Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

'காவிரி நீர் பங்கீட்டில் பிடிவாதம் காட்டும் கர்நாடக அரசு' - மென்மையாக அணுகுகிறதா திமுக அரசு?

கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. இந்த அமைப்புகள், கர்நாடக அரசு காவேரியில் சரியான அளவுக்கு தண்ணீரை பங்கீட்டு தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஜனவரி வரையில் பிலிகுண்டுலு பகுதியில் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு கணக்கீடு செய்யப்படும்.

உச்சநீதிமன்றம்

அந்தவகையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கர்நாடக அரசு பங்கீட்டின் படி தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடவில்லை என்பது தெரியவந்தது. அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி நிலவரப்படி பங்கீட்டின் படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை இருக்கிறது. எனவே இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஆக, 10-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், "பிலிகுண்டுலு நீர் அளவைப் பகுதியில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்" எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் 11-ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. அப்போது கர்நாடக தரப்பில், "எங்களது மாநிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட இயலாது. எனவே விநாடிக்கு 10,000 கன அடி திறந்துவிடுகிறோம்" என்றனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இதையேற்றுக்கொண்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளப்பியது.

பிலிகுண்டுலு

காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தில் திமுக அரசு அமைதியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின. இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி புதிய மனு தாக்கல் செய்யபட்டது. அதில், "கர்நாடகவில் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய நான்கு முக்கிய அணைகள் இருக்கிறது. இவற்றில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி மொத்த இருப்புக் கொள்ளளவான 114.671 டிஎம்சியில் 93.535 டிஎம்சி (82%) நீர் இருப்பு உள்ளது. எனவே, பிலிகுண்டுலுவிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

மறுபுறம் கர்நாடக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்கள், "தென்மேற்குப் பருவமழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. இதனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு குடிநீர்த் தேவை இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்" என வாதிடப்பட்டது. பின்னர் ஒழுங்காற்றுக்குழு கர்நாடகாவில் இருக்கும் சம்மந்தப்பட்ட அணைகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில், 'கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வரத்தின்படி, ஆகஸ்ட் 9-ம் தேதி 42.54%, ஆகஸ்ட் 27-ம் தேதி 51.22% நீர்வரத்துப் பற்றாக்குறை இருக்கிறது' என கணக்கிட்டது.

டி.கே சிவகுமார்

இதையடுத்து, "விநாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்" என தமிழக அரசு தெரிவித்தது. இதுவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார். “5,000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாதது கர்நாடகாவுக்கு பெரும் வேதனையாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு மேக்கேதாட்டுதான். அதுதான் எங்களது வேண்டுகோளும் கூட. மேகேதாட்டு என்பது கர்நாடகாவுக்கு மட்டுமல்ல... தமிழகத்துக்கும் உதவும்” என்றார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் விமலநாதன். "தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் ஜூன் மாதம் முதலே கர்நாடக ஏமாற்றி வந்தது. அவர்கள் கடந்த 45 ஆண்டுகளாக சட்டத்தை மதிப்பதில்லை. தண்ணீர் இருந்தும் தரவில்லை. இதையடுத்து வழக்கு தொடருங்கள் என்று நீண்ட நாட்கள் வலியுறுத்திய பிறகு தயங்கி, தயங்கி தான் தமிழக அரசு அதை செய்தது.

சுந்தர விமலநாதன்

இதேபோல் தண்ணீர் தராததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கும் தனியாக வழக்கு தொடர வேண்டும். அதை செய்யாமல் தமிழக அரசு இருப்பது நல்லதல்ல. இதற்கிடையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 5.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வோம் என்று தஞ்சாவூரில் அறிவித்தார். ஆனால் 3 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்திருக்கிறது. மீதம் இருக்கும் 2.50 லட்சம் ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாக இருக்கிறது.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்ததும் முதலில் திருவையாறு பகுதிக்கு தான் வரும். அங்கேயே பெரும்பாலான வயல்வெளிகளில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துவிட்டது. நடுமடை, கடைமடையில் நிலைமை இன்னும் மோசம். செப்., முதல்வாரத்தில் கிட்டத்தட்ட 11 லட்சம் ஏக்கரில் சம்பா பயிரடப்பட வேண்டும். தண்ணீர் இல்லாததால் இதில் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

13 லட்சம் ஏக்கருக்கு மிகப்பெரிய சவால். இதில் பல லட்சம் விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என சொல்வதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டுகிறது. ஆனால் நமது உரிமையை பெற முடியவில்லை என்பதற்காக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்டாமல் இருப்பது நிர்வாக தோல்வி.

அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் விவசாயிகளை அழைத்து அரசு பேச வேண்டும். ஆனால் அந்த மனநிலை நீர்வளத்துறை அமைச்சருக்கு இல்லை. அவரிடம் சொல்வதற்கு முதல்வரும் தயக்கம் காட்டி வருகிறார். இந்த தயக்கம் விவசாயிகளின் உரிமைகளுக்கு எதிராக மாறுகிறது. இவ்வாறு மவுனமாக இருப்பது எங்களுக்கு பல்வேறு சந்தேகத்தை கொடுக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் பலரும் கர்நாடகாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே அதில் ஆபத்து வந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். எனவே தான் அச்சப்படுகிறார்கள்.

தமிழக அரசு

காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கர்நாடகாவில் ஒரு நிலைப்பாட்டையும், தமிழகத்தில் ஒரு நிலைப்பாட்டையும் வைத்துக்குக்கொண்டு இரட்டைவேடம் போடுகிறார்கள். காவிரி ஆணையம் நடுநிலையாக இல்லை. 20 தினங்களுக்கு முன்பு ஆணையத்தின் கூட்டம் நடந்தது. அதில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதில் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக அதிகாரிகளை மிரட்டுவதாக சந்தீப் சக்சேனா பேட்டி கொடுக்கிறார்.

இதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஆணையத்தில் தலைவர் பதவியில் நீடிப்பது அழகல்ல. எனவே அவரை அப்புறப்படுத்த வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் கேமவதி, ஹாரங்கி, கபினி ஆகிய மூன்று அணைகளை கட்டினார்கள். அப்போது தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்தது. அதனால் தான் இன்று இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேநிலை இனியும் நீடித்தால் வேடிக்கை பார்த்த தலைமுறை என்ற இழிச்சொல் நமக்கு வரும். அடுத்த தலைமுறை மன்னிக்காது. தமிழக அரசின் போக்கு சரியாக இல்லை" என கொதித்தார்.

ஜெயக்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். "காவிரி விவகாரத்தை பொறுத்தவரை அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து. குறிப்பாக ஒழுங்காற்றுக்குழு, கண்காணிப்புக்குழு ஆகியவற்றை நியமித்து பல்வேறு வெற்றிகளை நாம் பெற்றிருக்கிறோம். அதைபயன்படுத்தி சரியான அழுத்தம் கொடுத்து நமக்குறிய உரிமையை பெறுவதற்கு விடியா தி.மு.க அரசு தவறிவிட்டது. இந்திய கூட்டணியில் தான் கெஜ்ரிவால் இருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவரும் டெல்லி அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தைரியமாக தெரிவித்திருக்கிறார். ஆனால் தமிழக முதல்வர், கர்நாடகவில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு சென்றார். எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கும் சென்றார். அங்கெல்லாம் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. வக்கில்லாத, துப்பில்லாத அரசாக இருக்கிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. விவசாயிகளின் குமுறல் அதிகரித்திருக்கிறது" என்றார் காட்டமாக.

கௌதம சன்னா

பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா. "கர்நாடகாவில் பிரச்னையை பெரிதுபடுத்தி வருவது பாஜக தான். முன்னாள் முதல்வர் பொம்மை, காங்கிரஸ் அரசு கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்கிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு தான் அடுத்த நிலைக்கு காங்கிரஸ் சென்றது. தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சரியான நடவடிக்கைகளை தான் எடுத்து வருகிறார்கள்.

இந்த பிரச்னையை தீர்க்கும் பொறுப்பு மத்திய பாஜக அரசிடம் தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் தனது அரசியல் சுயலாபத்துக்காக இரண்டு மாநில மக்களையும் மோத விட்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இங்கிருக்கும் பா.ஜ.க-வினரும் சுமூகமாக தீர்க்க வேண்டும் என ஏன் கூறவில்லை. அதைவிட்டுவிட்டு அரசியல் செய்வதை சனாதன கட்சிகள் தொடர்ந்து செய்வது எரிச்சலாக இருக்கிறது" என கடுப்பானார்.

நாராயணன் திருப்பதி

பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு முழு நாடகம். காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொழுதும், 'காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவு தான் இறுதியானது' என மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறது. அந்த ஆணையமும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து தான் வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்டது.

கூட்டணியில் இருப்பதால் தமிழக அரசு கண்டிக்கவில்லை. மேலும் இந்த பிரச்னையை தள்ளிபோடுவதற்காக உச்ச நீதிமன்றம் சென்றது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கூட்டணியில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது. இதன் மூலம் திமுகவின் தமிழகத்திற்கான துரோகம் வெளிப்பட்டிருக்கிறது. அரசியல் காட்சிகளை விடுங்கள். பாஜக ஆட்சியில் இருந்த பொழுது எந்த பிரச்னையும் இல்லை. நாம் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று தான் சொல்கிறோம்" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

குற்றச்சாட்டுக்கள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். "வன்மையாக எப்படி நடக்க வேண்டும்?. படையை திரட்டிக்கொண்டு ராணி மங்கம்மாள் சென்றது போல், போய் அடித்துவிட்டு வரவேண்டும் என்கிறார்களா?. இதற்கு முன்பு எடப்பாடி முதல்வராக இருந்தார். அவர் என்ன வன்மையாக நடந்து கொண்டார். அவர் ஆட்சியில் தான் மேக்கேதாடூ அணை கட்டுவதற்கு ஒப்புதல் கொடுத்தது பாஜக அரசு.

அப்போது எடப்பாடி என்ன செய்து கொண்டிருந்தார். இப்பொழுது தான் தூங்கி விழிக்கிறார்களா?. உரிய தண்ணீரை தர வேண்டும் என முதல்வர் அறிக்கை கொடுத்திருக்கிறார். நீர் வளத்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி, அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க செய்தோம். அவரிடம் காவிரி விவகாரத்தில் எங்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவர்கள் தொடர்ந்து அமைதியாக இருந்ததால் நீதிமன்றத்தை நாடினோம்.

அண்ணாமலை

எதிர்கட்சிகள் என்ன செய்கிறார்கள்?. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என எடப்பாடி உண்ணாவிரதம் இருந்திருக்கிறாரா?; ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறாரா?. எப்போதும் எதிர்கட்சி தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பாஜகவை எதிர்த்து செய்வாரா?. இவர்கள் ஆளும் கட்சியாக இருந்த பொழுது பேசத்தான் முடியும் என்றார்கள். பாஜகவினர் ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு போராட்டம் செய்திருக்கிறார்களா?.

எதுவும் கிடையாது. வீட்டில் சோத்தை தின்றுவிட்டு உட்காந்து இருப்பீர்கள். நாங்கள் தான் உரிமைக்கு சண்டை போட வேண்டும். அனைத்தும் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு அரசியலில் இருக்கிறீர்கள். நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருகிறோம். மென்மையாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது நாங்கள் சண்டை போடுகிறோம். பாஜக ஆட்சியில் எடப்பாடி சண்டை போட்டாரா?. பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடகாவில் இருக்கும் பாஜகவினர் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது எனக்கூறி ரோட்டில் படுத்து உருளுகிறார்கள். இங்கு அண்ணாமலை தூக்கில் தொங்கிவிட்டாரா என்ன?" என கோபப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/politics/farmers-are-dissatisfied-with-dmk-on-the-cauvery-issue-what-dmk-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக