Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

`ஒரே நாடு; ஒரே தேர்தல் வேண்டாம் என்பவர்கள் ஊழல்வாதிகள்' எனும் அண்ணாமலையின் கருத்து? - ஒன் பை டூ

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

``உண்மைதான். ஊழல் செய்பவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் ஊசி குத்தியது போலிருக்கும். மற்றபடி, இந்த நடைமுறையால் அரசின் தேர்தல் செலவும், அதிகாரிகள், ஆசிரியர்களின் பணிச்சுமையும் பல மடங்கு குறையும். நம் பாரதத்தில் 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறைதானே இருந்தது... அரசியல் காரணங்களுக்காக இந்த முறையை மாற்றினார்கள். இவ்வளவு ஏன்... 1971-ம் ஆண்டு கருணாநிதியே இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். `நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் நடத்துவது நலம்’ என்று சொல்லி தி.மு.க சார்பில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அந்தத் திட்டத்தை அவர்களே எதிர்க்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை சொன்ன எதையுமே மக்களுக்குச் செய்துகொடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஓர் அமைச்சர் சிறையில் இருக்கிறார்... இன்னும் சிலர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கித்தவிக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் தி.மு.க பெரும் தோல்வியைச் சந்திக்கும். அதனால்தான், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல், கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி’ என்று பேசிவருகிறார் முதல்வர் ஸ்டாலின். அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தி.மு.க-வின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.’’

ஏ.பி.முருகானந்தம், தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``ஊழல் குறித்துப் பேச பா.ஜ.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது... சி.ஏ.ஜி அறிக்கையில் பா.ஜ.க அரசின் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் வெளிவந்திருக்கிறது. வெறும் ஒன்பது ஆண்டுகளில் உலகிலேயே பணக்காரக் கட்சியாக மாறியிருக்கிறது பா.ஜ.க. அவ்வளவு ஏன்... 2,700 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட ஜி20 மண்டபம் ஒரு நாள் மழையில் மிதப்பதிலேயே இவர்களின் ஊழல் அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்யிலேயே பிறந்து... பொய்யிலேயே வளர்ந்து... பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., `ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தார்’ என்ற பொய்யையும் சொல்கிறது. தலைவர் கலைஞரும், தி.மு.க-வும் எந்தக் காலத்திலும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தலு’க்கு ஆதரவாகப் பேசியதே கிடையாது. பா.ஜ.க சொல்கிறபடி ஒரே தேர்தல் திட்டம் வந்தால், அதுதான் இந்தியா இனி சந்திக்கும் ஒரே தேர்தலாக... கடைசித் தேர்தலாக இருக்கும் என்பதால்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அடுத்தடுத்து தேர்தல்கள் வந்தால், பா.ஜ.க-வால் இனி ஆட்சிக்கே வர முடியாது என்பதால்தான், ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, சர்வாதிகாரத்தை அமல்படுத்தத் துடிக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு... 2024 மக்களவைத் தேர்தல். அதில் பா.ஜ.க-வுக்கு மக்கள் சம்மட்டியடி கொடுக்க வேண்டும்.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-annamalai-comments-about-one-nation-one-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக