரியாது. பாராசிட்டமால் 500 என எடுத்துக்கொள்வோம். அதில் வேறு வேறு நிறுவனத் தயாரிப்புகளில் 490 முதல் 520 வரை அளவில் வேறுபடலாம். அது பிரச்னையில்லை. அதுவே 650 மில்லிகிராமுக்கு பதில் 500 மில்லிகிராம் இருந்தால், அது சரியானதல்ல.

ஸ்டாட்டின் என்றொரு மருந்து... அமெரிக்காவில் ஒரு நபர், இந்த மருந்துக்கான இந்திய நிறுவனத் தயாரிப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். 20 மில்லிகிராம் மாத்திரையில் வெறும் 10 மில்லிகிராம் அளவு மருந்துதான் இருந்ததை அந்த நபர் கண்டுபிடித்திருக்கிறார். மருந்தின் வீரியம் சரியாக இல்லை என்பதை வைத்து இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அந்த மருந்தைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் 20 மில்லிகிராமுக்கு பதில் 10 மில்லிகிராம்தான் இருப்பதைக் கண்டுபிடித்து, அது இந்திய நிறுவனத் தயாரிப்பு என்பதையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் அது தயாராகும் இடத்துக்கு வந்து அதன் தயாரிப்பை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், பெருந்தொகையை அபராதமாக விதித்தார்கள்.

Medical Prescription

மருந்து ஆய்வாளர்கள், அவ்வப்போது ஒவ்வொரு பேட்ச் மருந்துகளையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதாவது மருந்து தயாராகும் இடங்களில் பரிசோதிக்க வேண்டும். மருந்துக் கடைகளிலும் மருந்து ஆய்வாளர்கள் அடிக்கடி மருந்துகளைப் பரிசோதிக்க வேண்டும்.

லோக்கல் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள், தர நிர்ணயங்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகின்றனவா என்பதை அந்த மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டாளர் பரிசோதிக்க வேண்டும்.

தயாரிப்பு இடங்களில் உள்ள பரிசோதனைக்கூடங்களில் மருந்துகளைப் பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அப்படி முறையாகப் பரிசோதனை செய்யப்பட்ட மருந்துகளைத் தான் நாம் வாங்குகிறோமா என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இத்தனை விஷயங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், ஜெனரிக் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை.

மாதிரிப்படம்

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இப்படிச் செய்யலாம்.... ஜெனரிக் மருந்துகளையும் பிராண்டடு மருந்துகளையும் மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டு, இடைப்பட்ட காலத்தில் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை வேறு வேறு லேப்களில் பரிசோதித்துப் பார்க்கலாம். இரண்டு மருந்துகளையும் எடுத்துக்கொண்டதில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்பதை இதைவைத்தே கண்டுபிடித்துவிடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-generic-drug-cause-side-effects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக