Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

விநாயகர், புஷ்பக விமானம் குறித்து கேரள சபாநாயகரின் சர்ச்சை கருத்து - எழுந்த எதிர்ப்பும் விளக்கமும்!

கேரள மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சியை சேர்ந்த, சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர், கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, `விநாயகர், புஷ்பக விமானம் என்பதெல்லாம் கட்டுக்கதை’ எனவும் `மூடநம்பிக்கை நம் வளர்ச்சியை பின்னுக்கு கொண்டுசென்றுவிடும். செயற்கை நுண்ணறிவு காலத்தில் இவையெல்லாம் கட்டுக்கதை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ எனவும் கூறியிருந்தார்.

விநாயகர் குறித்து சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாயர் சர்வோஸ் சொசைட்டி என்ற என்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் திருவனந்தபுரத்தில் நாம ஜப யாத்திரை நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்ந்ததாக என்.எஸ்.எஸ் துணைத்தலைவர் சங்கீத்குமார் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதையடுத்து என்.எஸ்.எஸ் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, சம்ஷீரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை வலுப்படுத்த உள்ளதாக என்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்து உள்ளது. என்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவு அளித்து உள்ளது. காங்கிரஸும் சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநில சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர்

இதுபற்றி கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "கலவரம் ஏற்படுத்த முயன்றதாக சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அரசு பிடிவாதமான மனநிலையில் செயல்படுகிறது. மனப்பூர்வமாக வேண்டும் என்றே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஏ.என்.சம்ஷீரின் விளக்கத்தை கேரளம் கேட்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாது அவர் மீது வழக்கு பதிவும் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பினராயி விஜயனின் மனநிலை என்ன என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு" என கூறினார்.

இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் எம்.பி சசிதரூர் முன்பு ஒருமுறை விநாயக்அர் குறித்து பேசிய கருத்தும் இப்போது விவாதத்தில் இணைந்துள்ளது. அதற்கு சசிதரூர் இப்போது விளக்கம் அளித்துள்ளார். "பல வருடங்களுக்கு முன்பு விநாயகர் குறித்து நான் பேசியதை இப்போது விவாதமாக்க வேண்டாம். 2014-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி-க்கு எடுத்துக்காட்டாக விநாயகரை குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு நான் அப்போது பதில் அளித்தேன். அதன் பின்னர் பிரதமர் மோடி அந்த மேற்கோளை கூறுவது இல்லை.

சசிதரூர்

மத நம்பிக்கை குறித்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். உலகத்தில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளித்தவர் சுஷ்ருஸர். மூக்கில் ஆபரேஷன் செய்வது பற்றி சுஷ்ருஸர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார். அந்த காலத்தில் அபரேஷனுக்கு பயன்படுத்திய கருவிகளும் நமக்கு கிடைத்துள்ளன" என சசிதரூர் தெரிவித்துள்ளார்.

என்.எஸ்.எஸ் நாமஜப யாத்திரை

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில கருத்துக்களை சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறி உள்ளார். நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஏ.என்.சம்ஷீர், "விஞ்ஞானம் குறித்து பிரசாரம் செய்வதை மத நம்பிக்கையை புறக்கணித்து பேசுவதாக கருதமுடியாது. மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக தெருவில் இறங்கி போராடி அடிவாங்கியவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். அன்று அவர்கள் வாங்கிய அடியால்தான் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டது. இன்று நம்பிக்கையை பாதுகாப்பதாக கூறி இறங்கியுள்ளவர்களை அன்று காணவில்லையே" என்றார். ஆனாலும் விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விவாதத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் நடவடிக்கையில் சி.பி.எம் இறங்கி உள்ளதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-chairperson-speech-and-controversy-over-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக