Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றாக வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து சரியா? - ஒன் பை டூ

சு.வெங்கடேசன், மக்களவை உறுப்பினர்

“இந்தி தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும்படி நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர்கள், உறுப்பினர்களெல்லாம் இப்போது இந்தியில்தான் பேச வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சி மொழிக்கான நிலைக்குழுத் தலைவராக அமித் ஷா வந்த பிறகுதான் இவ்வளவு அழுத்தம். ஒவ்வொரு வருடமும், ‘இந்தியை நாடு முழுவதும் பரவலாக்குவதற்கான நடவடிக்கை என்ன?’ என்பதை ஆய்வுசெய்து, அதை நடைமுறைப்படுத்துவதில் அநியாய ஆர்வம் காட்டுகிறது இந்தக் குழு. ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும்’ என்று 1974-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதியின்படி, இந்தி ஆட்சி மொழிக்கு விதிவிலக்கு பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. எனவே, அமித் ஷா தலைமையிலான இந்தக் குழுவால் நம் மாநிலத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசின் எல்லா அலுவலகங்களிலும் இந்தியைச் செயல்படுத்துவதற்கான (Implement Cell) அமைப்பு இருக்கிறது. சட்டவிரோதமான அந்த அமைப்பைக் கலைக்க வேண்டும். அமித் ஷா பேசும்போது, ‘இந்தியை தேசிய மொழி’ என்றும், மற்றவற்றை ‘மாநில மொழிகள்’ என்றும் சொல்லியிருக்கிறார். அட்டவணை எட்டில் இருக்கும் 18 மொழிகளும் தேசிய மொழிகள்தான் என்பதையும், 1964-ல் தமிழ்நாட்டில் மூண்ட இந்தி எதிர்ப்பு போருக்குக் காரணமே, இதே போன்ற நாடாளுமன்றக்குழு ஒன்றின் பரிந்துரைதான் என்பதையும் அமித் ஷாவுக்கும், பா.ஜ.க-வும் நினைவுபடுத்தவிரும்புகிறேன். கூடவே, ஓர் எச்சரிக்கை... போர் தொடுக்காதீர்கள்... தமிழ்நாட்டின் அடியைத் தாங்க மாட்டீர்கள்.”

சு.வெங்கடேசன், எஸ்.ஜி.சூர்யா

எஸ்.ஜி.சூர்யா, பா.ஜ.க மாநிலச் செயலாளர்

`` ‘இந்தி என்பது தொன்மையான மொழி...’, ‘இந்தியை நீங்கள் கற்றுக்கொண்டே ஆக வேண்டும்...’, ‘இந்தியைத் திணிக்காமல் நாங்கள் விடப்போவதில்லை... இதுவே எங்கள் கட்சியின் லட்சியம்’ என்றெல்லாம் ஒருபோதும் பா.ஜ.க பிரகடனம் செய்ததில்லை. இனி செய்யப்போவதுமில்லை. பன்மொழி பேசும் இந்தியாவில் தகவல் மற்றும் கருத்து பரிமாற்றத்தை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாகத்தான் இந்தியைப் பயன்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. எனவே, ‘இந்தியைத் திணித்து, மற்ற மொழிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க’ என்ற தவறான பரப்புரையை கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆண்ட மேற்கு வங்கம், திரிபுராவிலும், ஆளுகிற கேரளாவிலும் இந்தியை மூன்றாவது மொழியாக ஏற்றுக்கொண்டு, கற்றுக்கொடுக்கிற கம்யூனிஸ்ட்டுகள் தமிழ்நாட்டில் மட்டும் இந்தியை எதிர்ப்பது, கம்யூனிஸ்ட்டுகளின் சந்தர்ப்பவாத அரசியலைத் தோலுரித்துக் காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டின் ஒற்றுமை பலப்பட வேண்டும். நாடு தற்போது இருக்கும் நிலையைவிட அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டுமெனில், நாட்டிலுள்ள கருத்து மற்றும் தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்தில்தான் அப்படிப் பேசியிருக்கிறார். இதே கருத்தை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் பிரதிபலித்தார். அப்போது மத்தியில் பதவியை அனுபவித்த தி.மு.க-வும், உதிரி கம்யூனிஸ்ட்டுகளும் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, பா.ஜ.க-வுக்கு எதிராக மட்டும் பாய்வது ஏன்... தமிழ் மீதான இவர்களின் போலி அன்பையும், இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் இவர்கள் செய்யும் அற்ப அரசியலையும் இதற்குமேலும் நம்பி ஏமாற தமிழர்கள் தயாராக இல்லை!’’

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-amit-shah-talks-about-hindi-learning

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக