Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

Doctor Vikatan: 7 வயதுப் பெண் குழந்தைக்கு உடலில் ரோம வளர்ச்சி; பிற்கால பிசிஓடி பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் 7 வயது பெண் குழந்தைக்கு நெற்றி மற்றும் கைகளில் அதிக ரோம வளர்ச்சி காணப்படுகிறது. அவளுக்கு புருவங்களும், தலைமுடியும்கூட மிக அடர்த்தியாக இருக்கின்றன. பிறந்தது முதல் அவளுக்கு இப்படியான ரோம வளர்ச்சி இருக்கிறது. இது பிற்காலத்தில் அவளுக்கு பிசிஓடி பாதிப்பை ஏற்படுத்துமா?

Rajamanickam, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா

ஆர். கார்த்திகா | மகப்பேறு மருத்துவர், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்க உடலில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் அதற்கும் பிசிஓடி பாதிப்புக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு ஏற்படுகிற அதிகப்படியான ரோம வளர்ச்சி என்பது ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக வரலாம். உதாரணத்துக்கு டெஸ்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன் அதிகமிருப்பதால் அப்படி வரலாம்.

எனவே உங்கள் குழந்தை பூப்பெய்திய பிறகுதான் அதற்கான காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியும். சிறு வயதில் குழந்தைகள் அதிக பருமனோடு இருந்தாலோ, அவர்களது கழுத்தைச் சுற்றி கருமையான படலம் இருந்தாலோ அவர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பாதிப்பு இருக்கலாம்.

குடும்ப பின்னணியில் அம்மாவுக்கு ஏற்கெனவே பிசிஓடி பாதிப்பு இருந்தாலோ, குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகள் இருந்தாலோ, குடும்பத்தில் யாருக்காவது வழுக்கைப் பிரச்னை இருந்தாலோ அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் பிசிஓடி பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கும்.

ரோம வளர்ச்சி

இப்போதைக்கு உங்களுடைய 7 வயதுக் குழந்தைக்கு உடலில் அதிக ரோம வளர்ச்சி காணப்படுவது சாதாரணமானதுதான். அது குறித்துப் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. ஒருவேளை அந்த ரோம வளர்ச்சி அதீதமாக இருப்பதாக நினைத்தால் குழந்தைகள்நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-body-hair-growth-in-7-year-old-girl-is-it-a-symptom-of-later-pcod-damage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக